ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தஞ்சை பகுதியின் பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர்




பட்டுக்கோட்டை பகுதி பல புரட்சிகர தலைவர்களை சந்தித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் தந்தை பெரியாரின் தளபதியாகவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் தோழராகவும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு என்ற ஊரைச்சேர்ந்த மிகப்பெரும் செல்வந்தர் தேவாசீர்வாதம் அவர்களின் மகன் டேவிஸ் (B.A.LT, B .O. L) அவர்கள் கிபி 1904 ஆம் ஆண்டு பிறந்தார்.

பட்டுக்கோட்டையில் தொடக்க கல்வியை முடித்து உயர்கல்வியை திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியராக பணிபுரிந்தார். தமிழறிஞர் வேங்கட சாமி நாட்டார் அவர்களின் அன்பை பெற்றவர். தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் புலமைமிக்கவராகவும் விளங்கியவர் அய்யா பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர் அவர்கள். கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், டேவிஸ் ஐயாவிடம் வந்து தமிழ் இலக்கியங்களில் தனக்கு ஏற்படும் பல சந்தேகங்களை கேட்டு செல்வார்.


அய்யா பகுத்தறிவாளர் டேவிஸ், தந்தை பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்ட இவர் அவரின் தளபதியாகவும் விளங்கினார், தமிழர்கள் யாரும் கல்வி கற்றுவிடக்கூடாது என்ற குறிக்கோளுடன் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராடினார், தன் சொந்த ஊரான அணைக்காட்டில் தந்தை பெரியாரின் தலைமையில் சுயமரியாதை மாநாட்டினை வெற்றிக்கரமாக நடத்தினார், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட அக்காலத்திலேயே கல்வியறிவு பெற்ற பெண்ணான திருமதி வேதமணி என்பவரை மணந்து கொண்டார், திருமதி வேதமணி டேவிஸ் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியாக பணிபுரிந்தார் . டேவிஸ் அவர்கள் தான் மட்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் தனது மனைவி மற்றும் மகன் எடிபர்பேங் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1938 ஆம் வருடம். பட்டுக்கோட்டை டேவிஸுக்கும் அவரது மனைவி வேதமணி டேவிஸுக்கும் ஒரு சிறிய ஊடல். அந்நேரத்தில் வேதமணி டேவிஸ் அம்மையார் தனது நாலு வயது மகன் எடி அவர்களை தூக்கிக்கொண்டு தனது தாய் வீடான மதுரை அருகே உள்ள திருப்புவனத்திற்கு சென்றுவிட்டார். ஒரு நாள், ரெண்டு நாள், ஒரு வாரம் ஆகிவிட்டது. மனைவி, மகனை காணாத டேவிஸ் அய்யா திருப்புவனம் செல்கிறார்.

ஆனால் மாமனார் சாமுவேல் போதகர், தன் மகளை அனுப்ப மறுக்கிறார். உடனே பட்டுக்கோட்டை டேவிஸிற்கு தன் இனிய நண்பர் மகான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஞாபகம் வருகிறது. தேவர் அய்யா அவர்கள் டேவிஸின் மாமனார் சாமுவேலை டாடி என்று அன்புடன் ஆங்கிலத்தில் அழைப்பார். கமுதியில் உள்ள அமெரிக்கன் மிஷனரி பள்ளியிலும், பசுமலையில் உள்ள பள்ளியிலும் தேவர் அய்யா அவர்கள் படித்தபோது, சாமுவேல் போதகருடனும், அவரது மகன் லாலி போதகருடனும நெருங்கிய தொடர்பும் பாசமும் வைத்திருந்தார். எனவே டேவிஸ் கூப்பிட்டவுடன் தேவர் அய்யா டேவிஸ் அவர்களுடன் சாமுவேல் போதகர் வீட்டிற்கு சென்று "டாடி...டேவிஸ் அண்ணன் சிறிது தவறு செய்துவிட்டார்...இனிமேல் அப்படி செய்வதில்லை என்று உறுதி அளித்துள்ளார்...எனவே வேதமணி அக்காவையும், எடி மாப்பிள்ளையும் டேவிஸ் அண்ணனுடன் அணைக்காடு அனுப்பிவையுங்கள் என்று சமாதானம் பேச....சாமுவேல் போதகரும் மகளையும், பேரனையும் அனுப்பிவைக்கிறார்...
தமிழகத்தில், இசை விழாக்களில், தமிழை விடுத்து தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்பட்டு வந்ததை எதிர்த்து பட்டுக்கோட்டை டேவிஸ், செம்மங்குடி போன்றவர்கள், தமிழில் பாடமறுத்தபொழுது, உள்புகுந்து தமிழில் பாடவைத்த நிகழ்வுகள் நடந்தன.



திராவிட இயக்கப் பேச்சாளர்கள் அன்று மேடையில் பேசும்போது பிரச்சனைகள் அதிகம். பட்டுக்கோட்டை அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்றால், கூட்டத்தின் பின்னால் ஆசிரியர் அணைக்காடு டேவிஸ் சிங்கம் போல் நின்றுகொண்டிருப்பார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் 180 பாகையில் சுழன்று பேசுவதும்கூடத் தற்பாதுகாப்பு சார்ந்து உருவான பழக்கத்தின் தொடர்ச்சிதான் என்று சொல்வதுண்டு.
நெஞ்சுறுதியின் இலக்கணமாய் வாழ்ந்த கருஞ்சட்டைப்போராளி பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர் ஜூலை 18 , 1979 விண்ணுலகை அடைந்தார்.


தமிழ்த்திரையுலகில் சிறந்த இயக்குநராக போற்றப்படும் உதிரிபூக்கள், முள்ளும் மலரும் இயக்குநர் திரு மகேந்திரன், நடிகர் திரு ராஜேஷ், டேவிஸ் அய்யாஅவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு டேவிஸ் அய்யா அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் அவரைப்பற்றிய வரலாற்றினை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சிலை அமைக்கவும், தமிழக அரசின் சார்பாக மணி மண்டபம் அமைக்கவும் ,தெருக்களின் பெயருக்கு பகுத்தறிவாளர் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இதை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.


பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர் மகன் மற்றும் பேரன் 

Eddy  Firbank 1934 - 2014

திரு. ஜோன்ஸ் எடி வாணாதிராயர்


நன்றி :

திரு. ஜோன்ஸ் எடி வாணாதிராயர்
திரு. பார்த்திபன் பாரி