திங்கள், 20 பிப்ரவரி, 2023

கலைமாமணி நடிகர் ராஜேஷ் நாட்டார்



ராஜேஷ் நாட்டார், திசம்பர் 20, 1949  ல் கள்ளர் மரபில் மன்னார்குடியில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுவார்ட்ஸ் வில்லியம்ஸ். தந்தை வில்லியம்ஸ் நாட்டார், கல்வித் துறையில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். தாயார் லில்லி கிரேஸ் மூரியர், பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர்.

துணைவியார் ஜோன் சில்வியா வாணாதிராயர். இவர் புகழ்பெற்ற பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர் பேத்தி ஆவார்.

இவர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் பியூசி முடித்துவிட்டு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் டிகிரி படிக்க சென்றார். ஆனால் இவரை அங்கு அவரது டிகிரியை முடிக்க முடியவில்லை. அதன்பின்னர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசியரியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் ஜோன் சில்வியா என்பவருக்கும் 1983ஆம் ஆண்டு திருமணம் ஆனது.இவர்களுக்கு திவ்யா மற்றும் தீபக் என இரண்டு குழந்தைகள் உள்ளது.

இவருடைய மகன் தீபக் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். ராஜேஷின் மனைவி சில்வியா 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.


தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். 

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதன் தமிழாக்கம்:

சின்னத்திரையில் நடிப்பது பற்றி?

சின்னத்திரைக்கு வந்த முதல் நடிகர்களில் நானும் ஒருவன். தாகம், தொலைந்து போனவர்கள் போன்ற தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் சின்னத்திரையில் நடிக்க வித்தியாசமான அளவுகோலை வைப்பதில்லை. இயக்குநர் கேட்பதைத் தருகிறேன். நடிப்பில் அனுபவம் இருந்தால், கேமராவைப் பார்த்து பயமில்லை என்றால் நடிப்பு எளிதாக வரும் என்று நினைக்கிறேன்.

ஒரே நேரத்தில் இரண்டு துறைகளில் இயங்குவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது?

எங்கு இருந்தாலும் நான் ஒவ்வொரு நாளையும் ரசிக்கிறேன். எனக்கு 71 வயதாகிறது. ஆங்கிலத்தில் சொல்லும்போது 71 ஓடுகிறது (running) என்பார்கள். தமிழில் 71 நடக்கிறது என்பார்கள். நான் ஆரோக்கியமான வழியில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வருடங்கள் போனஸ் தான். அதை நான் அமைதியில் கழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் டப்பிங் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது.

நடிகர் முரளிக்காக 'டும் டும் டும்', 'மஜா', 'உள்ளம் கேட்குமே' உள்ளிட்ட படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'பொய் சொல்லப் போறோம்' படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்தேன். எதைச் செய்தாலும் முழு அர்ப்பணிப்போடு செய்கிறேன். எனவே எனக்கு எல்லாவற்றிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது.

உங்கள் எழுத்துக்களைப் பற்றி?

நான் ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். எல்லாம் தமிழில். முரண் சுவை அதில் ஒன்று. அது முரண்களைப் பற்றியது. ஒரு நாளிதழுக்காக அதைத் தொடராக எழுதினேன். மறைந்த தலைவர் இந்திராகாந்தி விஷயத்தில் மக்களின் பாதுகாவலர்களே கொலைகாரர்களாகவும் மாறிய முரண் பற்றி எப்போதும் யோசிப்பேன். எனவே, ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதினேன். உலக சிறப்பான திரைப்படங்கள், அதே போல சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம் புரியாத புதிர் உள்ளிட்ட வேறு சில புத்தகங்களையும் எழுதினேன்.

நீங்கள் நடித்த 150 படங்களில் உங்களுக்குப் பிடித்த மூன்று படங்கள்?

கடினமான கேள்வி. இருந்தாலும் நீங்கள் மூன்று எனச் சொன்னதால் சொல்கிறேன். எந்த கலைஞருக்குமே முதல் முயற்சி தான் சிறந்த முயற்சி. எனவே நான் நாயகனாக நடித்த 'கன்னிப் பருவத்திலே', பின் 'அந்த ஏழு நாட்கள்'. இன்று வரை அந்தப் படத்தின் இறுதிக் காட்சி பேசப்படுகிறது. இயக்குநர், நடிகர் கே பாக்யராஜ் அற்புதமாக எடுத்திருந்தார். அடுத்தது தேர்ந்த இயக்குநர் கே பாலச்சந்தர், 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் என்னிடமிருந்து சிறந்த நடிப்பைப் எடுத்தார். ஆனால் இப்படி ஒவ்வொரு படத்தைப் பற்றியும் என்னால் ஒரு சிறப்பம்சத்தைச் சொல்ல முடியும்.

உங்கள் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

நான் பாக்கியசாலி என்று நான் நினைக்கிறேன். எப்படி என்று விளக்குகிறேன். இப்போது, கரோனா நெருக்கடியால் உலகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் நிறையப் படிப்பேன் என்பதால் நான் கற்ற விஷயங்களை மக்களுடன் பகிரலாம் என்று எனது குடும்பத்தினர் உத்தேசித்தனர். அப்போது, யூடியூபில் நான் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஏற்கனவே பேசி வருவதால் அது கை கொடுத்தது.

சமீபத்தில் 18 தமிழர்கள் கெய்ரோவில் ஒரு கப்பலில் மாட்டிக்கொண்டனர். ஆனால் இப்போது வீடு திரும்பிவிட்டனர். அதில் ஒருவர் வனிதா ரங்கராஜ். எனக்கு அவரைத் தெரியும். மூத்த குடிமக்களுக்காக இரண்டு ஆதரவு இல்லங்களை நடத்துவதோடு கோவையில் சில சமூக நல அமைப்புகளையும் நடத்தி வருகிறார். எனது யூடியூப் பேச்சுகள் பயனுள்ளதாக இருந்ததாகவும், கப்பலில் அவர்களை நல்ல மனநிலையில் வைத்திருந்ததாகவும் கூறினார். எனக்கு இரண்டு காரணங்களுக்காகச் சந்தோஷமாக இருந்தது. ஒன்று, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனர், இரண்டு அவர்களது அழுத்தத்தைக் குறைக்கச் சிறிய அளவு நான் உதவியிருக்கிறேன்.

இன்னொரு பக்கம், நான் 7 வருடம் ஆசிரியராக இருந்தேன். 47 வருடங்கள் நடிகனாக இருக்கிறேன். இப்போது 71 வயதில், நான் மீண்டும் எனது ஆரம்பக் காலத்துக்குச் சென்று விட்டதாகத் தெரிகிறது. நான் மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லித் தருகிறேன் என்று என் நண்பர் ஒரு நாள் எதேச்சையாகச் சொன்னார். அதைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.


சிவாஜி கணேசனுடனான தன்னுடைய அனுபவங்களை நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

"ஒரு பொருள் மனிதனுடைய அன்பை வெளிப்படுத்தும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. நான் ஒரு முறை சிவாஜி கணேசனிடம் "அண்ணே உங்க நினைவாக ஒரு பொருள் கொடுங்கள்" என்றேன். எங்கிட்ட என்ன இருக்கு? இந்தப் பழைய வேட்டிதான் இருக்கு... வேண்டுமென்றால் வாங்கிவிட்டுப் போ என்றார். நான் எம்.ஜி.ஆரிடம் இதே போல் கேட்டு, அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு கருவியைக் கொடுத்தார். அதை சிவாஜி அண்ணனிடம் சொன்னேன். "அவர் உடற்பயிற்சி பண்ணுவார், கொடுத்திருக்கிறார். எங்கிட்ட என்ன இருக்கு?" என்றார். நான் அடுத்து கேட்கவில்லை. ராம் என்ற பேராசிரியர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உடனே "நீங்க தொடர்ந்து கேட்கிறீங்களானு அண்ணன் உங்களை சோதிக்கிறார்... நீங்க விடாமல் கேளுங்கள்" என்றார். "அண்ணே கொடுக்குறேன்னு சொன்னீங்க" என அவரை பார்க்கிற இடங்களில் எல்லாம் கேட்பேன். "நான் எப்போது சொன்னேன்?" என்பார். பின் ஒரு நாள் வீட்டிற்கு அழைத்தார். மறுநாள் வீட்டிற்கு போனேன். 1955ல் வாங்கியது என்று சொல்லி அவருடைய வாட்ச் ஒன்றைக் கொடுத்தார். அதுவொரு நெகிழ்வான தருணம்.







சிவாஜி அண்ணனுக்கு அசாத்தியமான நினைவாற்றல் உண்டு. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிப்பதற்காக 65 பக்கமுள்ள வசனத்தை வெறும் இரண்டு மணிநேரங்களில் மனப்பாடம் செய்துவிட்டார். நம்முடைய நடையிலேயே எல்லாத்தையும் புரிந்து கொள்வார். படிப்பு குறைவாக இருந்தாலும் அவருடைய அனுபவம் மிகவும் அதிகம். என்னுடைய வெற்றி மற்றும் சமூகத்தில் எனக்கு இருக்கும் மரியாதை எல்லாம் சிவாஜி அண்ணனை நான் பின்பற்றியதால் கிடைத்த பரிசு என்றுதான் நினைக்கிறேன். ஏதாவது நாளிதழில் என்னுடைய பேச்சுக்கள் வந்திருந்தால் அடுத்த முறை பார்க்கும் போது அதை நினைவில் வைத்து சொல்லுவார். அதுவெல்லாம் ரொம்ப மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும்.



அவர் உடல்நிலை சரியில்லாத போது வீட்டிற்கு பார்க்கச் சென்றேன். அவர் அறைக்குள் நுழைந்தவுடன் 'அழக் கூடாது' என்று சைகையில் சொன்னார். 'நீயும் உன் பொண்டாட்டி பிள்ளைகளும் நன்றாக இருப்பீங்க' என்றார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. வாழ்வின் விளிம்பு நிலைக்கு வந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்டேன். அவருடைய விருந்தோம்பல் பண்பு அவ்வளவு சிறப்பானதாக இருக்கும். அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது கூட முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு உயரத்தில் இருந்தபோதும் தன்னைத்தேடி ஒருவர் வருகிறார் என்றால் அவரை மதிக்கக்கூடிய சுபாவம் நிறைந்தவர் சிவாஜி கணேசன்.

உலக சினிமா, தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ளவர். அவர் கடவுள் மறுப்பாளராக இருந்து, இப்போது ஜோதிட நம்பிக்கையுள்ளவராகவும் ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையுள்ளவராகவும் மாறி இருக்கிறார். இந்த மாற்றம் அவருக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அவரிடம் கேட்டோம்.

``ஜோதிடத்தை ஏதோ சுயலாபத்தின் அடிப்படையிலோ குருட்டு நம்பிக்கையின் காரணமாகவோ நான் ஏற்கவில்லை. நானே பல முறை என் ஜாதகத்தையும், என் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரது ஜாதகத்தையும் சோதித்துப் பார்த்துக் கேட்டறிந்த பிறகுதான் இதை ஏற்றுக்கொண்டேன்.

இத்தனைக்கும் நான் தந்தை பெரியாரை நன்றாகப் படித்திருக்கிறேன். வெளிநாட்டு அறிஞர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள், தத்துவ மேதைகள், விஞ்ஞானிகள், புரட்சியாளர்களின் வாழ்க்கை சரித்திரங்கள் எனப் பலவற்றையும் நான் வாசித்திருக்கிறேன்.
குறிப்பாக, பெட்ரண்ட் ரஸ்ஸல், இங்கர்சால், ஹெச்.ஜி.வெல்ஸ், ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், நாஸ்டர்டாம்ஸ், டாக்டர் கோவூர் எனப் பலரின் நூல்களை வாசித்திருக்கிறேன். ஆனால், இவர்கள் எல்லோரையும்விட என்னை அதிகம் வியப்புக்கு உள்ளாக்கியது நமது ஜோதிட சாஸ்திரம்தான்.

ஒரு மனிதனின் மூன்று காலங்களையும் ஜோதிடம் படம் பிடித்துக்காட்டி விடுகிறது. தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற விஞ்ஞான சாதனங்களையெல்லாம்விட, ஜோதிட சாஸ்திரம் துல்லியமானதாக இருப்பதுதான் எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கிறது.
அப்போது எனக்கு 11 வயது இருக்கும்.

மதுரையிலுள்ள ஒரு மருத்துவமனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அத்தையைச் சேர்த்திருந்தார்கள். என் அம்மாவும், தாத்தாவும் அவரைப் பார்க்கப் போயிருந்தார்கள். அப்போது நானும் உடன் போயிருந்தேன். அத்தை ``நான் இன்னும் சிலநாள்கள்தான் இருப்பேன்'' என்று கூறினார். அவர் கூறியபடியே சில நாள்களில் இறந்தும் போனார். அவருக்கு வயது 48. அம்மாவும் தாத்தாவும் பேசிக்கொண்டார்கள்.

அத்தை பிறந்தபோதே பக்கத்து ஊரில் இருந்துவந்த ஜோதிடர், குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, ``இந்தக் குழந்தை பிறப்பது ஒரு நாடு. வளர்வது ஒரு நாடு, பிறகு தன் சொந்த ஊருக்கு வந்து தனது 48 வது வயதில் புற்றுநோய் கண்டு இறந்து போகும்''என்றும் சொல்லியிருக்கிறார்.

அதைப்போலவே அத்தை பிறந்தது இங்கே, ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே சிங்கப்பூர் போய்விட்டார். 17-வது வயதில் திருமணம் முடிந்து, பர்மாவின் தலைநகர் ரங்கூன் போய்விட்டார். பிறகு அங்கிருந்து இந்தியா வந்தார். இங்கு வந்து சில வியாபாரங்களில் அவரும் அவரது கணவரும் ஈடுபட்டனர். ஆனால், அவை அவ்வளவு சரியாக வரவில்லை. அந்த நிலையில்தான் புற்றுநோய்கண்டு இறந்து போனார். இந்தச் சம்பவம் என் மனதில் ஜோதிடத்தின் மீது ஒரு ஆச்சர்ய உணர்வை ஏற்படுத்தியது. என்னுடைய இந்த ஆச்சர்ய உணர்வும் இயல்பாகவே உண்மையைக் கண்டறிவதில் எனக்கு இருக்கும் ஆவலும்தான் என்னை இதை நோக்கிப் பயணிக்க வைத்தன.

1968-ல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தேன். என் தாய் மாமா பெரியாரிஸ்ட். அவர்தான் எனக்கு பெரியாரைப் பற்றிக்கூறி, 'பெரியார் வாழ்க்கை வரலாறு' புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவரின் உண்மைத் தன்மை என் மனதின் பல கதவுகளைத் திறந்தது. பெரியாரின் படைப்புகள் முழுவதையும் 4 ஆண்டுகளில் படித்துமுடித்தேன்.
ஒரு நாள், எங்கள் வீட்டுத் திண்ணையில் நான் உட்கார்ந்து இருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது மதிக்கத்தக்க இளைஞன், ``ஜோசியம் பாக்குறீங்களா சுவாமி? எனக் கேட்டான். அவன் தோற்றத்துக்கும் பார்க்கும் வேலைக்கும் தொடர்பற்று இருந்தான்.
`சரி, இன்றைக்கு இந்தப் பையனிடம் கொஞ்சம் விளையாடுவோம்' என்று, `நாலணாதான் தருவேன்' எனச் சொல்லி என் கையை நீட்டினேன்,

`உங்களுடைய 11 வது வயதில் நெருப்பில் கண்டம், 12 வது வயதில் நீரில் கண்டம்' என மிகச் சரியாகச் சொன்னான்.
சாய்ந்து படுத்திருந்தவன் எழுந்து உட்கார்ந்தேன்.

``29வது வயதில் உங்களுக்கு வாழ்க்கை மாற்றமும் வித்தியாசமான வேலையும் அமையும்'' என்று கூறிவிட்டுப் போனான்.
அதேபோல் `கன்னிப் பருவத்திலே' படத்தில் நடித்தேன். அதைத்தொடர்ந்து `அந்த 7 நாட்கள்', `அச்சமில்லை அச்சமில்லை' என்று தொடர்ந்து படங்களில் நடித்தேன். திரையுலகில் கால்தடம் பதித்து வேறு பாதையில் பயணிக்கத்தொடங்கினேன்.

என்னுடைய ஜோதிட ஆய்வை நான் 1985-ல் தொடங்கினேன். இந்த ஆய்வில், சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி வித்தியாசமான வாழ்க்கையை வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பலரைச் சந்தித்து அவர்களின் ஜாதகங்களைப் பெற்று ஆராய்ச்சி செய்தேன். இதில், சிறை சென்றவர்கள், பயங்கரவாதிகள், கொலையாளிகள், விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், மனைவியை இழந்தவர்கள், காலம் கடந்து திருமணம் செய்துகொண்டவர்கள், பல தார மணமுடையவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலையானவர்கள், விபத்தில் இறந்தவர்கள், இறந்தே பிறந்தவர்கள் எனப் பல்வேறுபட்ட ஜாதகங்களைச் சேகரித்து ஜோதிடர்களிடம் காண்பித்து, ஆய்வு செய்தேன்.

இப்படி நான் பெற்ற அனுபவங்களை வார இதழ் ஒன்றில் ஜோதிடப்படி நடந்த 50 உண்மை நிகழ்ச்சிகளைத் தொடராக ஆதாரங்களுடன் எழுதினேன். அவை வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. `ஜோதிடம் ஒரு புரியாத புதிர்' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. இதில் இருப்பவையெல்லாம் சத்தியமான வார்த்தைகள். நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் இஷ்டம். இத்தனைக்கும் நான் தொழில்முறை ஜோதிடரும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்தினார்