வியாழன், 9 ஜனவரி, 2020

இயக்குநர் பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம் தேவர்



இயக்குநர் பேராசிரியர் ஏ.எஸ். பிரகாசம் தேவர் உசிலம்பட்டி முதலைக்குளத்தில் கள்ளர் குடியில் பிறந்தவர். பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஆவார். தேனி கூடலூர் பேயத் தேவர் பேத்தியை திருமணம் செய்து உள்ளார்.

இயக்குனர் ஏ.எஸ் பிரகாஷம் ஒரு காலத்தில் சிறந்த கதை வசனங்களை எழுதியவராகவும் சிறந்த திரைக்கதையாளராகவும், சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டாலும் அவ்வளவாக வெளியில் தெரியாதவர்.

தற்கால தலைமுறைக்கு பாக்யராஜ், பாரதிராஜா என அந்நாளைய 80களின் பிரபலங்களை தெரியும். ஆனால் இவரை தெரியாது.

ராஜரிஷி, சூர்யகாந்தி, அந்தமான் காதலி உள்ளிட்ட பல படங்களின் கதையாளராக அறியப்பட்டவர் இவர்.

இவர் இயக்கிய மூன்று முத்தான படங்கள் எச்சில் இரவுகள், சாதனை, ஆளப்பிறந்தவன். வித்தியாசமான கதைக்களம் கொண்டவை மூன்று படங்களும் அதில் எச்சில் இரவுகள், திரைப்படம் இதுவரை யாரும் சொல்லாத பிச்சைக்காரர்களின் கதைக்களம் ஆகும்.

புகழ்பெற்ற முகலாய பேரரசின் அக்பரின் மகன் சலீமுக்கும் , அனார்கலி என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட அமரத்துவ காதலை வித்தியாசமான பாணியில் இப்போது இருக்கும் இளைஞருக்கு அது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடிக்கும்போது ஏற்பட்டதை அழகாக விளக்கி இருப்பார்.

இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் சேர்ந்து கொள்ள படம் இனிமையாக அழகாக வந்தது. இன்று வரை 80களின் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இது அமைந்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தில் படத்தின் கதைக்கேற்ப இயக்குனராக நடித்திருந்தார்.

இதைப்போலவே தமிழ் சினிமாவில் இது வரை யாரும் தொடாத களம் . சமூகத்தை அழிக்கும் சில விரோதிகளால் தன் தாய் தந்தையை இழந்த சிறுவன், நாடக நடிகராக மன்னர் வேஷம் போட்டு மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருக்கும் சத்யராஜின் நாடகம் நடக்கும் இடத்துக்கு சீரியஸாகவே தன் குறைகளை சொல்கிறார். இதனால் வெகுண்டெழும் சத்யராஜ் அயோக்கியர்களை அழிப்பதுதான். சாதாரண மசாலாக்கதைதான் என்றாலும் அதை இவர் சொல்லிய விதம் புதுசு.

ஏ. எஸ். பிரகாசம் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது முன்னணி தமிழ் தினசரியான தினத்தந்தியில் முழு பக்கத்தில் விளம்பர படம் வெளியானது.

ஒத்தயடி பாதையிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கணேஷ், பௌர்ணமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பட்டாம்பூச்சி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நான் கதைகளுக்காக ஹாலிவுட்டைத் தேடிப்போவதில்லை. என் கதைகள் ஹாலிவுட் போன்ற இடங்களுக்குப் போக வேண்டும் என ஆசைப்படுபவன் நான். என் கதை மீது யாராவது உறவு கொண்டாட நினைத்தால், அவர்கள் என் அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் இப்படி யாராக ஒருவராகத்தான் இருக்க முடியும். காரணம் நான் நடுத் தெருவிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன் என்கிறார் ஏ. எஸ். பிரகாசம்.


ஒரு திரைக்கதை ஆசிரியனுக்கு மறக்க முடியாதது அவன் எழுதி, திரைக்கு வந்த முதல் திரைப்படம்.

திரைக்கதை எழுதச் சந்தர்ப்பம் தேடி அலைந்த என் கடும் தவம் கலையும் கடைசி மூச்சில், நான் கண்டுகொண்ட மக்கள் திலகத்தின் முதல் தரிசனத்தில், கிடைத்த வரமே என் முதல் திரைப்படம்!

அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ. இறுதியாண்டு மாணவர்க்கு நான் பயிற்ற வேண்டிய பாடம் - 'தமிழ் நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்'. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி பற்றிப் பேசுகிறேன்.

சென்னை அருணாசலம் ஸடுடியோ. படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரைப் பார்க்க கொடுத்து வைத்த பலபேர் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நடித்து அப்போது வெளியாகி உள்ள ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எம்.ஜி.ஆர். ஆர்வம் காட்டுகிறார்.

'அற்புதமான கதை' ஒருவர் ஐஸ் வைக்கிறார்.  'ஒவ்வொரு காட்சியும் ஜோர்' - ஒருவர் சோப்பு போடுகிறார்! 'சண்டைக்காட்சிகள் தூள்' என்று ஒருவர், 'பாடல்கள் எல்லாம் பிரமாதம்' என்று ஒருவர் - இப்படி அவரைச் சுற்றி பல காக்காய்கள் பறக்கின்றன!

இந்த முகஸ்துதியில் மரத்துப்போனவர் எம்ஜி.ஆர். தன் அருகில் நின்ற ஒருவரின் மௌனத்தைக் கலைத்து எம்.ஜி.ஆர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டு வைக்கிறார்.

கேட்டதும தான் தாமதம்! அந்த நபர் அந்தப் படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரேதப் பரிசோதனை பண்ணத் தொடங்குகிறார். குறைகளை எல்லாம் கூசாமல் குத்திக் காட்டுகிறார். 'அந்த அதிகப் பிரசங்கி'யின் அருகில் நின்று கொண்டிருந்த அவரது சகோதரர் மா. ராஜாங்கம் (அப்பொழுது உத்தம பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் திண்டுக்கல் எம்.பி.யாகி அஸ்தமித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வீ ரர்) பேசாதே என்று ஜாடையாக அந்த முந்திரிக் கொட்டையின் பின் சட்டையைப் பிடித்து இரகசியமாகச் சுண்டுகிறார்.

எம்.ஜி.ஆரோ அந்த இங்கிதம் தெரியாதவர் பேச்சை வெகு ஈடுபாட்டோடு கேட்கிறார். எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதையைக் கண்டதும் ராஜாங்கத்துக்கு சற்று நம்பிக்கை வருகிறது. அண்ணே 'இவர் என் சட்டகர்' பேரு ஏ.எஸ்.பிரகாசம். பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருக்கிறார்.

கதையெல்லாம் எழுதுவார். 'சுண்டிப் பாருங்க, செல்லுற காசா இருந்தா வாங்கிக்கங்க' என்று எனக்கு சிபாரிசு செய்யத் தொடங்குகிறார்.

'சுண்டவே வேணாம். இவர் செல்லுற காசுதான். நான் அனுப்பினேன்னு நீங்க வீரப்பாவை (ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆர். அப்படித்தான் சொன்னார்) போய்ப் பாருங்க' என்று எளிதில் திறவாத திரையுலக இரும்புக் கோட்டையை எனக்குத் திறந்து விடுகிறார்.

மண்ணுக்கேற்ற மதியூக மந்திரி - என் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஆர்.எம்.வி.யின் சத்யா மூவிஸ் கதவு, தட்டுவதற்குள் திறக்கிறது. திரையுலகில் என் கன்னி முயற்சி 'கண்ணன் என் காதலன்' என்ற படம் பிறக்கிறது.

திரைக்கு கதை எழுதச் சந்தர்ப்பம் கேட்டு நான் இதற்கு முன் எத்தனையோ கதவுகளைத் தட்டி இருக்கிறேன், திறந்ததில்லை. பிறருக்கு உதவுவது அவரின் பிறவிக் குணம்; தொட்டால் மண்ணும் பொன்னாகும் அவர் கைராசி - என்பதற்கு கோடியில் நான் ஒரு சாட்சி.

இந்த மறக்க முடியாத முதல் சந்திப்போடு படப் பிடப்பின் வேளையில் நான் நிழலாடி நின்றபோது - துணிச்சல் அவர் தொட்டில் பழக்கம், தீமையை எதிர்த்து நிற்பது அவர் தாயிடம் கேட்ட கீதை - என்பதைத் தெரிந்து கொள்ள எத்தனையோ நிகழ்ச்சிகள்!





‘‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘ராஜரிஷி’ என நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கேன். முதன்முறையாக அவரை வைத்து நான் இயக்கி, தயாரித்த படம் ‘சாதனை’. இதில் அவர் இயக்குனராகவே நடித்திருப்பார். சினிமாவுக்குள் வரும் சினிமாவில் இடம்பெறும் ‘ஓ வானம்பாடி உன்னை நாடி’ பாடல் காட்சிக்காக இளையராஜாவிடம் பாடலுக்கான சூழலை விவரிக்க, அதற்கு இளையராஜா மெட்டமைப்பது போன்ற காட்சியை நான் அவர்களிடம் விளக்கியபோது எடுத்த படம்தான் இது’’ என அதுபற்றி பகிர்ந்துகொள்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.பிரகாசம்.


‘‘கல்லூரி பேராசிரியராக இருந்துகொண்டே படங்களில் பணிபுரிந்தவன் நான். பல சினிமாக்களில் இயக்குனர்களாக நடிக்கும் கேரக்டர்களை கோமாளித்தனமாக சித்தரிக்கிறார்கள். ஒரு இயக்குனரின் பொறுப்புணர்வு, உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காகவே ‘சாதனை’ சிவாஜி கேரக்டரை வடிவமைத்தேன். இந்தப் படத்தில் எனக்கும் சிவாஜிக்கும் இடையே ஒரு சவால் எழுந்தது. ‘போதும் விடுங்கள்’ என்று படத்துக்குள் ஒரு வசனம் வரும்.

நளினிக்கு இந்த வசனத்தை ஒன்பது விதத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சிவாஜியிடம் சொன்னேன். ‘நவரசமெல்லாம் எதற்கு? மூன்று விதமாக மட்டும் சொல்லிக் காட்டுகிறேன்’ என்றார் சிவாஜி சார். ‘இயக்குனர்கள் எப்படியெல்லாம் நடிப்பை சொல்லித் தருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கும் தெரிய வேண்டும். ஒன்பது விதமாக சொல்வதுபோல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என பிடிவாதம் பிடித்தேன். ‘சரி, இந்த இடத்தில் நீங்கதான் டைரக்டர். அதனால நீங்க சொல்றதையே கேட்டுக்கிறேன்’ என்று கேமரா முன்பாக வந்தார்.

அடுத்த நொடியே, ‘போதும் விடுங்கள்’ என்ற வசனத்தை சிணுங்கல், வீரம், கோபம், அதிகாரம் என நவரசங்களிலும் நளினிக்கு அவர் சொல்லிக் கொடுக்க, ஷூட்டிங் பார்த்தவர்கள் கைதட்டி ரசித்தார்கள். ஆனாலும் சிவாஜி, ‘தியேட்டரில் இந்தக் காட்சியை ரசிக்க மாட்டார்கள்’ என்றார். ‘பெரிய வரவேற்பு கிடைக்கும்’ என்றேன் நான். ‘என்ன பந்தயம்?’ என்ற சிவாஜி, என்னிடம் செல்லமாக ஒரு பெட் கட்டினார்.

படம் ரிலீஸ் ஆனது. பெரும்பாலும் ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் உள்ள சிவாஜி, நாகேஷிடம் சொல்லி அவருடைய தியேட்டரில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்து படம் பார்த்தார். நாங்கள் பந்தயம் வைத்த காட்சி வந்தபோது ஒட்டுமொத்த ரசிகர்களும் கைதட்ட, உடனே என்னை அழைத்த சிவாஜி, ‘நீ சொன்னது தான்யா கரெக்ட்’ என்று பாராட்டினார். பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டிய மிகப்பெரிய குணம் இதுதான் என்பதை அன்றும் மெய்ப்பித்தார் அவர்.

நடிகர் கமல்ஹாசன் 1974ல் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். தமிழில் 1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்சினையால் இப்படம் வெளியாக தாமதமானது. இதனால், ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம்.




திரைப்படம் : ஆளபிறந்தவன்

நடித்தவர்கள்: சத்தியராஜ் , ஜீவிதா , அம்பிகா , சில்க் சுமிதா

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: சங்கர்கணேஷ்

வெளியிடப்பட்ட ஆண்டு: 1987


திரைப்படம் : சாதனை

நடித்தவர்கள்: சிவாஜி கணேசன் , பிரபு , K.R.விஜயா , நளினி

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: இளையராஜா

வெளியீடு: 10-01-1986


திரைப்படம் : ஆயிரம் நிலவே வா

நடித்தவர்கள்: கார்த்திக் முத்துராமன் , சுலக்‌ஷனா

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: இளையராஜா

வெளியிடப்பட்ட ஆண்டு: 1983


திரைப்படம் : எச்சில் இரவுகள்

நடித்தவர்கள்: ரூபா , பிரதாப்

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: இளையராஜா

வெளியிடப்பட்ட ஆண்டு: 1982



திரைப்படம் : ஒத்தையடி பாதையிலே

நடித்தவர்கள்: ஜெய்கணேஷ் , பௌர்ணமி

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: சங்கர்கணேஷ்

வெளியீடு: 10-01-1980


திரைப்படம் : மழை மேகம்

நடித்தவர்கள்: முத்துராமன் , சாரதா

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வெளியிடப்பட்ட ஆண்டு: 1977


திரைப்படம் : பட்டாம்பூச்சி

நடித்தவர்கள்: கமல்ஹாசன் , ஜெயசித்ரா , செந்தாமரை

இயக்குனர்: ஏ.எஸ்.பிரகாசம்

இசை: போன்டியாலா ஷ்ரீனிவாசன்

வெளியிடப்பட்ட ஆண்டு: 1975


இயக்குனர் ஏ.எஸ் பிரகாசத்தின் படங்கள் காலத்தால் அழியாதவை. அவரை பற்றி தற்போதிருக்கும் சினிமா ரசிகர்களும் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.