செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

தஞ்சையார் என்று அழைக்கப்படும் தஞ்சை அ.ராமமூர்த்தி நாட்டார்

மூத்த காங்கிரஸ் தலைவர், தஞ்சாவூர் வழக்கறிஞர் சங்க மூத்த உறுப்பினர், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார்கவுன்சில் முன்னாள் உறுப்பினர். 


பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு நேரடியாக பரிச்சியம் உள்ளவர் தஞ்சை ராமமூர்த்தி அவர்கள் தான். அவருடைய அரசியல் பயணத்தில் மத்திய அமைச்சராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராகவும் வரக்கூடிய வாய்ப்பு இருந்தும் யாரையும் சார்ந்து இல்லாமல் நினைத்ததை மனதிற்கு எது சரி என்று உள்ளதை உள்ளபடி பேசக்கூடிய தலைவர்களில் ஒருவர். 


முன்னாள் பிரதமர் விபி சிங் அவர்களுக்கு நெருங்கிய நேரடி அறிமுகம் உள்ளவர். திரு வி பி சிங் அவர்கள் தஞ்சை வந்த பொழுது தஞ்சையார் வீட்டிற்கு சென்று பெருமை சேர்த்தார். இந்திய அரசியலமைப்பை மணிக்கணக்கில் பேசக் கூடிய வல்லமை கொண்டவர். ஐயா தஞ்சையார் அவர்கள் நல்ல இலக்கியவாதி. 


இந்திய தேசிய காங்கிரசில் அவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.  தமிழ்நாடறிந்த பேச்சாளராக, பிரமுகராக விளங்கினார். அதன் மாநிலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.   தலைவர் காமராசருடன் நெருக்கமாகச் செயல்பட்டார்.  காங்கிரசு 1969இல் பிளவுபட்ட போது இந்திரா காந்தி தலைமை கொண்ட இந்திரா காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாடு செயலாளராக புயுல்வேகப் பரப்புரையில் ஈடுபட்டார். 


இளமையில் கல்லூரி விரிவுரையாளராக இருந்து, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.  ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முன்னணி வழக்கறிஞராகத் திகழ்ந்தார். சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், வழக்குகள் பலவற்றை கட்டணமின்றி தஞ்சையார் நடத்துவார். 


தஞ்சையார் இளமையிலேயே காந்தியம், மார்க்சியம் கற்றவர்.  நிகரமையை (சோசியலிசத்தை) நேசிப்பவர்.  1975இல் இந்திராகாந்தி அம்மையார், நெருக்கடி நிலையைச் செயல்படுத்தி, சனநாயக உரிமைகளைப் பறித்தார்.  அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் மீது காவல்துறை போட்ட வழக்குகளை எல்லாம் கட்டணமின்றி வாதாடி பிணை எடுத்துக் கொடுத்தார்  அதில், தன் கட்சிக் கொள்கைக்கு முரண்பாடாயிற்றே என்று பார்க்காமல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியவர்களுக்கு வழக்கு நடத்தினார். 


தமிழ்த்தேசியத்தை முழுக்கமுழுக்க ஆதரித்தார்.  ஆதரித்து பொதுமேடைகளில் பேசினார். 


தமிழ்த்தேசியம்தான் தமிழ்நாட்டிற்குத் தேவை என்றார். அதற்கு முன்பே அவர் இந்திரா காங்கிரசை விட்டு வெளியேறி, ஐயா நெடுமாறன் தலைமையில் இயங்கிய காமராஜ் காங்கிரசில் அதன் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.  காமராஜ் காங்கிரஸ் என்பது பின்னர் தமிழர் தேசிய இயக்கமாகப் பெயர்மாற்றம் பெற்றது. தமிழ்த் தேசியத்தை முழு ஈடுபாட்டுடன் கடைசிவரை ஆதரித்து வந்தார். 


அவர் புதிய கோணத்தில் விவேகானந்தார் பற்றி நூல் எழுதினார்.   அடுத்து தமிழ வள்ளலார் என்ற நூல் எழுதினார்.  


மூப்பின் பாதிப்புகள் தஞ்சையாருக்கு இருந்தன.  காது கேட்காத நிலை ஏற்பட்டது.  கைத்தடி கொண்டு நடக்க வேண்டிய நிலைமை வந்தது. ஆனால் அரசியல், தத்துவம், இலக்கியம் ஆகியவை குறித்த உரையாடல்களில் பழைய இளமைத் துடிப்போடு பேசுவார்.   நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். 


தஞ்சையாரருடைய துணைவியார் சரசுவதி அம்மா. இவர்களுடைய மகன் சென்னையில் பணியில் இருக்கிறார். மகள்   வெளியூரில் திருமணமாகி வழக்கறிஞராகப் பணியில்  இருக்கிறார்.  


முன்னாள் ஜனாதிபதிகள் மாண்புமிகு வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா  முன்னாள் பிரதமர்கள் மாண்புமிகு இந்திராகாந்தி, விபி சிங், தேவகவுடா, சந்திரசேகர் ஐ கே குஜ்ரால் மற்றும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் மாண்புமிகு காமராஜர்  ஆகியோருடன்  மிக நெருங்கி பழகியவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அனைவராலும் தஞ்சையார் என அன்புடன் அழைக்கப்படும் திரு தஞ்சை அ.ராமமூர்த்தி நாட்டார் அவர்களின் புகழை போற்றுவோம். 


தஞ்சை அ. இராமமூர்த்தி நாட்டார் எம்.ஏ.,பி.எல். அவர்கள் 12.11.2021 அன்று இம் மண்ணை விட்டு விண்ணுலகம் அடைந்தார்.