வியாழன், 23 செப்டம்பர், 2021

வேளுக்குடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். இந்த கோவில் கள்ளர்களின் மாளுசுத்தியார், வாண்டையார் பட்டம் உடைய கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறது.

தொன்மை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று, 11 Dec 2022 கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜையில் நிறைவாக மஹா பூர்ணாஹதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்த கடன்களை தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து ஆலயத்தின் கோபுர விமான கலசம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர விமான கலசத்தின் மீது புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்து வைத்து கோபுர கலசங்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவில் தருமைஆதினம் 27வது குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் அருளைபெற்றனர்.