வியாழன், 23 செப்டம்பர், 2021

நார்த்தேவன் குடிகாடு கூத்து - இரணிய நாடகம்


தஞ்சாவூர் நார்த்தேவன் குடிகாடு கூத்து ; ஆர்சுத்திப்பட்டு கூத்து : 

கள்ளர் சாதியினர் , ( இரட்டை வேடங்களில் பாத்திரங்கள் தோன்றி நடித்தல் ) தஞ்சைப் பகுதிகள் . 

கள்ளர் சாதியினர் தஞ்சைப் பகுதிகளில் நிகழ்த்தும் கூத்து மட்டும் சடங்குசார் கூத்துக் கலை வடிவமாக இன்று காண முடிகிறது . பிற யாவும் குறிப்பிட்ட சாதியினரால் சடங்கு நிறைவேற்றும் முகத்தான் கூலி பேசித் தொழில்முறைக் கலைஞர்களால் நிகழ்த்தப் படுபவையாக விளங்குகின்றன .

இங்கு கள்ளரின் பட்டம் நார்த்தேவர்



ஆர்சுத்திப்பட்டு, நார்தேவன் குடிகாடு, வடக்கு நத்தம், சாலியமங்கலம் முன்பு பனையக்கோட்டை ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடகங்கள் பிரபலமானவை. இவ்வூர்களில் அமைந்துள்ள நரசிம்மர் வழிபாடு சடங்கியலாக நடைபெறுகிறது. இரவில் மூன்று முதல் நான்கு நாட்கள் இக்கலை நிகழ்ச்சிகள் (நாடகம்) கொண்டாடப்படுகின்றன.

பங்கேற்பாளர்கள்

இந்நாடக நிகழ்ச்சியில் உள்ளுர்க்காரர்கள் மட்டுமே நடிகராகப் பங்கேற்பர். சிலர் வேண்டுதலின் அடிப்படையில் வெளியூர்க்காரர்களும் பங்கேற்பர். அவர்கள் நாடகத்தில் நடிப்பதற்கு வரி கொடுத்துப் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். பிற ஊர்களில் சென்று நாடகம் நடத்தும் வழக்கம் இல்லை. நாடக நடிகர்கள் பெரும்பாலும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலேயே நடிக்கின்றனர். முப்பது நாட்கள் பயிற்சி பெற்ற பின் தான் நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

பயிற்சித் தொடங்கும் நாள்

நரசிம்ம செயந்தி நாளில் வளர்பிறை வாரத்தில் நரசிம்மர் கோவிலில் பயிற்சிப் பள்ளி தொடங்கும். நாடக நடிகர்களாக ஏழு வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவோரின் குரல் வளம், நடிக்கும் திறன் ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கேற்ற பாத்திரம் ஒதுக்கப்படும். அண்மைக்காலம் வரை ஆண்கள் மட்டுமே நடத்தினர். தற்போது 12 வயதிற்குட்பட்ட சிறுமிகள் நடிப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி அளித்தல்

பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாடகம் முழுவதும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பர். இதனை ‘அட்டவணை’ என்று அழைப்பர். இந்த அட்டவணை நாடக வாத்தியாரிடமே இருக்கும். நடிகர்களுக்கு அவரவர் ஏற்கும் பாத்திரங்களின் பகுதிகள் மட்டும் எழுதப்பட்டு நோட்டு கொடுக்கப்படும்.

நாடகம் தொடங்கும் நாள்

நாடகம் தொடங்கும் நாள் மாலையில் நரசிம்மர் கோவிலில் பூசை நடைபெறும். அதற்குப் பின்பு கோவிலிருந்து நரசிம்மர் முகமூடியைக் கூத்து நடைபெறும் இடத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்வர். முகமூடியைச் ‘சிரசு’ என்று அழைப்பர். ஊர்வலத்தின் போது மக்கள் அனைவரும் கற்பூரமேற்றிச் சிரசினை வழிபடுகின்றனர். நாடக மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கு ஒப்பனை அறையில் வைக்கப்பட்டு இருக்கும். அதன் பின் நடிகர்களுக்கு ஒப்பனை செய்யப்படுகிறது.

இரவு பத்து மணிக்கு விநாயகர் பூசையுடன் நாடகம் தொடங்குகிறது. ஒவ்வொரு பாத்திரத்தையும் இரண்டு பேர் ஒரே நேரத்தில் ஏற்று நடிப்பர். இருவருடைய ஒப்பனையும், அசைவுகளும் ஒத்து அமையவேண்டும். இவ்வாறு இரட்டை இரட்டையாகத் தோன்றுவது இந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.

பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள்

இந்நாடகத்தில் ஆர்மோனியம், தபேலா, சால்ரா (ஜால்ரா) போன்ற இசைக்கருவிகள் கொண்டு இசைக்கப்படுகிறது. இந்நாடகத்தில் பாடல்கள் மிகுதியாகக் காணப்படும். பெரும்பாலும் உள்ளூர் மக்களே பார்வையாளர்களாக இருப்பர். அருகிலுள்ள ஊர்மக்களும் சில நேரங்களில் கலந்துக்கொள்வர்.

கடைசி நாள் விழா

நாடகத்தின் இறுதி நாளன்று கதையின் பட்டாபிசேகம் பகுதி நிகழ்த்தப்படுகிறது. இரணியனை நரசிம்மமூர்த்தி ‘சம்காரம்’ (சம்ஹாரம்) (அழிக்கும்) செய்யும் நிகழ்வு நாடகத்தில் மிகவும் முக்கியமான பகுதியாகும். நரசிம்ம வேடம் புனைந்தவரை இருவர் தாங்கிப் பிடித்து இருப்பர். அவருக்குள் இறைவன் இருப்பதாகவும், அருள் வந்துவிட்டது என்றும் இரணியனை வதம் செய்யும் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகிறது. இவை சடங்கியலாகவே நடைபெறுகிறது.

விடையேற்றி

நாடகம் முடிந்தபின் ஒப்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட முகமூடியை ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு செல்வர். இந்நிகழ்ச்சியை ‘விடையேற்றி’ என்றழைப்பர்.

நம்பிக்கைகள்

இரணிய நாடகம் நடத்துவதன் மூலம் அன்றைய தினமே மழைபொழியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். எனவே வறட்சிக் காலங்களில் மழை வேண்டி இக்கூத்து நிகழ்த்தப்படுகிறது.

இக்கூத்து இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாத்திரமும் இரண்டு இரண்டாகத் தோன்றி வருவது இந்தப் பகுதி நாடகத்தின் தனித்தன்மைகளாகும். நார்த்தேவன் குடிக்காடு, ஆர்சுத்திப்பட்டு நாடகக் குழுவினர் வெளிநாடுகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் சென்று நாடகம் நிகழ்த்தி வருகின்றனர். வடக்கு நத்தம் கிராமத்தில் நடைபெறும் நாடகத்தில் இரண்டிரண்டு பாத்திரங்கள் மட்டுமின்றி பெரும்பாலும் இளம் சிறார்களே நடிகராக இருக்கின்றனர்.

முனைவர் சி.சுந்தரேசன்

துறைத்தலைவர்

நாட்டுப்புறவியல் துறை