வெள்ளி, 11 டிசம்பர், 2020

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கள்ளரின் உருவமைப்பு

 




திருவண்ணாமலையில் சாத்தனூர் வேதியப்பன் கோயிலில் பல்வேறு நடுகற்கள் பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. இங்குள்ள நடுகற்களில் ஒன்று பத்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 


இக்கல்வெட்டு வாசகங்கள் பின்வருமாறு:



"கோப்பரகேசரி பர்மருக்கு யாண்டு நான்காபது  வேட்டுவதி அரையர் வாணகோவரையர் ஆள் ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் மேல் கோவலூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுப் பட்டான் மன்றாடி கல்" என குறிப்பிடுகிறது.


கிபி 911 ஆம் ஆண்டு முதலாம் பராந்தகன் ஆட்சி காலத்தில் மேற் கோவலூர் நாட்டில் அளவிப்பாடி எனும் பகுதியில் நடந்த ஆகொள் பூசல் எனும் ஆநிரை கவரும் போரில் ஆனைமங்கலம் எனும் பகுதியை சேர்ந்த கள்ளன் தாழன் என்பவர் ஆநிரைகளை காத்து தன்னுயிரை நீத்து வீர மரணம் அடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. 


இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆனைமங்கலம் எனும் ஊர் இன்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூரின் அரையராக கள்ளன் தாழன் இருந்துள்ளதை அறிய முடிகிறது.


முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நடைபெற்ற ஆகோள் பூசலில் போரிட்டு உயிர் நீத்த கள்ளன் தாழனின் உருவமும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.


பத்தாம் நூற்றாண்டில் கள்ளரின் உருவமைப்பு


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நடுகல் கல்வெட்டு அக்காலத்தில் இருந்த ஒரு கள்ளரின வீரனின் உருவ அமைப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. 


வலது கையில் பிச்சு வாளும்,  இடையில் குறு வாளும்,  இடது கையில் வில்லும் என ஒரே நேரத்தில் மூன்று ஆயுதங்களை கொண்டிருந்ததை இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது.


வலப்பக்க கொண்டை,  நீண்ட காது மடல்கள், சிறுத்த இடை என போர் வீரனுக்குரிய அனைத்து லட்சணங்களையும் இவ்வீரன் கொண்டு இருந்ததை அறிகிறோம்


இவ்வீரனின் தியாகத்தை போற்றி இன்றும் வழிபாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


ஆதாரம்: கல்வெட்டு எண் ARE 230/ 1971-1972


சிற்பத்தின் விளக்கம் அறிய உதவிய திரு. திருச்சி பார்த்தி அவர்களுக்கும் நன்றி.


தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார