செவ்வாய், 2 மே, 2023

கள்ளர் அழகர் கோயில் சோழ "நாட்டாழ்வான்" (நாட்டார்)



மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!

பெரு வேந்தர் காலங்களில் ஒற்றர்கள் மலைகளிலும், மலை சார்ந்த அடிவாரங்களிலும் தங்கியிருந்து பகைவர்களின் நடமாட்டங்களை ஆய்ந்தறிந்து மன்னர்களுக்கு தகவல் சொல்வதற்காக நாடு சார்ந்த ஊர்களை தவிர்த்து பிற மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்தனர். இவர்கள் பொதுவாக தேவர், அம்பலம், சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். சோழ வேந்தர்களுக்கு பாண்டியரும், சேரனுமே பகையாளியாக இருந்த  படியால்  மதுரை, சிவகங்கை, உசிலை, குடகுமலை, அழகர்மலை போன்ற மலை சார்ந்த இடங்களில் தான் ஒற்றர்கள் தங்கியிருந்தனர்.  சோழ, பாண்டிய வேந்தர்களின் வழித்தோன்றல்களே இங்குள்ள கள்ளர்கள். 

சோழர் வீழ்ச்சிக்கு பின்  பாண்டிய அரசர்களால் தொடந்து ஆதரிக்கப்பட்ட  இங்குள்ள கள்ளர்கள், பின்னாளைய இஸ்லாமிய, நாயக்கர் ஆட்சியாளர்களால், அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தொடர்ந்து தடுக்கப்பட்டும் வாழத்தலைப்பட்டனர்.

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளர் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.

திப்பு சுல்தான் திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன. இங்கு இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து அழகர் மலையில்அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார். இதற்கு கள்ளழகர் பூண்டு வரும் கள்ளர்களின் ஆடையாபரணங்களோடு "கள்ளர் கொண்டை", கொண்டையில் குத்தீட்டி, "கையில் வலைதடி" (பூமராங்), "இடுப்பில் ஜமதாடு" (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர் குதிரையேறி வரும் அழகே சாட்சியாக இன்றும் உள்ளது. அழகர் கோயிலில் என்றைக்குமே ஆலயத்தின் முதல் மரியாதையை அப்பகுதியில் பின்னாளைய வெள்ளியங்குன்றம் ஜமீனால் கூட சுயமாக அனுபவிக்க இயலவில்லை. அவர்கள் அதை மேலூர் கள்ளர்களிடம் பங்கு போட்டே செய்ய வேண்டி வந்தது.