புதன், 31 மே, 2023

பல்லவராயர்கள்

தொண்டைமான்களின் ஆட்சியில் புதுக்கோட்டை பல்லவராயர்கள்



கிபி 1686ல் புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதிகளை பல்லவராயர்களிடம் இருந்து கைப்பற்றிய புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். 

தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் புதுக்கோட்டை பல்லவராயர்கள் மிக உயர்ந்த பொறுப்புகளை வகிந்து வந்துள்ளனர். தொண்டைமான்களுக்கு தங்களது படைபலத்தின் மூலம் முழு ஆதரவை அளித்தனர். 

கிபி 1736 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாத ராய தொண்டைமான் பல்லவராயர்களுக்கு நிலங்களை கொடையாக அளித்துள்ளதை தென்னங்குடி கோயில் கல்வெட்டு கூறுகிறது.(General history of pudukkottai state 1916 page 175)

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பல்வேறு உயர்பொறுப்புகளையும், பதவிகளையும் பல்லவராயர்கள் பெற்றனர். 18 ஆம் நூற்றாண்டில் பெருங்களூர் பல்லவராயர்கள் மிகவும் புகழ்பெற்ற வகுப்பு சேர்வைக்காரர்களாகவும்(Millitary sardar), அம்புநாட்டு பல்லவராயர்கள் ஜாகிர்தார்களாகவும் உயர்ந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் பல்லவராயரே புதுக்கோட்டை மன்னராக பதவியேற்கும் அளவுக்கு பல்லவராயர்-தொண்டைமான் மன்னர்களின் உறவு வலுப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை சமஸ்தான அரசியலில் பல்லவராயர்கள் வகித்த உயர்பொறுப்புகள் :- 

ஜாகிர்தார் : மன்னர் விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)ல் முதன்முதலாக ஜாகிர்தார் முறையை உருவாக்கினார். மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு நிலங்களை அளித்து அவற்றின் வரிவசூல் உரிமை அவர்களுக்கு வழங்கப்படும். ஜாகிர்தாருக்கு உட்பட்ட நிலப்பகுதிகளில் நிதி தொடர்பான கணக்குகளை ஜாகிர்தார்களே பார்த்துக்கொள்வார்கள். 

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மொத்தமாக ஆறு ஜாகிர்கள் இருந்தன. அவை மேல அரண்மனை ஜாகீர், சின்ன அரண்மனை ஜாகீர், மானோவிருதி ஜாகீர், ரங்கம் பல்லவராயர் ஜாகீர், ரகுநாத பன்றிக்கொண்டார் ஜாகீர், அம்மனி எஸ்டேட் ஜாகீர் முதலியவை. ஜாகிர்தார்களிடம் மட்டும் மொத்தமாக 6200 ஏக்கர்கள் நிலம் இருந்துள்ளது. 

கிபி 1730 ல் விஜயரகுநாதராய தொண்டைமான் தனது உடன்பிறந்தோர்களான திருமலை தொண்டைமான் மற்றும் ராஜகோபால தொண்டைமான் ஆகியோருக்காக மேல அரண்மனை ஜாகீர் மற்றும் சின்ன அரண்மனை ஜாகீர்களை உருவாக்கினார். மேல அரண்மனை ஜாகீர் தங்கள் வசம் 10 கிராமங்களையும், சின்ன அரண்மனை ஜாகீர் தங்கள் வசம் 19 கிராமங்களையும் கொண்டிருத்தனர். 

கிபி 1789ல் மானோவிர்தி ஜாகீர்தார் உருவாக்கப்பட்டது. ராஜா விஜயரகுநாத தொண்டைமான் தனது அரசியினருக்காக இந்த ஜாகீர்தாரை உருவாக்கினர். இவர்கள் வசம் 17 கிராமங்கள் ஒப்படைக்ப்பட்டன. 

மன்னர் ரகுநாத தொண்டைமான் கிபி (1825-1839) காலக்கட்டத்தில் தனது மருமகன்களான ரங்கன் பல்லவராயர் மற்றும் ரகுநாத பன்றிக்கொண்டார் ஆகியோர்களுக்காக தனியாக ஜாகீர்களை உருவாக்கினார். ரங்கன் பல்லவராயரிடம் 11 கிராமங்கள் ஒப்படைக்கப்பட்டன. ரகுநாத பன்றிக்கொண்டாரிடம் 4 கிராமங்கள் ஒப்படைக்கப்பட்டது. மன்னர் ரகுநாத தொண்டைமான் தனது மூத்த மகளான அம்மனி அம்மாளுக்கு 4 கிராமங்களை கொண்ட ஜாகீர்தாரை உருவாக்கினார். 

ஜாகீர்தார் ரங்கன் பல்லவராயர் வழிவந்தவரே பிற்காலத்தில் புதுக்கோட்டை மன்னராக உயர்ந்த மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிலிட்டரி சர்தார்களாக பல்லவராயர்கள் :- 

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு தேவையான படை உதவியை தேவையான காலங்களில் அளித்திட தனித்தனி படைப்பிரிவுகள் இருந்தன. இத்தகைய படைகளுக்கான தலைவர்கள் வகுப்பு சேர்வைக்காரர் எனும் மிலிட்டரி சர்தார் பட்டத்தினை பெற்றிருந்தனர். 

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முக்கிய மிலிட்டரி சர்தார்கள் பற்றி புதுக்கோட்டை தர்பார் பதிவுகளில் உள்ளது. போரம்( பெருங்களூர் ராய பல்லவராயர்), அண்டகுளம் நல்லப்பெரியான் மண்ணவேளார், வேகுப்பட்டி ராமச்சந்திர ராங்கியத்தேவர், இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரர், கண்ணனூர் ஆவுடையப்ப சேர்வைக்காரர், ஆனைவரி முத்துக்கருப்பன் அம்பலக்காரர், ஆயிங்குடி சுப்பையா அம்பலக்காரர், கடியாப்பட்டி ராமசாமி ராங்கியத்தேவர் முதலோனார் மிக முக்கிய மிலிட்டரி சர்தார்களாக இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கள்ளர் வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.( Hollow crown: Ethino history of small kingdom pg 175) 

மிலிட்டரி சர்தார்கள் சமஸ்தானத்தில் இருந்து பல சலுகைககளை பெற்று வந்தனர். இவர்களுக்கு நிலங்கள் அளிக்கப்பட்டது. நிலத்தின் மூலம் வரும் வருவாயைக் கொண்டு தங்களது படையை நிர்வாகம் செய்து வந்தனர்.

மிலிட்டரி சர்தார்களுக்கு பல விருதுகளை பயன்படுத்தும் உரிமைகள் அளிக்கப்பட்டு இருந்தது. குதிரைகள், குடைகள்! பல்லக்குகள், தீப்பந்தம் அல்லது விளக்கு, மேளம், வாள், கேடயம், சாமரம் போன்றவை விருதுகளாக அளிக்கப்பட்டன. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடைபெறும் தசரா விழா, முடிசூட்டு விழா, மன்னரின் பிறந்த நாள் மற்றும் பிற அரண்மனை நிகழ்வுகளில் மிலிட்டரி சர்தார்கள் தங்களது விருதுகளுடன் வலம் வந்து பங்கேற்பது வழக்கம்.

இதேபோல மிலிட்டரி சர்தார்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அரண்மனையில் இருந்து மரியாதை வருவதுண்டு. அவை யானை மீது வெள்ளி இருக்கை, குதிரை, மேளம், பட்டுத்துணி, பெட்டி, கையுறைகள் முதலியனவாகும். சேர்வைக்காரர்கள் பெரும்பாலும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். 

விஜய ரகுநாதராய தொண்டைமான்( 1730-1769) ஆட்சி காலத்தில் பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த போது அவரது தலைநகரம் பெருங்களூராகவே இருந்துள்ளது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது • இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)

கிபி 1781ல் ஐதர் அலியால் பிடிக்கப்பட்ட கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளை மீட்க தொண்டைமான் மன்னரின் ஆணைக்கேற்ப, போரம்( பெருங்களூர்) பல்லவராயர் தலைமையில், ராமசாமி ராங்கியர், சுப்ரமணிய முதலியார் முதலியோர் உதவியுடன் பெரும்படை சென்று ஐதர் அலியின் படையை விரட்டியடித்து, அறந்தாங்கி, கீழாநிலை கோட்டைகளை மீட்டது. (General history of pudukkottai state 1916 page 270) 

ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் ஆட்சி காலத்தில், கிபி 1797 ல் விசங்கி நாட்டு கள்ளர்கள் செய்த கிளர்ச்சிகளை அடக்க 700 பேர் கொண்ட படையானது போரம் ( பெருங்களூர்) ராய பல்லவராயர் தலைமையில் அனுப்பப்பட்டது. (General history of pudukkottai state 1916 page 296)

பெருங்களூரில் படைபற்றை உருவாக்கி பல போர்களில் பங்கேற்ற போரம் பல்லவராயர்கள் 18 ஆம் நூற்றாண்டில், தொண்டைமான் மன்னரால் நார்த்தாமலை பகுதியில் உள்ள ஆவாரங்குடிப்பட்டி கிராமத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அளிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு அளிக்கப்பட்ட கிராமங்களில் பல்லவராயர் பெயர்களில் குளங்கள் இருந்ததை புதுக்கோட்டை சமஸ்தான ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகிறது. நீர்பழனி மாகாணத்தில் அவையாப்பட்டி எனும் ஊரில் சிவந்தி பல்லவராயன் குளம், அழகப்பன் பல்லவராயன் குளம், சொக்கநாத பல்லவராயர் குளம் முதலிய குளங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவையாப்பட்டி உட்பட 10 க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் போரம் பல்லவராயர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தங்களது முன்னோரான சிவந்தெழுந்த பல்லவராயரின் பெயரில் சிவந்தி பல்லவராயன் என்றே ஒரு குளத்திற்கு பெயரிட்டுள்ளனர். ( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 153)

1813 நார்த்தாமலை மாகாணத்தில் உள்ள பரம்பூரில் அரண்மனைத்தோப்பு, ரா ரா ஸ்ரீ பல்லவரார் தோப்பு முதலியவை ஒலைச்சுவடி குறிப்புகளில் உள்ளது . போரம் பல்லவராயர்கள் இப்பகுதியில் அரண்மனை முதலியவை கொண்டு வாழைந்து வந்ததை அறியமுடிகிறது. ( 1813ல் புதுக்கோட்டை கணக்காய்வு ஒலைச்சுவடிகள் ஒலை 1072)

கிபி 1917ல் புதுக்கோட்டை சமஸ்தான கெசட்டில் சர்தார் போரம் ராய பல்லவராயர் மகன் மகன் மலையப்ப பல்லவராயர் மற்றும் சர்தார் அண்ணாச்சாமி பல்லவராயர் மகன் ராமசாமி பல்லவராயர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த விருதுகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை:- குதிரை, குடை, இரட்டை தீவெட்டி, ஈட்டி, கேடயம், பல்லக்கு, பயல், சவுளி முதலியன.

போரம் பல்லவராயர்கள் சர்தாராக இருந்தபோது, தொண்டைமான் மன்னர் காலத்தில் அவர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டு இருந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கதாக, குற்ற வழக்குகளில் ஒருவேளை பல்லவராயர்கள் குற்றம் சாட்டப்பட்டால் நீதி விசாரணையின் போதோ, நீதிமன்றங்களிலோ இவர்கள் உட்கார அனுமதிக்கப்படுவர். நிற்க வேண்டிய அவசியமில்லை. அக்காலங்களில் இது மிகப்பெரிய மரியாதையாகும்.(803/1916) pudukkottai darbar letter 

தலைமைப் பொறுப்புகளில் பல்லவராயர்கள்:-

கிபி 1767 ல் கண்ட பல்லவராயர் குடுமியான்மலை அருகில் உள்ள கூடலூர் எனும் ஊரை குடுமிநாதர் கோயிலுக்கு கொடையாக அளித்தார். அதற்கு பின் கூடலூர், கண்ட பல்லவராயர் பூபாலபுரம் என அழைக்கப்பட்டது.( manual of pudukkottai state vol 2- part 2 page 1029)

கிபி 1807-1814 காலகட்டத்தில் மாப்பிள்ளை பல்லவராயர் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான தலைமை மேலாளராக இருந்தார். கிபி 1829 ல் ரங்கன் பல்லவராயர், தொண்டைமானாரின் ஆணைக்கு ஏற்ப இலுப்பூர் வட்டம் சுந்தரப்பட்டியில் அணை கட்டியுள்ளார் என்பதை புதுக்கோட்டை கல்வெட்டு 24 தெரிவிக்கிறது.

மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்(1839-1886) , கிபி 1878 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் தனது மகளான பிரகதாம்பாள் அம்மனிக்கும் , குழந்தைசாமி பல்லவராயருக்கும் பிறந்த மூன்றாவது மகனான மார்த்தாண்ட பைரவ பல்லவராயரை தனது வாரிசாக ஏற்றுக்கொண்டார். 
(Manual of pudukkottai state vol 2 part 1 pg 854)

May 2, 1886 ல் மார்த்தாண்டை பைரவ பல்லவராயருக்கு திருக்கோகர்ணத்தில் முடிசூட்டு விழா நடந்தது. 1887 ல், Mr.F.F.crossley என்பவர் பல்லவராயரின் பயிற்றுனராக நியமிக்கப்பட்டார். இவர் Cambridge university ல் பட்டம் பெற்றவர்.மன்னருக்கு கற்பிக்கும் பொறுப்பை இவர் எட்டு ஆண்டுகளாக ஏற்றுக்கொண்டார். பல தேசங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு , புதியவற்றை அறிந்து, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பல சீர்திருந்தங்களை மேற்கொண்டார். நவீன புதுக்கோட்டை யின் சிற்பியாக மன்னர் இருந்தார். கிபி 1886-1928 காலகட்டத்தில் புதுக்கோட்டையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவரது சேவைகளில் சிலவற்றை காண்போம் :-

* கிபி 1881ல் மார்த்தாண்டா தொழில்பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டது.
* கிபி 1894ல் புதுக்கோட்டையில் அஞ்சலக துறையை நிறுவினார்.
* புதுக்கோட்டை நகரம் சீரமைக்கப்பட்டது. தெருக்கள் அகலப்படுத்தப்பட்டு, வடிகால் முறை சரிசெய்யப்பட்டது.
* விவசாயக் கடன் அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது
* விவசாய பண்ணைகள் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
* கிபி 1898ல் ஐரோப்ப தேசங்களுக்கு மன்னர் சென்று வந்ததன் நினைவாக புதுக்கோட்டையில் டவுன் ஹால் கட்டப்பட்டது.
* அரசின் துறைகள் சீரமைக்கப்பட்டது.
* வருவாயைப் பெருக்க சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டது. முத்திரை தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 1902ல் 30 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு, மக்களுக்கான பிரச்சனைகள் விவாதிக்க வழிவகை செய்யப்பட்டது. 1907 முதல் பிரதிநிகள் குழு பொது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
* 1903 ல் நீர்வளத்தை பெருக்க தனியாக துறை உருவாக்கப்பட்டு, பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
* 1902 ல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனை தொடங்கப்பட்டது.(இதுவே இன்றைய ராணியார் மருத்துவமனை)
* 1904 ல் முத்துலெட்சுமி ரெட்டி, மன்னர் கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்திருந்தார். அக்காலத்தில் பெண்களை கல்லூரிக்கு அனுப்பும் வழக்கம் இல்லை. முத்துலெட்சுமியின் ஆர்வத்தைக் கண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் , பிற்போக்காளர்களின் எதிர்ப்பை தகர்த்து, முத்துலட்சுமி ரெட்டி கல்லூரிப் படிப்பை படிக்க உதவினார். பிற்காலத்தில் இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக உயர்ந்தார். 
* 1904ல் புதுக்கோட்டை சட்டத்துறை சீரமைக்கப்பட்டது.
* 1905ல் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது.
* 1905ல் முத்திரை தாள்(ஸ்டாம்ப்,பத்திரம்) அறிமுகப்படுத்தப்பட்டது. 
* 1906ல் தனியாக விவசாயத்துறை உருவாக்கப்பட்டு விவசாயத்தை ஊக்குவிக்கும் பணிகள் நடைப்பெற்றன. 
* 1908ல் கால்நடை மருத்துவமனை உருவாக்கப்பட்டது.
* 1908ல் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க மிகபெரிய கால்நடை கண்காட்சி நடத்தப்பட்டது.
* 1908ல் கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்பட்டன.
* 1909ல் புதுக்கோட்டை அருங்காட்சியம் உருவாக்கப்பட்டது.
* 1909ல் கிராம பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டது.
* 1910ல் முதன்மை நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
* 1910 ல் தொற்றுநோய் தடுப்பு மருந்து பிரிவுக்கான தனி கட்டடம் அமைக்கப்பட்டது.
* 1910ல் நெசவு பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டது.
* 1910ல் புதுக்கோட்டையில் புகழ்பெற்று விளங்கும் ராணியார் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
* 1911ல் நெசவாளர்களுக்காற தறி வரியை நிரந்தரமாக நீக்கினார்
* 1911 ல் தொடக்கப்பள்ளிகள் மூலம் இலவச கல்வி வழங்கப்பட்டது.
* 1913 ஆம் நடைபெற்ற வெள்ளி விழாவில் மன்னர் நாட்டு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
* 1913 ஆம் ஆண்டு மக்கள் செலுத்த வேண்டிய ரூ 25000 வரையிலான கணக்கு வரியை தள்ளுபடி செய்தார்.
* 1913 வரை மூன்றாண்டுகளுக்கு வீட்டு வரியை நீக்கினார்.
* 1913 முதல் வளையல் செய்பவர்கள் மற்றும் சலவைக்காரர்களுக்கான வரிநீக்கம் செய்தார்.
* 1913 முதல் நகராட்சி கவுன்சிலில் 2 பேரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு அளிக்கப்பட்டது.
* விவசாயம் தொடர்பான பயிற்றுவிக்கும் பள்ளி தொடங்கப்பட்டு பட்டம் அளிக்கப்பட்டது.
*1913ல் 10 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் சமஸ்தான பணியாளர்களுக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது.
* டவுன் ஹால் கட்டிடத்தை விரிவாக்க 1000 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
* சமஸ்தானத்தில் விதைவங்கியை உருவாக்க 10,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
* மன்னரை பாராட்டி ஆங்கேலேய அரசு மார்த்தாண்ட பைரவ பல்லவராயருக்கு Grand commander of indian empire எனும் பட்டத்தை அளித்தார். 
* 1915ல் கணக்கு வரி நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டது.
* 1915 ல் புதுக்கோட்டை நகரில் வடிகால் முறையை சரிப்படுத்த ஒரு லட்ச ரூபாயை ஒதுக்கினார்.
* பஞ்சாயத்து மெம்பர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் உரிமைகளை அளித்தார்.
* 1915 ல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டன.
* 1915ல் பெண்களுக்கான கல்வி தரத்தை உயர்த்த 5000 ரூபாயை ஒதுக்கினார்
* 1915 ல் கிராமப்புறங்களில் சுகாதார மையங்கள் அமைக்க 10,000 ரூபாயை ஒதுக்கினார்.
* 1915ல் நில அளவை தொடர்பான பள்ளி உருவாக்கப்பட்டது.
* 1916ல் குழந்தைகளுக்கான மையம் உருவாக்கப்பட்டு, குழந்தைகளுக்கு நற்பண்புகள் போதிக்கப்பட்டன.
* 1916ல் நகரில் நீர் சுத்திகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது.
* 1920ல் மார்த்தாண்டா விவசாய மற்றும் தொழில் அருங்காட்சி நடைபெற்றது.
* 1920ல் மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கப்பட்டது.
* ராணியார் பெண்கள் பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
* 1920 ல் நடமாடும் நூலகங்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புற மாணவர்களின் அறிவுத்திறன் வளர வகை செய்யப்பட்டது.
* 1920ல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார மையம், ராணியார் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
* 1921ல் மன்னர் கல்லூரியில் அறிவியல் துறை தொடங்கப்பட்டது.
* கிராமப்புறங்களில் ஆரம்பப்பள்ளிகள் உருவாக்கப்பட்டது.
* ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டது.
* சமஸ்தானத்தில் புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டது.
* இன்று புதுக்கோட்டையில் மிக கம்பீரமாக காட்சியளிக்கும், நீதிமன்றம் மற்றும் பொது அலுவலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு முழுமை பெற்றது. 

விஜய ரகுநாத பல்லவராயர்:-

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர், ஏப்ரல்,1898ல் ஐரோப்பா தேசங்களுக்கு பயணம் மேற்க்கொண்டார். இவரது பயணக்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை நிர்வகிக்க மன்னரின் அண்ணன் விஜய ரகுநாத பல்லவராயர் தலைமையில் கவுன்சில் அமைக்கப்பட்டு சமஸ்தானத்தின் நிர்வாகத்தை விஜய ரகுநாத பல்லவராயர் கவனித்து வந்தார். 1898 ல் இருந்து 1908 ஆம் ஆண்டு வரை நிர்வாக கவுன்சிலின் தலைவராக விஜய ரகுநாத பல்லவராயர் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

கிபி 1909 ல் விஜய ரகுநாத பல்லவராயர் சமஸ்தானத்தின் திவானாக உயர்ந்தார். இன்றைய தலைமைச் செயலாளர் போல அந்த காலத்தில் திவான் என்பது மிக உயரிய பதவியாகும்.

ஏப்ரல் 16, 1916ல் தனது மனைவியும் ஆஸ்திரேலிய மனைவுமான மோலியுடன் ஆஸ்திரேலியாவில் சென்று குடியேறினார் மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர்.

மன்னர் வெளிநாட்டில் இருந்த காலத்தில், திவானாக இருந்த விஜய ரகுநாத பல்லவராயர், சமஸ்தான நடவடிக்கைகள் கவனித்தார். 1992 ல் மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர், ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தமாக தங்கிவிட முடிவெடுத்தார். சமஸ்தானத்தை ஆளும் பொறுப்பு மொத்தத்தையும் தனது சகோதரரான விஜயரகுநாத பல்லவராயரிடம் ஒப்படைத்தார். October 23, 1922 வரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக இருந்த விஜயரகுநாத பல்லவராயர் , ரீஜின்ட் எனும் பதவியைப் பெற்று மன்னருக்கு பதிவாக நாட்டை ஆண்டு வந்தார். 1922 முதல் 1928 வரையிலான காலகட்டத்தில் சமஸ்தான ரீஜன்டாக விஜய ரகுநாத பல்லவராயர் இருந்தார். இவரது நிர்வாகத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளை காண்போம்:-

* 1923 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சென்னை சென்று கவர்னரை சந்தித்தார்.
* 1926 ஆம் ஆண்டு கொச்சின் சமஸ்தானத்தின் அழைப்பை ஏற்று, எர்ணாகுளம் கொச்சின் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார்.
* 1924 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை சட்டசபை குழு உருவாக்கினார். 
* குழுவில் இருந்த மொத்த 50 உறுப்பினர்ளில், 35 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ளவரகள் அரசால் நியமிக்கப்பட்டனர். குழுவில் பெண்கள் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு இடமளிக்கப்பட்டு இருந்தது.
* விளைச்சல் தரக்கூடிய நிலங்கள் கண்டறியப்பட்டன. விவசாயத்தை ஊக்குவிக்கவும், கிணறுகள் தோண்டவும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டது.
* ஆலங்குடி தாலுகாவில், முந்திரி பயிரிட ஊக்குவிக்கப்பட்டது.
* விவசாய நிலங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. 
* மார்த்தாண்டா விவசாய கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டது. 
* 1924 ல் ஆதி திராவிடர்களுக்கான பள்ளி தொடங்கப்பட்டது.
* 1924ல் டவுன் முனிசிபல் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 8ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் எட்டு பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
* 1926ல் தொடக்க கல்வி சட்டம் இயற்றப்பட்டு, 7 முதல் 11 வயதுள்ள சிறார்கள் கண்டிப்பாக பள்ளிக்கூடம் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
* 1926 ல் கிராம பஞ்சாயத்து நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டு, சிறு கிராமங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
* 1928ல் மன்னர் கல்லூரியில் பொறியியல் துறை உருவாக்கப்பட்டது. 1928 ல் மாணவர் தங்குமிடமும் உருவாக்கப்பட்டது.
* 1928ல் ஆதரவற்றோர் இல்லம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
* 1928 ல் புதியதாக பல காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
* 1927-1928 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்க, பல வரி சலுகைகள் வழங்கப்பட்டன. 
* நகரின் வடிகால் முறை 1,88,000 ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
* குறவர் இன சிறுவர்களுக்காக தனியாக சீர்திருத்த மையங்கள் உருவாக்கப்பட்டன.
* பெண்களுக்கான பிரத்யேகமாக தனியாக நான்கு நூலகங்கள் உருவாக்கப்பட்டன.
* சாரணர் இயக்கங்கள் பள்ளிகளில் தொடங்கப்பட்டன.
* புதியதாக பல கிராம பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டன.
* திருமயத்தில் புதிதாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. 

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் உயர்பதவிகளை அலங்கரித்த விஜய ரகுநாத பல்லவராயர் 1930ல் மரணமடைந்தார். இவருடைய ஆளுயர படம் புதுக்கோட்டை டவுன் ஹாலில் வைக்கப்பட்டு மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த படம் தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ளது. இவரது நினைவாக ராயபுரத்தில் ஒரு நுழைவாயில்(Arch) கட்டப்பட்டு இன்றும் உள்ளது.
(Manual of pudukkottai state vo 2 part 1 , pg 890-906)

பைரவ ராமச்சந்திர பல்லவராயர்:-

மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் இரண்டாவது அண்ணன் பைரவ ராமச்சந்திர பல்லவராயர் மன்னரின் ராணுவ செக்டர்டரியாக இருந்தார்.

தட்சிணா மூர்த்தி பல்லவராயர்:-

மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் இளையவரான தட்சினாமூர்த்தி பல்லவராயர் மதுரை உயர்நீதிமன்றத்தில் அக்காலத்திலேயே வக்கீலாக பணியாற்றினார்.
( Chiefs and leading families of madras presidency vol 2 /1923)

தொண்டைமான்-பல்லவராயர் மண உறவுகள்

மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் (1769-1789) தனது மகளான அம்மாள் ஆயியை, மாப்பிள்ளை பல்லவராயருக்கு மணம் முடித்து கொடுத்தார்

புதுக்கோட்டை சமஸ்தான தலைமை மேலாளராக இருந்த மாப்பிள்ளை பல்லவராயர் இறந்தபின், அம்மாள் ஆயி, மாப்பிள்ளை பல்லவராயரின் தம்பியான ரங்கன் பல்லவராயர் என்பவரை தனது வாரிசாக தத்தெடுத்துக்கொண்டார்.(General history of pudukkottai state 1916 page 382)

கிபி 1828 ல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான் தனது மகளை ஜாகிர்தாரான ரங்கன் பல்லவராயர் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்தார்.(General history of pudukkottai state 1916 page 382)

மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை அம்புநாட்டை சேர்ந்த குழந்தை பல்லவராயர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களது மகனான மார்தாண்ட பைரவ பல்லவராயரை தனது அரசியல் வாரிசாக தத்தெடுத்தார் தொண்டைமான்.(manual of pudukkottai state vol 2 part 1 pg 854)

மேல அரண்மனை ஜாகீர்தாரான ராஜ்குமார் ராமச்சந்திர தொண்டைமான், பெருங்களூர் பல்லவராயர் வழிவந்த அண்ணாச்சாமி பல்லவராயரின் மகளான மதுராம்பாள் ஆயி என்பவரை திருமணம் செய்தார். மதுராம்பாள் ஆயி 1920 ல் மரணமடைந்தார். 

இதற்கு பிறகு ராஜ்குமார் ராமச்சந்திர தொண்டைமான், பிலாவிடுதியை சேர்ந்த குழந்தைசாமி பல்லவராயர் அவர்களின் மகளான ஜானகி ஆயி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவரே புதுக்கோட்டை யின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமான்.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 896)

சர்தார் ராமசாமி பல்லவராயர் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு எழுதிய கடிதத்தில், தன்னை புதுக்கோட்டை மன்னரின் முதல் மாமன் என குறிப்பிட்டுள்ளார். ( கடித எண் 515 of 1924)

பல்லவராயர்கள் பெறும் மரியாதைகள்:-
*****************************************
புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் காலத்தில் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசாங்க விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு அரண்மனையில் இருந்து அழைப்பு வருவது வழக்கம். அதேபோல பல்லவராயர்கள் வீடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு அரண்மனையில் இருந்து யானைகள் மூலம் மரியாதைகள் வருவது வழக்கம். தற்காலத்தில் இவை நடைமுறையில் இல்லை.

போரம்( பெருங்களூர்) பல்லவராயர்களின் குல தெய்வம் பெருங்களூரில் உள்ள உருமநாதர் ஆவார். பெருங்களூரில் உள்ள புகழ்பெற்ற உருமநாதர் கோயிலில், சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. திருவிழாவின்போது முதல் திருநீர் , பொங்கலுக்கு முதல் பானை, கெடா வெட்டில் முதல் கிடா அனைத்தும் பல்லவராயர்களுக்கே. பெருங்களூரில் உள்ள சோழர்கால(12 ஆம் நூற்றாண்டு) சிவன் கோயில், மலைய மருங்கனார் கோயில் என அனைத்து கோயில்களிலும் போரம் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள உருமநாதர் கோயிலில் மூலவரை நோக்கியவாரு நேர்கோட்டில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்கும் உரிமை பல்லவராயர்களுக்கே உண்டு.( மன்னர் காலத்தில் வைக்கப்பட்ட பழைய சிலைகள் சிதிலமடைந்து விட்டது) யானை மற்றும் குதிரைகளை கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. கம்மங்காடு எனும் ஊரில் பல்லவராயர் காளி எனும் ஒரு காளியையும் பல்லவராயர்கள் வழிபட்டு வருகின்றனர்.( பெருங்களூர் உருமநாதர் கோயில் தலைமை பூசாரி :- மணி அய்யர், 23 தலைமுறைகளாக உருமநாதர் கோயிலில் பூசாரிகளாக இருப்பவர்கள்)

பெருங்களூர் பல்லவராயர்களுக்கு நார்த்தாமலையை அடுத்த ஆவாரங்குடிப்பட்டியை சுற்றியுள்ள 10 கிராமங்கள்தொண்டைமானால் அளிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படை தளவாடங்களுடன் அங்கு குடியேறினர். நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயிலில், இன்றும் பெருங்களூர் பல்லவராயர்களுக்கே முதல் மரியாதை. நார்த்தாமலை அம்மன் கோயிலில் ஆறாம் மண்டகப்படி பல்லவராயர்களுக்கு உரியதாகும். ஆறாம் மண்டகப்படியின் போது மட்டுமே, காளை வாகனம் தேரில் வைத்து கோயிலை சுற்றி இழுத்து வரப்படுகிறது. ஆகாச ஊரணி எனும் இடத்தில் இருந்து சாமி கொண்டுவரப்பட்டு ஆறாம் மண்டகப்படி அன்றும் கோயிலை சுற்றி வலம் வரும் . (தகவல்: சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

இது தவிர இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள குளவாய் கருப்பர் கோயிலிலும் பல்லவராயர்களே முதல் மரியாதை பெறுகின்றனர். (தகவல்: சர்தார் முத்துக்குமார் பல்லவராயர் : லெக்கணாப்பட்டி தலைவர், ஆவாரங்குடிப்பட்டி)

அம்புநாட்டில் மொத்தமாக ஒன்பது குப்பங்கள் உள்ளன. இவற்றில் இரண்டாவது குப்பமான தென்தெரு குப்பம் பல ஊர்களை உள்ளடக்கியது. இங்கு பல்லவராயர், தொண்டைமான், ராங்கியர், தேவர், கலியரார், தளஞ்சிரார், வலங்கொண்டார், குறந்தைராயர், வேட்டுவர், ஆறார், சம்பட்டியார், சேப்ளார், மாகாளியார், மறவராயர், நரங்கியர் முதலான பட்டத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அம்புக்கோயிலில் உள்ள வீரராஜேந்திர சோழீஸ்வரமுடையார் கோயில் கிபி 1070ல் கட்டப்பட்டது. இக்கோயிலில் தென்தெருவின் சார்பாக பல்லவராயர்களே முதல் மரியாதை பெறுகின்றனர். அம்புக்கோயிலில் உள்ள காளி கோயிலிலும் தென்தெருவின் சார்பாக பல்லவராயர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.( Hollow crown - Ethinohistory of small kingdom)

அம்புநாட்டில் , காட்டாத்தி எனும் ஊரில் உள்ள அம்மன் கோயிலில் பல்லவராயர்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.

பல்லவராயர் வம்சாவழிகள்:-

சிவந்தெழுந்த பல்லவராயர் மறைவிற்கு பிறகு பல்லவராயர்கள் பற்றிய குறிப்புகள் 1750 களில் கிடைக்கின்றன. சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த தலைமைக் கிராமமான பெருங்களூர் மற்றும் அம்புநாட்டில் தென்தெரு குப்பத்தில் வாழ்ந்த பல்லவராயர்கள் தொண்டைமான்களின் அரசியலில் முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளனர். அவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களைக் உள்ளடக்கிய பல்லவராயர்களின் வம்சாவழியைக் காணலாம்.

பெருங்களூர்( போரம்) பல்லவராயர்கள்:-

சிவந்தெழுந்த பல்லவராயர்(1686)---> கண்டன் ராய பல்லவராயர்(1767)--->சர்தார் போரம் ராய பல்லவராயர்-->(1780-1810)--->

01)சர்தார் அச்சுத பல்லவராயர்(1820-1860)--->சர்தார் போரம் ராயம் பல்லவராயர்(1860-1910)--->சர்தார் மலையப்பன் பல்லவராயர்(1925)

02) சர்தார் அச்சுதப் பல்லவரயாயர்(1820-1860)--->சர்தார் அண்ணாச்சாமி பல்லவராயர்(1902) வழிவந்தவர்கள்---->சர்தார் ராமசாமிப் பல்லவராயர்(1935)/சர்தார் விஜயரகுநாத பல்லவராயர்(1938)

a)சர்தார் ராமசாமிப்பல்லவராயர்(1935) வழிவந்தவர்கள்-->சர்தார் அண்ணாச்சாமி பல்லவராயர்/சர்தார் சின்னப்பன் பல்லவராயர்/சர்தார் சின்னையா பல்லவராயர்

b)சர்தார் விஜயரகுநாத பல்லவராயர் (1938)வழிவந்தவர்கள்-->குழந்தையா பல்லவராயர்/நடராஜன் பல்லவராயர்

இவர்களின் சந்ததிகள் இன்று நார்த்தாமலை அருகில் உள்ள ஆவாரங்குடிப்பட்டி மற்றும் கண்ணாம்பட்டி ஆகிய ஊர்களில் வாழ்கின்றனர்.

அம்புநாட்டு பிலாவிடுதி பல்லவராயர்கள்:-

மாப்பிள்ளை பல்லவராயர்(1780-1814) ---> ஜாகிர்தார் ரங்கன் பல்லவராயர்(1828)-->ரத்தினம் பல்லவராயர்(1850)-->குழந்தைசாமி பல்லவராயர்(1875)-->மார்த்தாண்ட பைர பல்லவராயர்/விஜயரகுநாத பல்லவராயர்/ துரைச்சாமி பல்லவராயர்-->விஜய ரகுநாத பல்லவராயர்-->>ரவி பல்லவராயர்
இவர்களின் வம்சாவழியினர் கறம்பக்குடியில் வாழ்ந்து வருகின்றனர்.

பல்லவராயர்கள் வாழும் ஊர்கள் :
புதுக்கோட்டை வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்த பல்லவராயர்களின் சந்ததிகள், புதுக்கோட்டையின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அவையாவன:-

பிலாவிடுதி 
காட்டாத்தி
கரம்பைவிடுதி
மந்தைக்கொள்ளை
பல்லவராயன்பத்தை
கண்ணாம்பட்டி
ஆவாரங்குடிப்பட்டி
சாந்தம்பட்டி
காயாம்பட்டி
ஒட்டங்காடு

சோழர் மற்றும் பாண்டியர்கள் பெற்ற வெற்றிகளில் பெரும் பங்காற்றிய பல்லவராயர்கள் பிற்காலத்தில் தங்களுக்கான தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி நாடாண்டுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சி மலர்ந்த காலத்திலும், தங்களது ஆளுமை திறமையால் மிக உயரிய பதவிகளை பெற்று பிறக்காலத்தில் மீண்டும் புதுக்கோட்டையின் மன்னராக உயரும் நிலையை பல்லவராயர்கள் அடைந்தனர். மன்னராட்சி மறைந்து மக்களாட்சி காலத்திலும் தன்னுடையா சேவை மனப்பான்மை மற்றும் ஈகை குணத்தால் , மக்களாட்சியில் மலர்ந்த மன்னரைப்போல வாழ்ந்து மறைந்தவர், மனித நேய மாண்பாளர் ஐயா, துரை. விஜய ரகுநாத பல்லவராயர் அவர்கள். இவரது சமூக சேவையைப் பாராட்டி பொது மக்களே இவரது திருவுருவ சிலையை கறம்பக்குடியில் நிறுவி 2000மாம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களால் திறக்கச் செய்தனர்.பல்லவராயர் அவர்களுக்கு ஆண்டு தோறும் மக்களே விழா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.



தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்