புதன், 29 ஜனவரி, 2020

இரட்டைமலை ஒண்டி கருப்பண்ணசாமி / கருப்பசாமி



திருச்சி கோரையாற்றின் கரையில் உள்ள இரட்டை மலையில் ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. மலையின் மேல் பகுதியை குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைக்குள் செல்ல ஒன்றரை அடி நீளம், அகலத்தில் சிறிய நுழைவு வாயில் உள்ளது. இந்த வழியாக படுத்து ஊர்ந்தபடி 6 அடி தூரம் சென்றால், மற்றொரு அறை இருக்கும். கோயில் திருவிழாவின்போது பயன்படுத்தப்படும் ஐம்பொன், இட்டாலியம் மற்றும் உலோகங்களால் ஆன சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஆடி திருவிழாவின்போது, சாமியிடம் உத்தரவு கேட்டு இவை வெளியே எடுக்கப்படும். உத்தரவு கிடைக்காமல் 3, 4 ஆண்டுகள்கூட இவற்றை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த பொருட்களை நாகப்பாம்பு ஒன்று காவல் காப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி நாளை மறுநாள் கிடா வெட்டு, பொங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. குகைக்குள் இருந்த சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வெளியே எடுப்பதற்காக நேற்று முன்தினம் குகைக்கு வெளியே பால், முட்டை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். மலைக்காளி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின், மருளாளிகள் தண்டபாணி, ஒண்டிமுத்து, பூசாரிகள் நாகராஜன், முத்து ஆகியோர் குகை வாசலில் சூடம் ஏற்றி வழிபட்டனர். பின்னர், குகை கதவை திறந்து படுத்தபடி ஒருவர் பின் ஒருவராக 4 பேர் உள்ளே சென்றனர். உள்ளே கிடந்த முட்டை ஓடுகள், பால் பாக்கெட்களை எடுத்து போட்டனர். குகைக்குள் விளக்கேற்றி வழிட்டனர். பின்னர் அங்கிருந்த சாமி சிலைகள் மற்றும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே கொண்டு வந்தனர். குகைக்குள் இருந்து நாகப்பாம்பு வெளியே வரலாம் என்று பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் வராததால் ஏமாற்றமடைந்தனர்.

மருளாளி தண்டபாணி கூறுகையில், ‘‘நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த காரைகாச்சி (கள்ளரில் காரையாட்சி / காரைக்காச்சி பட்டம் உடையவர்கள் ) கரையினர் மட்டுமே ஆடி துவக்கத்தில் இருந்து விரதமிருந்து, குகைக்குள் சென்று, சிலைகள் மற்றும் பொருட்களை எடுத்து வர முடியும். குகைக்குள் சென்றதும், சூடம் ஏற்றி வழிபடுவோம். அந்த வெளிச்சத்தில் நாகப்பாம்பு உள்ளதா என்பதை பார்த்துக் கொள்வோம்’’ என்றார்.

மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் காரையாட்சி / காரைக்காச்சி என்ற  பட்டங்களை பெற்றனர் என்று தனது ஆய்வில் கிருபாகரன் ராசகண்டியர், இன்டர்நேஷனல் கள்ளர் பேரவை தலைவர் குறிப்பிடுகிறார்.

வேட்டை கருப்பர்

இரட்டமலையில் உள்ளது இந்நடுகல்சிலை. இந்நடுகல் வேட்டைக்கருப்பு என அழைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். இந்நடுகல் இரண்டு அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்தொகுதியில் வெட்டரிவாள், மழு, அம்பு, கொடுவாள், கத்தி, குத்தீட்டி என காட்டப்பட்டுள்ளது. கீழ்தொகுதியில் வீரன் ஒருவன் குதிரையை இழுத்து வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். அவன் அருகே பெரிதாக வெட்டரிவாள் காட்டப்பட்டுள்ளது. "பனையூர் வாழ்க்கை" எனும் இடத்தில் (இவ்வூர் பராந்தகன் கால திருச்செந்துறை கல்வெட்டிலும் வருகிறது) கன்றாப்பில் எனும் ஊரைச்சேர்ந்த, "வேட்டன் மதிரை" என்பவர் காவு(உயிர்ப்பலி) கொடுக்கிறார். அதனை காப்பாற்றுவோரின் பாதம் என் தலைமேல் என்கிறார்.என்ன காரணத்தினால் இதைசெய்தார் என குறிப்பில்லை. இதனை "காலமுக்கியங்குழு" என்ற குழுவின் ஆணைக்கிணங்க செயல்படுத்துகின்றனர். அநேகமாய் அவர்கள் பலியிட்டது குதிரையாய் இருக்கலாம். இவ்வாறு குதிரையை பலியிடும் முறை எங்கேயும் இல்லை.  எனவே அரிதாய் பலியிட்டதனால் இக்குதிரைக்கு "நினைவுக்கல்" எடுப்பித்திருக்கலாம்.






அன்று குதிரையை காவு கொடுத்த 'வேட்டன் மதிரை' என்று வேட்டைக்கருப்பாக வணங்கப்படுகிறார். இன்றும் இக்கோவிலில் நிறைய பலிகள் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதுபோன்ற போர்க்கருவிகள் சூழ குதிரையுடன் கூடிய நடுகல் தமிழகத்தில் எங்கும் இல்லை. தகவல் : திரு. பார்த்தி கத்திக்காரர் 


காசினாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார்



தொழில்முறை இந்திய கபடி விளையாட்டு வீரராவார். இவர் சர்வதேச விளையாட்டுகளில் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கபடி பயிற்சியாளராக வழிகாட்டுகிறார். இவர் தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். இவர் சர்வதேச அணிகள் மற்றும் கபடி போட்டிக் குழுக்களின் உரிமையாளர்களுக்கு தொழில்முறை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளராகவும், புரோ கபடி உரிமையாளரான தமிழ் தலைவாசின் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்.

இவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலர் மற்றும் ஒரு பயிற்சியாளராக இருப்பதைத் தவிர, இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறார்.



கே.பாஸ்கரன், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள சூலியகோட்டையில் பிறந்த காசிநாதன் சிட்டாச்சியார் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் நான்காவது குழந்தையாகா ஜூன் 28, 1968 ஆண்டு பிறந்தார் . இவர் அம்மாப்பேட்டை சாலியமங்கலம் சுலியக்கோட்டை அரசுப் பள்ளியில் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெங்களூர் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார்.

இவர் 12 வயதில் கபடி விளையாடத் தொடங்கினார். இவர் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது புகழ் பெற்றார். இந்தியன் புரோ கபடி குழுவுக்கு பயிற்சியாளராகவும், 2016 கபடி உலகக் கோப்பையில் பயிற்சியாளராகவும் இணைந்ததிலிருந்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார். 

கே. பாஸ்கிரன் பி. பிரபா என்பவரை மணந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மகன் பி. சூர்யா, ஒரு வட்டெறிதல் தடகள வீரர் மற்றும் இரண்டு மகள்கள் பி. நீதா மற்றும் பி. நீராஜா இருவரும் கூடைப்பந்து விளையாடுகிறார்கள்.

பாஸ்கரன் தனது பள்ளி நாட்களில் திரு. சுவாமிநாதன் மற்றும் திரு. சண்முகசுந்தரம் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழக கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியாளருமான இராஜராஜேந்திரன் என்பவரால் கபடி விளையாடுவதற்கு இவர் ஈர்க்கப்பட்டார். குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இவர் 1984-85ல் இரண்டாம் இடத்தையும் 1985-86ல் முதல் இடத்தையும் பிடித்தார். 1987 ஆம் ஆண்டில் இவருக்கு மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. 1989-92 வரை, இவர் சென்னை ஐ.சி.எப்பிற்காக விளையாடினார். 1992-98 காலப்பகுதியில் இவர் ஒரு மதுரை மத்திய கலால் துறையில் காவல் ஆய்வாளராக பணி புரிந்தார். 2003-05 முதல் அவர் ஏர் இந்தியாவுக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடினார்.

2004 ஆம் ஆண்டில், பாஸ்கரன் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் ஒரு சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இளையோர் கபடிக் குழுவின் இந்திய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் சர்வதேச கவனத்திற்கு வந்த இவர் தாய்லாந்து தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் அவர் மலேசிய தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2010 ஆசிய விளையாட்டுக்களுக்கான தயாரிப்பு மற்றும் தேர்வு செயல்முறைகளுடன் முக்கியமாக தொடர்புடையவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற கடற்கரை ஆசிய விளையாட்டு 2014 க்கான இந்திய ஆண்கள் கபடி அணிக்கு வழிகாட்டினார். இந்த நிகழ்வில் அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.



புரோ கபடி போட்டிகள்

2014 ஆம் ஆண்டில் புரோ கபடி போடிகள் தொடங்கியது. கபடிக்கான விளையாட்டு நிகழ்வு இந்தியாவின் பல்வேறு கபடி உரிமையாளர்களிடையே விளையாடியது. தொடக்க நிகழ்வில் பிங்க் பாந்தர்ஸ் உரிமையை அதன் முதல் வெற்றிக்கு கே. பாஸ்கரன் வழிநடத்தினார். 2014 முதல் 2016 வரை பிங்க் பாந்தர்ஸ் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2016 முதல் புனேரி பால்டன்ஸ் உரிமையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். நான்காவது பருவத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். [3] [4] [5] புரோ கபடி 2017 இல் தமிழ் தலைவாசின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.

புரோ கபடி கூட்டிணைவின் விசாக் வேர்ல்விண்ட்ஸின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.

சர்வதேச கபடி போட்டிகளில் இந்தியா மறுக்கமுடியாத வெற்றியை பெற்றுள்ளது. 2016 கபடி உலகக் கோப்பை பன்னிரெண்டு நாடுகளிடையே நடத்தப்பட்டது. இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பாஸ்கரன் செயல்பட்டார். அந்த அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றியாளாராக மாறியது.

சனி, 25 ஜனவரி, 2020

கோட்டூர் (திருக்கோட்டூர்)


திருத்துறைப்பூண்டி - மன்னார்குடிப் பேருந்து வழியில் கோட்டூர் உள்ளது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 111 ஆவது தலம் கோட்டூர் (திருக்கோட்டூர்) அருள்மிகு தேன்மொழிப்பாவை உடனுறை கொழுந்துநாதர். மரம்: வன்னி , குளம்: முள்ளியாறு . இறைவரின் திருப்பெயர்:- கொழுந்துநாதர். இச்செய்தி, ``கொந்துலாமலர் விரிபொழிற் கோட்டூர் நற்கொழுந்தினை`` என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தரது தேவாரப் பகுதியால் விளங்குகின்றது. இறைவியாரின் திருப்பெயர்: தேன்மொழிப் பாவை.

தேவர்களும், குச்சர இருடிகளும் பூசித்துப் பேறு எய்தினர். இச்செய்திகள் இவ்வூர்த்தேவாரத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளன.

கோட்டூரில் மேற்கிலுள்ளதே இப்பாடல்பெற்ற தலமாகும். இவ்வூருக்குக் கிழக்கில் ஒரு கோயில் இருக்கிறது. இது கீழ்க்கோட்டூர் மணியம்பலமாகும். அது கருவூர்த்தேவர் திருவிசைப்பாப்பெற்றது. இது திருஞானசம்பந்தப் பெருமானாரால் பாடப்பெற்றது. அவருடைய பதிகம் ஒன்று இருக்கின்றது.

இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சோழர்களுடையன. இவைகளுள் விளக்குத்தானம், விளக்குப்பணதானம், கோயிலுக்கு நிலதானம், முதலியவைபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்றில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூரில் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் என்ற ஒரு பெருமகனார் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதில் சேக்கிழார் தம்பியாரது பெயர் வருதல் காண்க. திருத்தருப்பூண்டி மடாதிபதி திருமாளிகைப் பிச்சர் பெயர் காணப்படுகிறது.




இத்திருக்கோயிலில் பெயர் குறிப்பிடப்பெறாத 

பரகேசரி வர்மன் காலத்தது ஒன்று, 

முதலாம் இராஜராஜ சோழன் காலத்தது ஒன்று, 

முதற்குலோத்துங்கசோழன் காலத்தன நான்கு, 

இரண்டாம் இராஜாதி ராஜன் காலத்தன ஐந்து, 

மூன்றாங் குலோத்துங்கன் காலத்தன நான்கு, 

மூன்றாம் இராஜராஜன் காலத்தன நான்கு, 


ஆக சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள் பத்தொன்பதும், ஒருவயலில் நட்டுவைத்துள்ள தஞ்சை மராட்டிய மன்னருடைய கல்வெட்டு ஒன்றும், மற்றொரு வயலில் நட்டு வைத்துள்ள தளவாய் அனந்தராயர் சாஹேப் கல்வெட்டு ஒன்றும் , ஒரு தோப்பில் நட்டு வைத்துள்ள தஞ்சை இரகுநாத நாயக்கர் காலத்தது ஒன்றும், மற்றொரு தோப்பில் நட்டு வைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றும் ஆக மொத்தத்தில் 23 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், இரண்டாம் இராஜாதிராஜன் கல்வெட்டில், கொழுந்தாண்டார் என்றும் மூன்றாம் இராஜராஜதேவன் காலத்தில் மூலஸ்தானம் உடையார் என்றும், தஞ்சை மராட்டிய மன்னர் (மகாராஜா சாஹேப்) கல்வெட்டில் கொழுந்தீசுவர சுவாமி என்றும் கூறப்பெற்றுள்ளனர்.

முதலாம் இராஜராஜ சோழதேவர் காலத்தில் இவ்வூர், அருண்மொழித் தேவவளநாட்டு நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் முதல் குலோத்துங்கன் கல்வெட்டில் இராஜேந்திர சோழவள நாட்டுத் நென்மலிநாட்டிலுள்ள கோட்டூர் எனவும் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே அருண்மொழித்தேவ வளநாடு என்றும் பெயர் பெற்ற செய்தி புலனாகின்று.

மேலும் இக்கோயிலிலுள்ள முதற் குலோத்துங்க சோழ மன்னனது 27-ஆம் ஆண்டுக்கல்வெட்டு, இவ்வூர், அருண்மொழித் தேவவள நாட்டிற்கு உட்பட்டிருந்ததையும், அம்மன்னனது 50ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு இவ்வூர் இராஜேந்திர சோழ வளநாட்டிற்கு உட்பட்டிருந்ததையும் உணர்த்துவதால் இராஜேந்திர சோழ வளநாடு என்னும் பெயர் முதற் குலோத்துங்க சோழனது ஆட்சி யின் பிற்பகுதியில் ஏற்பட்டது என்பது உறுதியாகும். (இராஜேந்திர சோழன் என்பது முதற் குலோத்துங்கனுடைய பெயர்களுள் ஒன்றாகும்.)

மூன்றாங் குலோத்துங்க சோழதேவரின் இரண்டாம் ஆண்டில் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் பல்லவ அரையன் களப்பாளராயர் ஒரு நுந்தாவிளக்கினுக்குப் பணம் உதவி யுள்ளார். இரகுநாத நாயக்கர் பத்து வேலி நிலத்தைக் கொடுத்துள்ளார்.

இத்திருக்கோயிலில் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருளுவித்தவர் நாகமங்கலமுடையான் அம்பலங் கோயில் கொண்டவர் ஆவர். இச்செய்தி மூன்றாம் இராஜராஜசோழ தேவரின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்ததாகும்.

இவ்வம்பலங் கோவில் கொண்டவர், இம்மன்னனது 18ஆம் ஆண்டில் இப்பிள்ளையார்க்குத் திருவமுது உள்ளிட்டவைகளுக்கு நிலம் அளித்துள்ளார். அதில் இப்பிள்ளையார், திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளையார் எனக்குறிக்கப் பெற்றுள்ளனர்.

இராஜேந்திரசோழ வளநாட்டு வெண்டாழை வேளிர்க் கூற்றத்துத் திருத்தருப்பூண்டியில், திருமாளிகைப் பிச்சர் என்ற மடபதியைப்பற்றி மூன்றாங் குலோத்துங்கசோழதேவரது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது.

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1913, page 52, 54; Inscription No. 443 - 465.)


கிபி 1800 - களிலேயே ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் (Tanjore Gazeeter, HemingWay-1906) கோட்டூர் ஶ்ரீ கொழுந்தாளை மாரியம்மனை தரிசிக்க.






திருப்பணி நன்கொடையாளர்கள் கள்ளர்களின் கனகம்பாடியார், தென்கொண்டார், மழவராயர்

புதன், 22 ஜனவரி, 2020

112 வயது வரை வாழ்ந்த வெங்கடாசலம் சிட்டாட்சியார்

பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் 18 மார்ச் 2015 ல் காலமானார்.

110 வயதுக்கும் மேல் வாழ்பவர்களைத்தான் Supercentenarians என அழைப்பார்கள். இவர்கள்குறித்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் UK ஆகிய நான்கு நாடுகளின் தகவல்களை இதற்காக எடுத்துக்கொண்டனர். 1968 முதல் 2006-ம் ஆண்டுக்கு இடையே வாழ்ந்த Supercentenarian-களை பட்டியலிட்டனர்.

1997-ம் ஆண்டில் 122 ஆண்டுகள் வரை வாழ்ந்த பிரெஞ்ச் பெண்ணான ஜீன் கால்மென்ட் என்பவர்தான் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறார். நோய்த்தொற்றுகள் மற்றும் உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன்மூலம் முதியவர்களின் வாழ்நாளும் சராசரி வாழ்நாளை விடவும் அதிகமாகும். குறிப்பாக, வயதாகும் காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்க, தீர்வுகளைக் கண்டுபிடித்தால் முதியவர்களின் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சாதனையில் கள்ளர் குடியில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 112 வயது வெங்கடாசலம் சிட்டாட்சியார் ஒருவர்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் சூழியகோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்பாவு சிட்டாச்சியார், இவரது மகன் வெங்கடாசலம் சிட்டாட்சியார்(112), இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து தனது 23 வது வயதில் ரூ.18 டிக்கெட் கட்டணத்தில் கப்பலில் சிங்கப்பூர் சென்று அங்கு 7 ஆண்டுகள் தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து தனது 30வது வயதில் சொந்த ஊருக்கு வந்து சொந்த ஊரில் வாழ்ந்து வந்த தனது மூத்த சகோதரியின் மகள் அலமேலு (90) என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் வழியில் 3 பேரன், 2 பேத்திகளும், அவர்கள் வழியில் 4 கொள்ளுப் பேரன் 2 கொள்ளுப் பேத்திகளும் உள்ளனர். இவர் தனது இளமை காலத்தில் சுபாஷ்சந்திரபோஸ் கொள்கைகையில் பற்று கொண்டவராக வாழ்ந்து வந்தார்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

"சொல்வேந்தன்" கம்பம் செல்வேந்திரன் தேவர்



தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கம்பம் செல்வேந்திரன். பிரமலை கள்ளரில் பூசலபுரம் கோயில் கும்பிடுபவர்.

1984-ல் அதிமுக சார்பாக போட்டியிட்டு பெரியகுளம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியிலும் "மாநில கொள்கை பரப்பு செயலாளராக" இருந்தவர். திமுகவில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்.

தன்னை அதிமுகவில் இருந்து விலக்க காரணமாக இருந்த "சேடபட்டி முத்தையா" அரசியல் அனாதையாக இருந்த போது கலைஞரிடம் முறையிட்டு திமுகவில் சேர்த்த நல் உள்ளம் கொண்டவர்.

"நீட் தேர்வு" பிரச்சனையால் அனிதா இறந்த போது பாஜ தமிழிசை சௌந்திரராஜன் +2வில் வெறும் 800 மார்க் தான் எடுத்தார். கலைஞர் அவர்கள் முதல்வர் கோட்டாவில் தமிழிசைக்கு மருத்துவ சீட் கொடுத்தார் என்ற உண்மையை உடைத்தார்.

அரசியல் உலகம் செல்லாமல் திரை உலகம் சென்று இருந்தால் "வைரமுத்துவிற்கு" இணையாக உயரும் அளவிற்கு இலக்கிய அறிவு கொண்டவர்.

2006-ல் தேர்தலில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது இவர் வென்றால் "கல்வி அமைச்சர்" என்று வெளிப்படையாகவே கூறினார்கள்.

ஆனால் சாதி சார்பற்ற இவரை 1986-ல் கள்ளர் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் நடந்த கலவரத்தை மையபடுத்தி இவரை 1800 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்தார்கள்.

ஒரு வேளை அன்று இவர் வெற்றி பெற்று இருந்தால் எங்கள் ஏரியாவில் புதிய பள்ளி மற்றும் கல்லூரி தோன்றி இருக்கும்.

அப்படி இருந்தும் 2006-ல் கிடைத்த "டெல்லி சிறப்பு பிரதிநிதியை" வைத்து எங்கள் ஏரியாவில் சாதி பார்க்காமல் பல நல்ல காரியங்கள் செய்தார்.

தற்போது திமுகவில் உயர் மட்ட குழு உறுப்பினராக உள்ளார்.

அடுத்த ராஜ்யசபா தேர்தலில் இவருக்கு திமுக ராஜ்யசபா எம்பி வழங்கினால் பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் சிறந்த குரல் ஒன்று ஒலிக்கும்.

அன்புடன்: கூடலூர் செந்தில் தேவர்

வியாழன், 16 ஜனவரி, 2020

இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் தேவர்



கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு :

இந்திய ராணுவ கர்னல் சுபாஷ் தேவர் பெருமிதம் 


மதுரை மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் தேவர் இவர் பிரமலைக்கள்ளர்சமூகத்தில் பிறந்தவர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி கர்னல் அந்தஸ்தை பெற்றவர் .

இவரது மனைவி வணிக வரித்துறை இணை ஆணையர் திருமதி ராஜி சுபாஷ் இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2014 ம் ஆண்டு வீல்ஸ் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர் .

தற்போது அறக்கட்டளையின் மூலமாக இலவச வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில் அரசு சீருடைப்பணிகளுக்கான தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை மற்றும் சேவை மையத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதனை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் ,

கிராமப்புற பகுதியை சார்ந்த மாணவ மாணவிகள் காவல்துறை ,ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல தேர்வுகளுக்கு தயாராகிற வகையிலும் மற்ற அரசு தேர்வுகள் குறித்த விபரங்களை அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்தும் அவற்றிற்கு பதிவு செய்வதற்கான ஆன் லைன் வசதியும் செய்து தரப்பட்டுளள்து மேலும் பிரத்யேக பயிற்சி வகுப்புகள் துறை வல்லுநர்களால் அளிக்கப்பட உள்ளது.

பிரமலைக்கள்ளர் சமூகம் மட்டுமல்ல அனைத்து கிராமத்து மாணவர்களும் அரசுப்பணியில் சேரவேண்டும் என்பதே எனது லட்சிய இலக்கு என உரையாற்றினார்.

நன்றி
கள்ளர் முரசு

தங்கமங்கை ப. அனுராதா உத்தமுண்டார்





அனுராதா உத்தமுண்டார் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கபதக்கம் வென்றுக்கொடுத்து தமிழத்திற்கும், புதுக்கோட்டை மண்ணிற்கும் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சையில் காவல் ஆய்வாளராக பணி செய்துவருகிறார்.

இரண்டாம் இராசேந்திரசோழன் உத்தங்கொண்டார், உத்தமுண்டார் (யுத்தமுண்டார்) என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டவர். இவன் வழிவந்த புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த ஐயா. பவுன்ராஜ் உத்தமுண்டாரின் மகளும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவருமான அனுராதா உத்தமுண்டார் ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், 87 கிலோ உடல் எடைப் பிரிவில் கலந்துகொண்டு, ஸ்னாட்ச் முறையில் 100 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ எடையைத் தூக்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெளியிலிருந்தும் அவரைப் பலர் பாராட்டி வருகிறார்கள். கடந்த 2009-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அனுராதா வெங்கலப்பதக்கம் வென்றார். அடுத்த முயற்சியில், இப்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


பதக்கம் வென்ற அனுராதா உத்தமுண்டார், சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்க புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அனுராதாவின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம பொதுமக்கள் எனப் பலரும் விமான நிலையத்திற்கு வருகைதந்து, தங்க மங்கை அனுராதா உத்தமுண்டாருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். சால்வை மற்றும் ரோஜாப்பூ மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனுராதா உத்தமுண்டார், “காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக, எனக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பளுதூக்கும் போட்டியில், சீனியர் பிரிவில் தமிழகத்திற்குக் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் நான் வாங்கியதுதான் என்பதில் பெருமைகொள்கிறேன். விளையாட்டுப் போட்டியில் பலர் பயிற்சிபெற்றிருந்தாலும் அவர்கள் பதக்கம் வெல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை.


தென்மாவட்டங்களில் பளுதூக்குதல் பயிற்சிபெற வசதி ஏற்படுத்திக்கொடுத்தால், பலரும் பதக்கம் பெறலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தந்தை சிறுவயதில் இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரர் ஊக்கத்தினாலேயே இந்நிலையை எட்டியுள்ளேன். பெண்கள் போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு வந்தபோதும், என்மீது எனது சகோதரர் வைத்த நம்பிக்கையும், அவர் அளித்த தொடர் உத்வேகமும் என் வெற்றிக்கு வழி வகுத்தது. புதுக்கோட்டையில் பயிற்சிபெற போதிய வசதி இல்லாததால், கடந்த 2014-ல் பட்டியாலா சென்று அங்கு பயிற்சி மற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

2015-ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை பெற்றேன். அதன்பிறகு, காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்தது. அடுத்து ஃபெடரேஷன் மற்றும் காவல்துறை மூலம் பல்வேறு உதவிகள், ஊக்கமும் கிடைத்தன. பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணம் பொதுவாகப் பலருக்கும் உள்ளது. அதைத் தவிர்த்து, நம்மால் முடியும் என்ற முனைப்பில் அனைவரும் முயன்று, என்னைப்போல பதக்கங்களைப் பெற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். தொடர்ந்து 2024 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று, அதன்மூலம் ஒலிம்பிக்போட்டியில் தகுதிபெற்று இந்தியாவிற்குப் பதக்கம்வெல்வதுதான் எனது லட்சியம்”என்றார்.



அனுராதாவை வரவேற்க வந்த அவரது உறவினர்கள், ”அனுராதாவின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அனுராதா சின்னப்பிள்ளை. அதன்பிறகு அவங்க அம்மா ராணியும் அண்ணன் மாரிமுத்து உத்தமுண்டாரும் ரொம்ப கஷ்டப்பட்டு அனுராதாவை வளர்த்தார்கள். அனுராதாவின் அப்பா இறந்தபிறகு அவரது அம்மா விவசாய வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில்தான் பிள்ளைகளை வளர்த்தார். அடுத்து, அண்ணன் 12 வயதுக்கு மேல் படிக்காமல் வேலைக்குப் போனார். அம்மாவும் அண்ணனும் சம்பாதித்த பணத்தில் அனுராதாவின் பயிற்சிக்கு கட்டினார்கள். அனுராதா சின்னவயதில் இருந்து விளையாட்டில் சுட்டி. கபடி நல்லா விளையாடும். கபடி வீராங்கனையாக வருவார் என எதிர்பார்த்தோம். அதைவிட பளுதூக்குவதில் அவருக்கு ஆர்வம். எம்.எஸ்சி வரை படித்த அனுராதா, பஞ்சாப் -க்கு சென்று என்.ஐ.எஸ் எனும் படிப்பை படித்தார்.

அவரின் வெற்றிக்காக அவரது அண்ணன் மாரிமுத்து அனுராதா உத்தமுண்டாரும் அம்மா ராணியும் பல கஷ்டங்களைச் சுமந்தார்கள். பெண் பிள்ளைகள் அதிகம் விளையாடக் கூடாதென்று அறிவுரை சொல்வாங்க. அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், அனுராதா விருப்பப்படி விளையாட அனுமதித்தார்கள். வறுமையிலும் அனுராதா சாதித்திருக்கா என்றால், அவளின் தன்னம்பிக்கைதான் காரணம். அதுதான் அனுராதா எங்க ஊருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கு” என்றார்கள் கெத்தாக.


பள்ளிப்படிப்பின்போது கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டுத்துறையில், குழு விளையாட்டில் சாதிப்பதைவிட தனி நபராக முயற்சி செய்தால், அரசு வேலை கிடைக்கும் என அண்ணனின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். கல்லூரியில் படிக்கும்போது, தமிழக அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்குபெற வாய்ப்புகள் இருப்பதை அறிந்த நான், முயற்சி செய்துபார்க்கலாம் என சேர்ந்தேன், தமிழக அளவில் வென்று இந்திய அளவில் போட்டியிட தேர்வானேன்,'' என்கிறார் அனுராதா உத்தமுண்டார்.

2009ல் அனுராதா உத்தமுண்டார் முதன்முதலில் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோபிரிவில் முதல் இடத்தை வென்றபோது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

''எங்கள் ஊரில் பயிற்சி மையங்கள் கிடையாது. பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களை பார்ப்பது கூட அரிது. எனக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் இல்லை. முதல்முறை கிடைத்த வெற்றி, நான் மேலும் பளுதூக்கும் போட்டியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துவிட்டது. பட்டமேற்படிப்பு படிக்கும்போது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன்,'' என அவரது பதக்க பட்டியலைப் பற்றி பேசினார் அனுராதா உத்தமுண்டார்.

''ஜிம் போக வேண்டும் என முடிவு செய்தபோது மிகவும் தயக்கமாக இருந்தது. எங்கள் ஊரில் பேருந்து வசதி இல்லை. நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். ஜிம்மில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். தொடக்கத்தில் நான் பயிற்சி முடிக்கும்வரை காத்திருந்து அண்ணன் என்னை அழைத்துச் செல்வார். என் ஊரிலும், வெளியிடங்களிலும் எனக்கு ஏற்படும் தயக்கத்தை நான் துடைத்துவிட்டு முன்னேறவேண்டும் என முடிவுசெய்த பிறகு, என்னை நோக்கி வந்த எல்லா கிண்டல் பேச்சுகளை கையாள தெரிந்துகொண்டேன்,'' என்றார் அனுராதா உத்தமுண்டார்.

உறவினர்கள் பலரும் பளுதூக்கும் போட்டியில் அனுராதா பங்கேற்பதை விமர்சித்தபோதும், அவரது ஊக்கம் குறையவில்லை. ''பளுதூக்கும் போட்டி என்பது ஒரு விளையாட்டு என்ற புரிதல் பலருக்கும் இல்லை. அதிலும் பெண்ணாக இருப்பதால், இதில் பங்கேற்றால், என் உடல் மாறிவிடும் என பலர் குறைகூறுவார்கள். அவர்களின் வார்த்தைகளை சுமப்பதுதான் சில காலம் சிரமமாக இருந்தது. தொடர்ந்து நான் சாதனைகளை குவித்ததால், அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்,''என்கிறார் அனுராதா உத்தமுண்டார்.

பட்ட மேற்படிப்பை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை படித்தார். 2017ல் உதவிஆய்வாளர் வேலைக்கான தேர்வு வந்தபோது, அதில் தேர்வாகி வேலைக்கு சென்றால், அண்ணன் மற்றும் தாய் ராணிக்கும் உதவமுடியும் என்பதால், தனது விளையாட்டு ஆர்வத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார்.
காவல்துறையில் பணிபுரிவோருக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டி இருந்ததால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் திறமையை கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றதால், கமான்வெல்த் போட்டியில் பங்கேற்க அடுத்த வாய்ப்பு என்னை தேடிவந்தது. அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸ்தான்,'' என சொல்லும்போதே அனுராதா உத்தமுண்டார் உறுதி அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

பெண்கள் விளையாட்டுதுறையில், அதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் என்று கூறும் அனுராதா, ''பஞ்சாப்பில் படித்த சமயத்தில் அங்குள்ள பதின்பருவ பெண்கள் ஆர்வத்துடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்ததது. எத்தனை வாய்ப்புகள் உள்ளன, நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,''என்கிறார்.

தற்போது அனுராதாவின் வெற்றிகளை கண்ட அவரது நெம்மேலிப்பட்டி கிராமத்தில் பெண்குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று கூறும் அவர், ''கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி அல்ல, விளையாட்டும் சேர்த்துத்தான் என்ற புரிதல் குறைவாக உள்ளது. உடல்நலன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதை வலியுறுத்தவேண்டும்,''என்கிறார்.


அனுராதா வெற்றிக்காகச் சுமந்தது பளுவை மட்டுமல்ல. வறுமையையும்தான். வறுமை, சாதிக்கத் தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் அனுராதா உத்தமுண்டார்.

சிலம்பாட்ட வீராங்கனை செ. அபிநயா காடவராயர்



கள்ளர் நாடான விசங்கிநாட்டு, பூதலூர், விண்ணமங்களம்   செந்தில் குமார் காடவராயாரின் மகள் காடவராயர் வீட்டு நாச்சியார் அபிநயா காடவராயர், ஒற்றை சிலம்பம் சுற்றுவதில் மாநில அளவில் முதலிடம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

திங்கள், 13 ஜனவரி, 2020

கள்ளர் வாழ்வியல் பொங்கல்





பொங்கல் திருநாள் முதுகுடி கள்ளர் பெருமக்களுக்கு பண்பாட்டு அடியாளமாக காலங்காலமாக திகழ்கிறது.



கள்ளர் சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பொங்கல் திருநாளில் மட்டுமே மகிழ்ச்சி நிறைந்த பண்பாட்டு அடையாளமாக உள்ளது.

இதனை அவர்களின் திருமண பந்தம் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஆம் காலங்காலமாக அனைத்து கள்ளர் நாட்டிலும் திருமணமான ஆணுக்கு தலைப் பொங்கல் தினத்தன்று பெண் வீட்டின் சார்பாக மைத்துனரால் மாப்பிள்ளைக்கு விருந்து வைத்து அவருக்கு பொங்கல் முறையாக கொடுக்க வேண்டிய பொருட்கள் :-

5  மரக்கால் அரிசி
5  மண்பானைகள்
5  உலோகப்பானைகள்
5  கொத்து வாழைப்பழங்கள்
5  தேங்காய்கள்
5  மண்டை வெல்லங்கள்

முதலான பொருட்களுடன் பெண் வீட்டாரின் மனப்பூர்வமான ஆசிர்வாதத்துடன் மணமகனுக்கு முறை செய்யப்படுகிறது.

இதில் நாட்டார் கள்ளராகிய கிளைவழி கள்ளர்கள் மட்டும் தலைப் பொங்கலுக்கு மணமகனுக்கு, பெண் வீட்டார். 

கிடாய் அரிசி என்ற முறை கொடுக்கப்படுகிறது.

ஒரு கிடாய்
ஒரு சேவல்
முட்டையிடா கோழி
5 மரக்கால் அரிசி
5 மண்பானைகள்
5 உலோகப்பானைகள்
5 கொத்து வாழைப்பழங்கள்
5 தேங்காய்கள்
5 மண்டை வெல்லங்கள்

மற்றும் அப்பெண் இறக்கும் வரை புது துணி அப்பெண்ணின் சகோதரர் வாங்கி கொடுக்க வேண்டும். இம்முறைக்கு பெயர் கிடாய் அரிசி என்பதாகும்.

ஒவ்வொரு தமிழர் பண்டிகையிலும் அத்தமிழரின் முதுகுடி கள்ளர் பெருங்குடிகளின் வாழ்வியல், தனித்துவத்துடன் பிரதிபலிப்பது மட்டற்ற மகிழ்ச்சியே.

கீழே இனைக்கப்பட்டுள்ள புகைப்படம்:-


பெருமைமிகு பட்டுக்கோட்டை பண்ணைவயல் சேர்வைக்காரர் குடும்பத்தார் கிடாஅரிசி கொண்டு செல்லல்....!

தஞ்சையில் பல கிராமங்களில் கள்ளர்கள் தீபாவளி அன்று புது துணிகள் எடுப்பது இல்லை. பொங்கல் மட்டும் புதுத்துணிகள் எடுத்து சிறப்புடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறார்கள்.


நன்றி
Caste and tribes of south India

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

சித்தர்கள் கள்ளர்






சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்கள் வருமாறு;-

திருமூலர்
இராமதேவ சித்தர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வால்மீகி
கமலமுனி
போகர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்தி தேவர்
போதகுரு
பாம்பாட்டி சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்தர்
குதம்பைச்சித்தர்
கோரக்கர்


இவர்களில் கோரக்கர், பதஞ்சலி இருவரும் கள்ளர் குடியில் பிறந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 





ஞாயிறு, 12 ஜனவரி, 2020

விசங்கிநாட்டு தென்கொண்டார் எழுப்பிய கோயில்



மலையடிப்பட்டி பெருமாள் கோயிலில் உள்ள புதுக்கோட்டை கல்வெட்டு எண்:943, கூறும் செய்தியின்படி 5-16 ஆம் நூற்றாண்டில் தெம்மாவூரில் இருக்கும் அரையன் தென்கொண்டான் என்பவன் நாச்சியார்க்கு கோயில் கட்டியதாக குறிப்பிடுகிறது.


கல்வெட்டு:-

" தெம்மாவூரிலிருக்கும் அரைய
ர்களில் செல்ல பொக்கன் புத்தி
ரன் மங்கான் தென்கொண்டான்
நாச்சியார்ரும் கொவிலும் உண்டா
க்கினார் புண்ணியம் தென்கொண்டான்"

தெம்மாவூர் அரையன் தென்கொண்டான் நாச்சியாருக்கு சிலை அமைத்து கோயில் கட்டியதாக கல்வெட்டு விளக்குகிறது. 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோயிலுக்கு அருகில் கமலவல்லி நாச்சியார் எனும் கோயில் இன்றும் பொலிவுடன் விளங்குகிறது.




தென்கொண்டான் பவம்சாவளி கள்ளர்கள் இன்றும் இந்த கோயிலில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள விசங்கி நாட்டின் உள்நாடான கீழ செங்கிளி நாட்டில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(Manual of pudukkottai state vol 1 page 111)


வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மீசெங்கிளி நாட்டு புலியூர் ( விசங்கி நாட்டு விசலூர் சிவன் கோயில் கல்வெட்டு) 




தெம்மாவூர்  பூர்வீகமாக கொண்ட கோவிந்தராஜன்  தென்கொண்டார்  





அறிஞர் அண்ணாதுரை தென்னமநாட்டில் வானொலி பெட்டி (Radio) திறந்து வைத்து சுமார் இரண்டு மணி நேரம் உரை நிகழ்த்தினார். துரையுண்டார் தெருவிற்கும் சொசைட்டிக்கும் இடையில் தான் இந்த போட்டோ எடுக்கப்பட்ட இடம். தேதி 10.06.1960. அறிஞர் அண்ணாதுரையுடன்   கோவிந்தராஜன்  தென்கொண்டார்  





ஶ்ரீ கண் நிறைந்த பெருமாள் சன்னதி






விசங்கிநாட்டின் சிதறல் நாடான செங்கிலிநாட்டு கள்ளர்களின் நாட்டுக்கூட்டம் விசலூரில் நடைபெறும்:-



களவு, காவல் என திட்டமிட செங்கிலி நாட்டுக்கள்ளர்கள் கூடுமிடம் விசலூர். செங்கிலிநாட்டு கள்ளர்தலைவர், கள்ளரின முன்னோர்கள் (Chiefs,Clans) அனுமதிபெற்றபிறகே அனைத்தும் முடிவு செய்யப்படும்!

வெள்ளாளர் கிராமமாக திகழ்ந்த விசலூர் அருகே உள்ள கிராமத்தை சார்ந்த கள்ளன் ஒருவன் விசலூர் வெள்ளாளர் வீட்டு பெண்ணை காதலித்து,பெண்கேட்டு செல்ல அப்பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார். அதன்பிறகு விசலூர் வெள்ளாளர்கள் அனைவரும் வேறொரு கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

விசலூர் நடனமங்கையோடு ஈர்ப்பு கொண்டிருந்த வெள்ளாளர் ஒருவரையும், அப்பெண்ணையும் கொன்றுவிட்டனர். இவ்விருவரும் பட்டவர்களாக இன்று உள்ளனர்.மலையாள தேசத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் விசலூர் வந்த ஒரு பக்தர் ஒருவர் பட்டவராக, கருப்பனாக வணங்கப்படுகிறார்.

விசங்கிநாட்டு விசலூர்!



பச்சையாக உள்ளது செங்கிலிநாடு என குறிக்கப்பட்ட கல்வெட்டு


விசிங்கிநாடு




ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

நன்றி : பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார்