திங்கள், 23 மார்ச், 2020

செம்பியன்களரி



களர் நிலம் என்னும் பயன்படாத நிலத்தில் பயிற்றுவிக்கப்படும் போர் பயிற்சியே ‘களரி’ ஆயிற்று எனக்கொள்ளலாம். களம் என்னும் சொல்லின் அடிப்படையிலும் ‘களரி’ என்னும் சொல் உருப் பெற்றதாகவும் கொள்ள இடமுண்டு. இதை ‘களரிப் பயிற்று என்றும் அழைப்பர். (களரி - போர் பயிற்சி செய்யும் களம். பயிற்று - பயிற்றுவித்தல்) களரி பயிற்றுவித்தல் என்ற தமிழ் சொல்லே மருவி களரி பயிற்று ஆயிற்று.



“தூதணம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
வரிமணல் அகன்திட்டை’’

என உருத்திரங்கண்ணனார் தனது பட்டினப்பாலையில் கூறுவதன் மூலம் ‘களரி’ என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

‘முது மரத்த முரண் களரி’ என பட்டினப்பாலைத் தமிழ் வர்ணித்தாலும், இன்றைக்கு இக்களரிக்கலை கேரளாவுக்குச் சொந்தமானதைப் போல ஆயிற்று. கேரளாவிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில இடங்களிலும் இக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. கேரளாவின் களரி ‘வடக்கன் களரி’ என்றும் தமிழகத்தின் களரி ‘தெக்கன் களரி’ என்றும் அழைக்கப்படுகிறது. தெக்கன் களரி என்ற கலை தமிழகத்தின் பிற பகுதிகளில் ‘சிலம்பம்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது.

தஞ்சையில் நெம்மக்கோட்டை பகுதியில் களரி பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்.

தஞ்சை மாவட்டம், மேகளத்தூர் - ஒரத்தூர் வழியில் உள்ள செம்பியன்களரி எனும் ஊரில் 

கள்ளர்களில்
சேப்பிளையார்,
நாட்டார், 
அம்பலகாரர் 

ஆகிய மூன்று பட்டத்தார் வாழ்கின்றனர்.







கல்லணைக்குக் கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்துதான்சொழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயம், அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன. ராஜராஜசொழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது, இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி தனிச்சன் னிதியிலும் அருள்பாலிக்கின்றனர்.

நேத்ரபதீஸ்வரர் கோவிலில் கள்ளர்களுக்கு இணையாக சைவ பிள்ளைமார்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. செம்பியன் களரியில் உள்ள நேத்ரபதீஸ்வரர் ஆலயம், அங்குள்ள வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது. வெள்ளாளர் 10 தலைக்கட்டுக்கும் மேல் உள்ளனர். இங்குள்ள வெள்ளாளர்கள் கோவில்மரியாதைக்காக சொரக்குடிப்பட்டியில் உள்ள கள்ளர்களின் செம்பியமுத்தரசு பட்டம் உடையவர்களை அழைத்துவருகின்றனர்.

செம்பியன்களரியில் அமைந்துள்ள அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும்
நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.






கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, ருத்ர துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரத்தடியில் நாகர்சிலைகள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன்.

மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. அது என்ன தசாவனி தைலம்? நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்கா எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெ, விளக் கெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசாவனி தைலம்.’ இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது. பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.
அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர். வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு. பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர். அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.
அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும். மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது. வழிபாட்டுக்குப் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர். இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்" என்கிறார் அர்ச்சகர் வைத்தியநாதன் குருக்கள்.





கள்ளர்களுக்கும் சமணத்திற்க்கும் நீண்ட தொடர்பு உள்ளது என்பதற்கு ஏற்ப அடர்ந்த புற்களுக்கு நடுவே காலத்தால் மிகவும் பழமையான சமணர் சிற்பம் உள்ளது. 

இன்னும் சிறிது புதைந்த நிலையில் சிற்பம் இருந்தது. முன்பு வயலில் வேறொரு இடத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பிற்காக முத்தாளம்மன் கோயில் அருகே வைத்திருப்பதாகவும் அங்கிருந்தோர் கூறினர்

ஆய்வு : பரத் இராமகிருஷ்ணன்

நன்றி: 
திரு. ஐயா இராமலிங்கம்
திரு. ஐயா பா.ஜம்புலிங்கம்


அமைவிடம்: கல்லணைக்குக் கிழக்கே 14 கி.மீ., திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 12 கி.மீ., பூதலூரிலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது கோயில்.