புதன், 15 மார்ச், 2023

குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர்


குடவாயில் பாலசுப்ரமணியன் (பிறப்பு: செப்டம்பர் 22, 1948) தமிழக கல்வெட்டு ஆய்வாளர், கலைவரலாற்றாசிரியர். தஞ்சாவூர் மாவட்டக் கல்வெட்டுகள் மற்றும் கோவில்கள் பற்றி விரிவான ஆய்வு செய்தவர். சோழர் வரலாற்றை கலை மற்றும் இலக்கியச் சான்றுகளினூடாக விரிவாக்கம் செய்தவராக அறியப்படுகிறார்.

குடவாயில் பாலசுப்ரமணியன் செப்டம்பர் 22, 1948 அன்று திருவாரூர் மாவட்டம் குடவாயில் வட்டம் பெருமங்கலம் கிராமத்தில் கள்ளர் மரபில் சோழகர் பிரிவில் முனுசாமி சோழகர், அபயாம்பாள் தம்பதியருக்குப் பிறந்தார். சிலப்பதிகாரத்தில் குடவாயில்கோட்டம் எனப்படுவது இந்த ஊராக இருக்கலாம் என்று பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார். அங்கே சோழர்களின் தொன்மையான நாணயநிலையம் இருந்திருக்கலாம். அங்கிருந்து சில நாணயங்களை இளமையில் அவர் கண்டடைந்தார். அவற்றில் ஒன்றில் உரக என்று இருந்தது. சோழர்களின் இலங்கைவெற்றி குறித்த நாணயம் அது. அந்த நாணயங்களில் இருந்து வரலாற்றாய்வின்மேல் ஈடுபாடு கொண்டார்.

அண்ணன் சுவாமிநாதன், தம்பி சரவண பவானந்தம் என்ற ஆனந்த். குடவாயில் பாலசுப்ரமணியனின் தந்தை முனுசாமி சோழகர் சைதாம்பாள் என்பவர் மணந்து, அவர் இறந்த பின் அபயாம்பாளை மறுமணம் செய்து கொண்டார். முனுசாமி, சைதாம்பாள் தம்பதியருக்கு கந்தசாமி, சண்முகசுந்தரம் இரண்டு பிள்ளைகள். குடவாயில் பாலசுப்ரமணியனின் மூத்த சகோதரர் கந்தசாமி கல்லூரியில் படிக்கும் காலத்தில் திராவிட கொள்கை மீது தீவிரம் கொண்டு பாலசுப்ரமணியனின் பெயரை மதியழகன் என மாற்றினார். அது ஒரு செல்லப்பெயர் மட்டுமே என்று குடவாயில் பாலசுப்ரமணியம் தெரிவிக்கிறார்..

பாலசுப்ரமணியன் தன் ஆரம்பக் கல்வியை குடவாயில் கீழவீதியில் உள்ள நேஷனல் தொடக்கப் பள்ளியில் பயின்றார். பின் ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வரை குடவாசலுக்கு அருகில் உள்ள அகர ஓகையில் பயின்றார். 1964 - 1965 -ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யு.சி) தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றார் (பி.எஸ்.சி).

குடவாயில் பாலசுப்ரமணியன் இளங்கலைப் பட்டம் பெற்ற பின் சில ஆண்டுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் பொருட்கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் (வரலாறு) பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார்.

குடவாயில் பாலசுப்ரமணியன் நீதிபதி து. கதிர்வேலின் மகள் கண்ணம்மாவை 1979 ஆம் ஆண்டு மணந்தார். திருமதி. கண்ணம்மா இளங்கலை தாவரவியல் பயின்றவர். பாலசுப்ரமணியன், கண்ணம்மா தம்பதியருக்கு ஸ்ரீவித்யா, அஞ்சனா என இரண்டு மகள்கள்.

1979-ஆம் ஆண்டு குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் காப்பாட்சியராகவும், நுண்படத்துறை வல்லுநராகவும் பணியில் சேர்ந்தார். பின் சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பதவி உயர்வு பெற்று 2006-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இரா. நாகசாமி குடவாயில் பாலசுப்ரமணியனின் தொல்லியல், கலையியல் ஆய்வுகளுக்கு குருவாக விளங்கினார். நாகசாமியின் தூண்டுதலால் பாலசுப்ரமணியன் வரலாற்று ஆய்விலும், கோயிற்கலை ஆய்விலும் ஈடுபாடு கொண்டார்.

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்’ மே 24, 1970 அன்று தினமணியில் வெளிவந்தது. இது இதழில் வெளியான குடவாயில் பாலசுப்ரமணியனின் முதல் ஆய்வுக் கட்டுரை.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது குறுகிய கால ஆய்வுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவ்வாய்வுத் திட்டத்தின் கீழ் ’சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும், ஓவியங்களும்’ என்ற தலைப்பில் ஆய்வுப் பணிகளை குடவாயில் பாலசுப்ரமணியன் மேற்கொண்டார். சோழ மண்டலத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை ஆராய்ந்து ஒளிப்படங்களுடன் ஆய்வேட்டை சமர்பித்தார். இது சிறந்த ஆய்வாக தேர்வு செய்யப்பட்டு 1987-ஆம் ஆண்டு நூல் வடிவம் கண்டது.





மத்திய அரசின் நிதியுடன் சரஸ்வதி மகால் நூலகம் சார்பில் தஞ்சை நாயக்கர்கள் வரலாறு ஆய்வை குடவாயில் பாலசுப்ரமணியன் மேற்கொண்டார். தஞ்சை நாயக்கர் கால புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றுடன் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளை ஆராய்ந்து பொ.யு. 1535 முதல் 1675-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட வரலாற்று தரவுகளை சேகரித்தார். 1999-ஆம் ஆண்டு இவ்வாய்வு 'தஞ்சை நாயக்கர் வரலாறு’ என்னும் நூலாக வெளிவந்தது.

லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகமும், டில்லி நேரு டிரஸ்ட் நிறுவனமும் சேர்ந்த நடத்திய ஆய்வுத் திட்டத்தின் கீழ் தமிழக கோபுரக் கலையைக் குறித்து ஆராய்ந்து ஆங்கிலத்தில் ஆய்வேட்டை சமர்பித்தார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பாக ’தமிழ் இலக்கியமும், தமிழகத்துக் கலைப்படைப்புகளும்’ என்ற தலைப்பில் பாலசுப்ரமணியன் செய்து நானூறு பக்க ஆய்வு 2012-ஆம் ஆண்டு நூலாக்கப்பட்டது.

’சங்கப் பலகையும் பொய்யடிமையில்லா புலவரும்’ என்ற தலைப்பின் கீழ் மதுரைத் தமிழ் சங்கம் பற்றியும் அங்கு இருந்த தமிழ் சங்கப் பலகைகள் பற்றியும் ஆராய்ந்து அக்காலகட்டம் பற்றியும் சோழர் காலத்தில் கிடைத்த சிற்பக் காட்சியையும் வெளியிட்டார்.

குடவாயில் பாலசுப்ரமணியன் 'நந்திபுரத்து ஆயிரத்தளி' என்னும் நகர் பற்றிய ஆய்வுக்காகவே அறியப்பட்டார். பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் சோழர்நிலத்தில் உருவாக்கிய தலைநகரம் நந்திபுரத்து ஆயிரத்தளி. அவன் அங்கே ஆயிரம் சிவலிங்கங்களை நிறுவினான். முற்கால ஆய்வாளர்கள் இந்த நந்திபுரம் என்பது பழையாறையை அடுத்த நாதன்கோயில் என்னும் இடம் என்று முடிவுசெய்திருந்தனர். தஞ்சையில் வீரசிங்கம்பேட்டையில் ஒரு தோட்டத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் கிடைப்பதை அறிந்து அங்கே சென்று அகழ்வு செய்த பாலசுப்ரமணியன் அந்த இடமே நந்திபுரம் என்றும், பின்னர் மாலிக் காபூர் காலகட்டத்தில் அது அழிக்கப்பட்டு ஏராளமான சிவலிங்கங்கள் அகற்றப்பட்டன என்றும் கண்டடைந்தார். ஶ்ரீவில்லிபுத்தூரில் கிடைத்த சுந்தரபாண்டியன் கல்வெட்டைக் கொண்டு அந்த ஊகத்தை உறுதி செய்தார். அது அவருடைய முதற்கட்ட ஆய்வுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய இரண்டு நூல்கள் சோழர் வரலாற்றை ஆலயங்களினூடாக ஆராய்வதில் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன.

தாராசுரம் ஐராவதீசுரர் திருக்கோவில். தாராசுரம் கோயிலை முழுவதுமாக ஆய்வு செய்து பாலசுப்ரமணியன் எழுதிய 600 பக்க ஆய்வு நூல் அன்னம் பதிப்பக வெளியீடாக 2013 -ஆம் ஆண்டு வந்தது. (பார்க்க: தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராஜராஜேச்சுரம்))

தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம்.1994-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டிற்காக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய 'தஞ்சாவூர்' என்னும் நூல் பெரிய கோவிலின் 1001-ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்தது. இந்த ஆய்வு 1995-ஆம் ஆண்டு அகரம் பதிப்பகத்தால் நூல் வடிவம் கண்டது. இதன் விரிவாக்கமாக குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய இராஜராஜேச்சரம் என்னும் ஆய்வுநூல் 2010-ல் வெளிவந்தது. இராஜராஜேச்சரம் தஞ்சைப் பேராலயத்தை மூன்று கோணங்களில் ஆராயும் நூல். சோழமன்னன் ராஜராஜனின் வரலாற்றின் சின்னமாகவும், தமிழ்வரலாற்றின் மாபெரும் ஆவணத்தொகுதியாகவும் இந்நூல் அவ்வாலயத்தை ஆராய்கிறது. (பார்க்க: தஞ்சை பெரியகோயில்- இராஜராஜேச்சரம் )

குடவாயில் பாலசுப்ரமணியனின் இரண்டு ஆய்வு நூல்கள் தமிழக வரலாற்றை கலை வழியாக தொகுத்துக்கொள்வதில் முன்னுதாரணங்கள் எனக் கருதப்படுகின்றன

தமிழகக்கோபுரக்கலை மரபு (1993) கோபுரம் என்னும் கலை தோன்றி, தமிழகத்தில் அதன் உச்சத்தை அடைந்ததை விவரிக்கின்றது. கோபுரம் என்னும் அமைப்பின் வெவ்வேறு கூறுகளையும் பரிணாமத்தையும் விளக்குகிறது. (பார்க்க: கோபுரக்கலை மரபு)

தேவார மாண்பும் ஓதுவார் மரபும் ( 2021) (அன்னம், தஞ்சாவூர்).பண்ணிசை மரபு தொல்பழங்காலத்தில் இருந்து ஓதுவார் மரபு வழியாக நீடித்து தேவார திருவாசகங்கள் வழியாக நிலைகொண்டதை விளக்குகிறது. (பார்க்க: தேவார மாண்பும் ஓதுவார் மரபும்)

தஞ்சாவூர் சோழர்களின் காலம் தமிழ்வரலாற்றின் பொற்காலம் என அறியப்படுகிறது. சோழர்காலகட்டத்து மாபெரும் பாசனப்பணிகள், நிதிநிர்வாக அமைப்பு, ஆலயங்கள், பண்ணிசைவளர்ச்சி, வெண்கலச் சிற்பக்கலை வளர்ச்சி, இலக்கிய மறுமலர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறு மதிப்பிடப்படுகிறது. ஆகவே தமிழ் வரலாற்றாய்வாளர்களுக்கு சோழர்கள் மேல் கூர்ந்த ஈடுபாடு தொடர்ந்து இருந்து வருகிறது.

சோழர்கால வரலாறு மூன்று காலகட்டங்களாக எழுதப்பட்டது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் ஆகியோர் முதற்கட்ட வரலாற்றாசிரியர்கள். இது செவ்வியல் வரலாற்றுக் காலகட்டம். அவர்கள் கல்வெட்டுகள், செப்பேடுகள், நூல்சான்றுகளின் அடிப்படையில் சோழர் வரலாற்றைத் தொகுத்து எழுதினர். இரண்டாம் காலகட்டத்தில் பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர் வரலாற்றை அக்கால நிலவுரிமை முறை மற்றும் சமூகக்கட்டமைப்பின் அடிப்படையில் எழுதினர். இது சமூகவியல் வரலாற்றாய்வின் காலகட்டம். மூன்றாவது காலகட்டத்தின் முதன்மை ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன். இது நுண்வரலாற்றாய்வுக் காலகட்டம். ஒட்டுமொத்த வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொண்டு அதை முழுமையாக ஆராய்வது இதன் வழி.

குடவாயில் பாலசுப்ரமணியன் சோழர்காலகட்டத்தின் சிற்ப-கட்டிடக் கலையைத் தன் முதன்மை ஆய்வுப்பொருளாகக் கொள்கிறார். சோழர் காலப் பண்ணிசை வளர்ச்சியையும் முதன்மை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்கிறார். அவற்றின் வழியாக சோழர் வரலாற்றின் புதிய களங்களை நோக்கிச் செல்கிறார். இந்த ஆய்வுமுறையினூடாக சோழர் வரலாற்றில் புதிய பகுதிகளை விளக்கியதே அவருடைய சாதனையாகும்.

தமிழகத்தில் கலைவரலாறு குறிப்பிடும்படி எழுதப்படவில்லை. அது இன்றும் பொது வரலாற்றின் பகுதியாகவே ஆராயப்படுகிறது. சோழர்கால ஆலயங்கள் மீதான மிக விரிவான ஆய்வுகள் வழியாக குடவாயில் பாலசுப்ரமணியன் தமிழகக் கலைவரலாற்றை எழுதுவதற்கான ஒரு முன்வடிவை உருவாக்கியிருக்கிறார். அதையும் அவருடைய பங்களிப்பாகக் கொள்ள முடியும்.


விருதுகள்

குறள்நெறிச் செம்மல், உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர், 2003

திருவருட் செம்மணி, சிறுவாபுரி முருகன் அபிஷேகக்குழு, 2005

திருக்கோயில் ஆய்வுப்பேரொளி, அறுபத்துமூவர் மன்றம், தஞ்சாவூர், 2005

ராஜராஜசோழன் விருது, ராஜராஜன் கல்வி மற்றும் பண்பாட்டு மையம், சென்னை, 2007

கரிகால் சோழன் விருது, தமிழ் அய்யா கல்விக்கழகம், திருவையாறு, 2009

வரலாற்று நாயகர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011

வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத் சாகர் மற்றும் ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையம், சென்னை, 2012

ராஜராஜசோழன் விருது, சதய விழாக்குழு, தஞ்சாவூர், 2012

ஆனந்த குமாரசுவாமி கவின்கலை விருது, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை, 2013

திருக்கோயில் கலைச்செல்வர் விருது, தருமபுரம் ஆதீனம், 2013

ஆய்வுரை வித்தகர், அப்பர் அறக்கட்டளை, 2014

உவேசா தமிழறிஞர் விருது, தமிழ்நாடு அரசு, 2015

சேக்கிழார் தமிழறிஞர் விருது, சேக்கிழார் ஆய்வு மையம், சென்னை, 2015

பொற்றாமரை விருது, சிறந்த ஆய்வாளர், 2015

மா.அரங்கநாதன் அறக்கட்டளை விருது 2022

கோவை கொடீஷியா விருது, 2022


முதன்மை ஆய்வுத்திட்டங்கள்

கும்பகோணம், வரலாற்று ஆய்வுத்திட்டம், Cambridge University, London

கோயில் கோபுரங்கள், Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழக குறுகிய கால ஆய்வுத்திட்டம் (நூலாக வெளியானது)

செம்மொழி இலக்கியங்களில் பல்கலை நோக்கில் ஆய்வு, செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை, 2012.

செம்மொழித் தமிழ் நூல்களில் தொன்மக் கூற்றுக்களும் அவற்றின் கலை வடிவங்களும், செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை,2015–16


நூல்கள்

குடவாயிற்கோட்டம், தொல்லியல், வரலாற்றியல், கல்வெட்டியல் ஆய்வு மையம், சென்னை, 1978

கருணாகரத் தொண்டைமான், தொல்லியல், வரலாற்றியல், கல்வெட்டியல் ஆய்வு மையம், சென்னை, 1979

ஆரூர் ஆழித்தேர், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை, 1989

நந்திபுரம், கலை மற்றும் பண்பாட்டிற்கான இந்திய தேசிய டிரஸ்ட், சென்னை, 1992

திருவாரூர் திருக்கோயில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை, 1988, அகரம் 2012 (தமிழ்ப்பல்கலைக்கழக விருது, 1988)

தமிழகக் கோயிற்கலை மரபு, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1993

தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1995 (தமிழக அரசு விருது)

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987

குடமுழா, அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1997

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1999

தமிழ் மன்னன் கோனேரிராயன், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 2001

கோபுரக்கலை மரபு, கோயிற்களஞ்சியம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 2004

வரலாற்றில் வல்லம், 2003.

ஜெயங்கொண்டநாதர் கோயில், 2004.

கபிலக்கல், பிரபு பதிப்பகம், பட்டுக்கோட்டை, 2004

அரதைப்பெரும்பாழி, 2005.

குடந்தை பெரிய மடம், 2005.

இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, 2010

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, 2013

கலையியல் ரசனைக் கட்டுரைகள், அகரம், தஞ்சாவூர், 2014

கல்வெட்டு கூறும் கோயில் கதைகள், சூரியன் பதிப்பகம், சென்னை, 2016.

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்-தலைநகரம்-திருக்கோயில்), அன்னம், தஞ்சாவூர்

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள், அகரம், தஞ்சாவூர், 2020

கலைமிகு கோயில்களும் கல்வெட்டு சாசனங்களும், அகரம், தஞ்சாவூர், 2020.

தேவார மாண்பும் ஓதுவார் மரபும், அன்னம், தஞ்சாவூர் 2020

தமிழக மரபுச் சுவடுகள், அன்னம், தஞ்சாவூர், 2021

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், அன்னம், தஞ்சாவூர், 2021