சனி, 23 பிப்ரவரி, 2019

தஞ்சை மராத்திய மன்னர் ஆவணங்களில் " கள்ளர்கள்":-





தஞ்சையை 17 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் மராத்திய மன்னர்கள். இவர்களது ஆட்சிகாலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கணக்கு வழக்குகள் உட்பட பல சுவையான தகவல்களை "மோடி" ஆவணங்கள் எனும் பெயரில் பாதுகாத்து வந்துள்ளனர்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பழமையான மோடி ஆவணங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

மோடி ஆவணங்களில் கள்ளர் இனத்தவர்கள் பற்றிய குறிப்புகள் கள்ளர்களின் அன்றைய சமூக நிலை மற்றும், வாழ்க்கை முறை, தஞ்சை கள்ளர் பாளையங்கள் பற்றிய பல தகவல்களை தருகிறது. அவற்றை காண்போம்.


 தஞ்சை கள்ளர் பாளையங்கள்:-


கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி " தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளிர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி 1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம். (தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)


இதே கருத்தை வேங்கடசாமி நாட்டாரும் தனது " கள்ளர் சரித்திரம்" நூலில் கூறியுள்ளார். மேலும் தஞ்சையின் 13 பாளையங்களில் 11 பாளையங்கள் கள்ளர் வசம் இருந்ததாக நாட்டார் குறிப்பிட்டுள்ளார். ( கள்ளர் சரித்திரம்: வேங்கட. நாட்டார் பக் :65)

தஞ்சையில் இருந்த 13 பாளையங்களில் 10 பாளையங்கள் இன்றும் கள்ளர் ஜமீன்களாகவே உள்ளனர். இன்று கள்ளர் வசமுள்ள ஜமீன்கள் :-கண்டர்கோட்டை , பாலையவனம், பாப்பா நாடு, கல்லாக்கோட்டை, சிலத்தூர், பாதரங்கோட்டை, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், புனல்வாசல் ஏனைய 3 பாளையங்களில் முக்குலத்தோரின் மற்ற பிரிவினர் வசமே உள்ளது.



கள்ளர்குல அறந்தாங்கி தொண்டைமான் பாளையம் :-



கிபி 1827ல் எழுதப்பட்ட மோடி ஆவண குறிப்பில் " தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சில ஊர்களுக்கு மெய்க்காவல் ஆயிருந்த தொண்டைமான் பாளையப்பட்டு காரருக்கு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட பாளையம் அறந்தாங்கி தொண்டைமானின் பாலையவனம் ஆகும். ( தஞ்சை மராத்தியர் மோடி ஆவணம் Vol 1 page 23)




கிபி 1739 மற்றும் 1740 ஆம் ஆண்டுகளில் அறந்தாங்கி தொண்டைமான்களால் வெளியிடப்பட்ட பெருவயல் செப்பேடு 1 மற்றும் 2 ல், வணங்காமுடி தொண்டைமான் மற்றும் முத்து தொண்டைமான் ,ஆகியோர் தஞ்சை நகராதிபதி மகாராஜா சாயிபு என தஞ்சை மன்னர் பிராதப சிம்ம ராஜாவை குறித்துள்ளனர். எனவே (கிபி 1739-1740) காலக்கட்டத்திலேயே அறந்தாங்கி தொண்டைமான்கள் தஞ்சை மராத்தியர் மேலாண்மையை ஏற்று விட்டனர் என விளங்குகிறது.





கிபி 1816 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குப்பட்டிணம் செப்பேட்டில், ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானும், பெரியதம்பி காலிங்கராச பண்டாரத்தாரும் அளித்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னருக்கான எந்த அடைமொழிகளும் இந்த செப்பேட்டில் காணப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் அறந்தாங்கி தொண்டைமான்கள் சாதாரண பாளையக்காரராக, மெய்க்காவல் பொறுப்புகளை சில ஊர்களுக்கு ஏற்கும் அளவுக்கு வலுவிழந்து இருந்தனர். (தொண்டைமான் செப்பேடுகள், புலவர் இராசு) .



இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான், பாலையவன ஜமீன் குடும்பத்தார் என்றும் முற்காலத்தில் தொண்டைமான் பட்டத்தை பயன்படுத்திய இந்த ஜமீன்தார்கள் தற்போது வணங்காமுடி பண்டாரத்தார் எனும் பட்டத்தை மட்டும் பயன்படுத்துவதாக (List of inscriptions and sketches of dynasties of southern india, robert sewell :1884) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





வணங்காமுடி எனும் பட்டத்தை அறந்தாங்கி தொண்டைமான்கள் பெற்ற விதம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் தசரா விழா காலத்தில் தஞ்சை மன்னரை அனைத்து குறுநில தலைவர்களும் நேரில் கண்டு வணங்கி வரும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால் அறந்தாங்கி தொண்டைமான் தஞ்சை மன்னரை சந்திக்க தான் செல்லாமல் தன்னுடைய பிரதிநிதியை அனுப்பி வைத்ததால், மன்னருக்கு தலைவணங்காதவர் எனும் குறிக்கும் விதமாக வணங்காமுடி என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வணங்காமுடி எனும் பட்டம் அறந்தாங்கி தொண்டைமான்களால் கிபி 1600 களில் இருந்தே பயன்படுத்தப்படுவதை அவர்களின் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இன்றும் பாலையவன ஜமீன்களால் வணங்காமுடி பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.




கல்வெட்டு எண் 233 of 1930, கிபி 1482 ல் ஏகப்பெருமாள் தொண்டைமான் காலத்தில், பொதுமக்கள் தங்களுக்கு அநீதி ஏற்பட்டால் கள்ளப்பற்றில் முறையிட்டு நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நீதி பரிபாலனம் செய்யும் இடமாக இருந்துள்ளது. கல்வெட்டு எண் 341 of 1925 , பட்டுக்கோட்டை சீர்மையில் கள்ளப்பற்று என அறந்தாங்கியை கிபி 1684 ல் குறித்துள்ளது.





அறந்தாங்கி கள்ளர்களின் ஆளுமையில் இருந்துள்ளதை இந்த கல்வெட்டு விளக்குகிறது. . ஆவுடையார்கோயிலில் உள்ள ஆவுடைநாதர் கோயிலில் 9 ஆம் மண்டகப்படிதாரர்கள் பாலையவனம் ஜமீன்தார்கள் என்பது கூடுதல் தகவல் பாளையப்பட்டுகள் அனைத்தும் கள்ளர்கள் வசம் இருந்தது என மோடி ஆவணங்கள் குறிப்பிட்டதை கண்டோம்.

மகாதேவ பட்டணத்தைக் கள்ளர்கள் கைப்பற்றினர் - 1728


சரபோஜி ராஜா காலத்தில் ராஜ மன்னார் குடி பக்கத்தில் ஒரு பெரிய நகரை உண்டாக்கி அதற்கு மகாதேவபட்டணம் என்று பேர் வைத்து அங்குத் துக்கோஜி யிருந்தமை குடும்பத்தில் மனவேறுபாடு தோன்றியமையால் துக்கோஜி மகாதேவ பட்டணத்துக்குச் சென்றார் என்று போ. வ. ச. கூறும் (பக்கம். 82-83).  துக்கோஜி அவரது சகோதரர் சரபோஜியின் மறைவுக்குப்பின் 1728 இல் ஆட்சிக்கு வந்து, 1736 வரை தஞ்சாவூரை ஆண்டார். துக்கோஜி அரசரானதும் மகாதேவ பட்டணத்தைக் கள்ளர்கள் கைக் கொண்டதால் துக்கோஜி தன் மாப்பிள்ளையாகிய சுல்தான்ஜி ஜகதாப் என்பவ ரைக் கில்லேதாராக அனுப்பியமை (திருமுடி. பக். 290). கில்லேதார் - கோட்டையின் முழுப்பொறுப்பு அதிகாரி.




 நம்ராம்பட்டி கள்ளர்கள் (1799):-





கிபி 1799 ல் கள்ளர் பாளையப்பட்டை சேர்ந்த நம்ராபட்டி எனும் ஊரில் யேகரமூர்த்தி என்பவரின் குதிரை வயலில் மேய்ந்ததால் கள்ளர்கள் குதிரையின் காதையும், வாளையும் அறுத்துவிட்டார்களாம். அதற்கு கள்ளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யேகமூர்த்தி என்பவர் மராத்திய மன்னரின் பிரிதிநிதியாக இருக்கலாம்.



மழைவேண்டி கள்ளர்களின் பூஜை ( கிபி 1776):-




கிபி 1776 ல் கள்ளப்பற்றில், மழை வேண்டி , வருண ஜெபம் , ருத்திராபிஷேகம், ஆகியவை 45 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செய்ததற்கான செலவு கணக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் கள்ளர்களிடம் இறை நம்பிக்கை மிகுந்து வேத மந்திரங்களில் நம்பிக்கையுடையவர்களாக இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.



வெங்கடாசல சிங்கப்புலியார்(1787):-




கிபி 1787 ல் வெங்கடாசல சிங்கப்புலியார் தனக்கு பாளையப்பட்டு ஏற்படுத்தப்பட்டதை பற்றி குறிக்கப்பட்டுள்ளது. சிங்கப்புலி எனும் பட்டம் கல்லாக்கோட்டை மற்றும் பாதரங்கோட்டை ஜமீன்களால் உபயோகிக்கப்படுகிறது.



கள்ளப்பற்று கல்லாக்கோட்டை பாளையம் :-



கல்லாக்கோட்டை பாளையம் கள்ளப்பற்றான , கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜய ரகுநாத முத்து விஜய சிங்கப்புலியார் காலத்தில் சிவன் ராத்திரியை முன்னிட்டு களச்சிக்காய் எனும் பருப்பு வகை நான்கு படி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சமஸ்தானத்திற்கு அளித்து இருக்கலாம். தஞ்சை சமஸ்தானத்திற்கும், கல்லாக்கோட்டை ஜமீனுக்கும் சமூகமான உறவு நிலவியுள்ளது.



தொண்டைமானுக்கு நாய்களை பரிசளித்தல் ( 1791) :-






கிபி 1791 ல் தொண்டைமானுடைய மனிதர் வந்திருந்ததாகவும் அவருக்கும் நாய்களை அளித்ததாகவும் தஞ்சை மன்னர் மோடி குறிப்பு கூறுகிறது. இது புதுக்கோட்டை - தஞ்சை மன்னர்களுக்கு இடையே சுமூக உறவு நிலவிய காலமாக இருக்கலாம்.



தஞ்சை மன்னரை சந்தித்த கல்லாக்கோட்டை மன்னர் (1846) :-





கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜயரங்கநாத சிங்கபுலியார் அவர்களுடைய பிள்ளையுடன் தஞ்சை மன்னர் இரண்டாம் சிவாஜியை சந்தித்த போது ரூ 11 பணம் அன்பளிப்பாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும், கல்லாக்கோட்டை பாளையத்திற்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வந்துள்ளது.


குத்தகைக்கு விடப்பட்ட பாளையப்பட்டு நிலங்கள் ( 1850) :-




கிபி 1850 ல் குத்தகை விடப்பட்ட நிலங்கள் சமந்தமுள்ள பாளையப்பட்டுகள் குறிக்கப்பட்டுள்ளது. அவையாவன:- அத்தவெட்டி, சேந்தங்குடி, கோனூர் , சிலட்டூர், கல்லாக்கோட்டை, புனல்வாசல், பாப்பாநாடு, நெடுவாசல், மதுகூர், கண்டர்க்கோட்டை ஆகியன. இந்த பாளையம் சமந்தமுள்ள கணக்காய்வு குறிப்புகள் தரப்பட்டுள்ளது.



கல்லாக்கோட்டை/ கண்டர்க்கோட்டை( 1832) :-




கிபி 1832ல் கல்லாக்கோட்டை பாளையத்திற்கும், கண்டர்கோட்டை பாளையத்திற்கும் ஒரு விசயம் தொடர்பாக விவாதம்( வழக்கு) இந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதம் தொடர்பாக தஞ்சை மன்னரை நாடியிருக்கலாம்.



கள்ளர் சீமை சிலட்டூர்/ நெடுவாசல் ( 1788):-




தஞ்சை மன்னர் அமரசிங்கு காலத்தல் கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம் ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட குறிப்பும் உள்ளது. நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையங்கள் இங்கு கள்ளர் சீமையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.



நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ( கிபி 1861):-





நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் நிலம் தொடர்பாக அளித்த சாசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மிராசுதாரர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளனர். இன்றும் நாஞ்சிக்கோட்டையில் மண்ணையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழ்கின்றனர். இந்து எதிர்ப்புப் போராளி, முள்ளிவாயக்கால் முற்றம் அமைக்கப் பாடுபட்ட நடராஜன் மண்ணையார் நாஞ்சிக்கோட்டை அருகில் உள்ள விளார் கிராமத்தை சேர்ந்தவராவார்.



கிளாக்குடையார்கள் (1831) :-





நாராயணன் கிளாக்குடையார் மற்றும் அவரது மகன் கிருஷ்ண கிளாக்குடையார் ஆகியோர் பிறரிடம் இருந்து மனைகளை வாங்கியது பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. கிளாக்குடையார்களொ பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் தஞ்சையில் வாழ்கின்றனர். புகழ்ப்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் பட்டம் கொண்டவராவார்.



கள்ளப்பற்று கண்டர்கோட்டை பாளையம் ( கிபி 1798) :-






கிபி 1798 ல் கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில் தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும் ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன் இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும் முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  



மோடி ஆவணங்களின் மூலம் நாம் அறியும் முக்கிய தகவல்கள், தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைக்கும்போது அவர்களுக்கு எதிராக இருந்தவர்கள் வாள் வீச்சு வீரர்களான கள்ளர்கள் மட்டுமே. கள்ளர்களை சமாதானப்படுத்தவே, பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையின் பாளையங்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் கள்ளர் பற்று என்றே குறிக்கப்பட்டுள்ளது மூலம் கள்ளர்கள் அப்பகுதியில் மிகுந்து ஆதிக்கத்தோடு 13 பாளையங்களை உருவாக்கி வாழந்துள்ளனர் என்பது விளங்கும்.  சோழ பேரரசின் வாரிசுகள் அல்லாமல் வேறு யாரால் தஞ்சையில் ஆதிக்கம் செலுத்த இயலும்.

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்