வெள்ளி, 31 மார்ச், 2023

குந்தவை நாச்சியார் மதம் மாறினாரா.



அருமொழி என்னும் இயற்பெயர் கொண்ட இராஜராஜ சோழத்தேவர் பிறந்த வருடம் கி.பி 947 என்பதாக அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 

குந்தவை நாச்சியார் இவரது அக்காள் என்பதால் அவர் பிறந்த வருடம் தோராயமாக கி.பி. 945.

கண்டாதிரத்தன், அரிஞ்சயர், இவர்களுக்குப்பிறகு பதவிக்கு வந்த, மதுரைகொண்ட இராசகேசரி என அழைக்கப்பட்ட சுந்தரச்சோழரின் ஆட்சிக்காலம் 17 ஆண்டுகள். இவரது 17 ம் ஆட்சியாண்டு வரை கல்வெட்டு கிடைக்கிறது 
*( S.i.i vol 3 no 118)*

சுந்தரச்சோழனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த மதுராந்தகன் என்னும் உத்தமச்சோழனின் ஆட்சிக்காலம் 16 ஆண்டுகள். இவர் பதவிக்கு வந்தது கி .பி 970 - 971 என்பதை பல வானியல் குறிப்புகள் கொண்டு (கலி, சகம்) நிருபிக்கப்படுகிறது.. இவரது 16 ம் ஆண்டு வரை கல்வெட்டு கிடைக்கிறது.

உத்தமச்சோழரின் 12 ம் ஆட்சியாண்டில் குந்தவை நாச்சியார் இடம் பெறுகிறார். கோவில் ஒன்றுக்கு 500 கழஞ்சு பொன் நிவந்தம் தருகிறார்.
*( S.i.i. vol 19. Ar no 606 of 1920)*













உத்தமச்சோழனின் 
ஆட்சிக்காலத்தில் 500 கழஞ்சு பொன் நிவந்தம் தரும் ஒரு சிறப்பான அரச மாதராக குந்தவை இருந்துள்ளார். உத்தமச்சோழனுக்கு பயந்து ஊரை விட்டு ஓடவும் இல்லை. குகையில் அமர்ந்து தவம் செய்யவும் இல்லை. எந்த நத்தர் பாபவும் குந்தவைக்கு அடைக்கலம் தரவில்லை.

முதலாம் இராஜேந்திரரின் ஆறாம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப்பணிகள் மேற்கொண்டார். கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார்.

அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார். இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம், ஆக தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் என்பது உறுதி. தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார்
என்பது உச்சபட்ச கற்பனை.

குந்தவையின் கணவர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது நாம் அறிந்த ஒன்று. வந்தியதேவனுக்கு மேலும் மூன்று மனைவிகளும் இருக்கிறார்கள்.

இராஜேந்திரரின் ஆட்சியாண்டில், வந்தியத்தேவரின் மற்றொரு மனைவி மந்தார கௌரவனார் குந்தாதேவி என்பவர் பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வரர் கோவிலுக்கு நிவந்தம் தருகிறார். 
*(ins 243 of 1915)*

அதே கோவிலில் வந்தியத்தேவரின் மேலும் ஒரு மனைவியான இந்தளா தேவியார் நிவந்தம் தருகிறார்.
*Ins 191 of 1915.*

இராஜராஜன் காலம் முழுவதும் வாழ்ந்து, இராஜேந்திரன் காலத்தில் சாமந்தராக அதாவது படைத்தலைவராக வந்தியத்தேவன் இருந்துள்ளார்.

இதை பண்டாராத்தார், சாஸ்திரி, போன்ற பல அறிஞர்கள் உறுதி செய்கின்றனர்.

ஆக வந்தியதேவன் மூன்று மனைவிகளுடன், சகலசம்பத்துடன், தீர்க்காயுசாய் வாழ்ந்தவர் என்பது
நிச்சயமான ஒன்று.

தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார். தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத்திருமேனிகள்
எடுத்துள்ளார். 

துலுக்க நாச்சியார் யார்..?

முதலில் இந்த துலுக்கர் என்ற சொல்லாடலே 13 ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் வந்தது. அதற்கு முன்பாக இஸ்லாமியர்களை துருக்கர் அல்லது சோணகன் என்று அழைக்கப்பட்டனர். தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில், சோணகன் சாவூர் பரஞ்சோதி என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நிவந்தம் தருகிறார். இவரே இராஜேந்திர சோழன் காலத்தில் ஒரு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

கி.பி 13 ம் நூற்றாண்டின் தொடக்கம், இஸ்லாமிய படையெடுப்பு தமிழகத்தில் துவங்கியது, தமிழகத்தில் பல இடங்களில் தாக்குதல், ஸ்ரீரங்கம் கோவிலும் தாக்குதலுக்கு உள்ளானது.

ஸ்ரீரங்கத்து ரங்கநாதரின் உற்சவர் திருமேனி அபகரிக்கப்பட்டு டில்லி சென்றது. டில்லி பாதுசாவின் மகள், அரங்கனின்்திருமேனியை நேசிக்கிறார். இங்கிருந்து சென்ற ஒரு குழு, டில்லிபாதுசாவை சந்தித்து முறையிட்டு, ரங்கன் சிலையை மீட்டு வந்தது. 

அரங்கனை காணாது துடித்த
டில்லி பாதுசாவின் மகள், ஸ்ரீரங்கம் வந்து அரங்கனைகாணாது உயிர் விட்டார். பீபி நாச்சியார் என்றும், துலுக்க நாச்சியார் என்றும் அழைக்கப்பட்டு இன்றும் திருவரங்க கோவிலில் இஸ்லாமிய முறைப்படி வணங்கப்படுகிறார். சமய நல்லிணக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. இந்நிகழ்வுகளை கோவிலொழுகு நூல் சரியாக கூறுகிறது.

இதில் குந்தவை நாச்சியார் எஙகே வருகிறார். துலுக்கநாச்சியாருக்கும் குந்தவைக்கும் என்ன சம்பந்தம்..?

17 ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவில்.. அம்மை நோய் வராமல் இருக்க, 18 ம் நூற்றாண்டில் பாடப்பட்ட மாரியம்மன் தாலாட்டுப்பாடல் 10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த குந்தவை நாச்சியாருக்கும், மாரியம்மன் தாலாட்டிற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.




உறையூரில் உள்ள நத்தர் வலி பாப தர்ஹா  வழக்கமான தர்ஹாக்களில் ஒன்று. அங்கு குத்துவிளக்கு இருப்பதும், தர்ஹாவிற்கு இந்துக்கள்செல்வதும், மற்ற அனைத்து தர்ஹாவிலும் நடைபெறும் வாடிக்கையான நிகழ்வு.

இங்குதான் குந்தவை அடக்கமானார் என்பது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. ஆக.. சுத்தி சுத்தி எப்படி வந்தாலும். குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை..

*வதந்திகளை நம்ப வேண்டாம்..*

கட்டுரை : ஐயா. மா. மாரிராஜன்