புதன், 28 மார்ச், 2018

பனங்குடி புரட்சி



சிவகங்கை மாவட்டம் கள்ளர் நாடான பனங்குடி கிராமத்தில் தியாகி கண்ணுச்சாமி அம்பலத்தின் தலமையில் பனங்குடி புரட்சி நடந்தது.  பனங்குடி கிராமத்தில் 29 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தியாகத்தை மறக்காமல் நினைவுத்துாண் அமைத்து கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

சுதந்திர போராட்டத்தில் பனங்குடியில் ஒவ்வொருவருடைய ரத்தத்திலும் நாட்டுப்பற்று கலந்திருந்தது. ஏற்றத்தாழ்வு நிறைந்த அக்காலத்திலேயே காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கும் சமமரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடிநீர் ஊரணியில் ஓலைப்பெட்டி வைத்து தண்ணீர் எடுத்து வந்தனர். இதனை மாற்றி அவர்களும் பானையில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

சிறிய கிராமமாக இருந்தபோதிலும் 29 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். இதில் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்ட 15 தியாகிகள், இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.,) பணிபுரிந்த 14 வீரர்கள் உள்ளனர். அவர்களது நினைவாக கிராமத்தில் நினைவுத்துாண் வைத்துள்ளனர். அதனை சுற்றிலும் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 1990ல் அப்போதைய கலெக்டர் குத்சியாகாந்தி துவக்கி வைத்துள்ளார். முன்னோர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நினைவுத் துாணுக்கு கிராமமக்கள் தேசிய விழாக்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ராஜூ கூறியதாவது: பனங்குடி மக்கள் 1942ல் ஆகஸ்ட் புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். காந்தியடிகள் கைது செய்யப்பட்டதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆக., 24ல் பனங்குடி ரயில்வே ஸ்டேஷனாக செயல்பட்ட இரண்டு பெட்டிகள் மற்றும் அதில் இருந்த டிக்கெட்கள், ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர். ஆத்திரமடைந்த போலீசார் இருவரது வீடுகளை தீயிட்டு சேதப்படுத்தினர். இன்றும் அந்த சுவடுகளை வீடுகளில் காண முடியும்.

24.8.1942-ம் தேதி பனங்குடி நடராஜபுரம் ரயில் நிலையத்திற்கு தீ வைத்த நிகழ்வுகளை அடுத்து 

கள்ளர் மரபினரான 
தியாகி கண்ணுச்சாமி அம்பலம், 
முத்துச் சாமி வல்லத்தரசு
வளமாவூர் இராமகிருஷ்ணத் தேவர், 
பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் தேவர், 
இரவிசேரி நடராஜன், ஆகியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 28 பேர் மீது வழக்கு பதிந்து ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், 800 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும் அனைவருக்கும் சேர்த்து கூட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. சுந்திரம் அடைந்ததால், அந்த அபராதத்தை வசூலிக்கவில்லை.