திங்கள், 23 டிசம்பர், 2019

திருச்சி வரலாற்றில் திருச்சி மலைக்கோட்டை - கள்ளர்



தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு  சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த  சோழமன்னன். தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை,  பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்)



தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்ற பெருமைக்குரிய திருச்சிராப்பள்ளி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சினாப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்டது. மலைக்கோட்டையை அடையாளமாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் பெயரிலேயே மக்களவைத் தொகுதியும் அமைந்துள்ளது.



திருச்சி மாநகரத்தை சுற்றி கள்ளர் மரபினர்கள் நிறைந்து வாழும் பகுதிகள் ( புறநகர் அல்லாது)

வடக்கு பகுதி : வண்ணாரப்பேட்டை, உறையூர்,  பிச்சாண்டாவர்கோவில், பளூவூர்.

தெற்கு பகுதி: காஜாமலை, கொட்டபட்டு, சாத்தனூர், கல்லுக்குழி, இச்சிக்காமலைபட்டி, செங்குறிச்சி.

மத்திய பகுதி : ஒத்தக்கடை

மேற்கு பகுதி : சின்னமிளகுபாறை, கருமண்டபம், பெரியமிளகுபாறை, வயலூர், பெருங்குடி, எட்டுமான் திடல்.

கிழக்கு பகுதி:  ஜெயில்தெரு, பெரியகடை வீதி, முதலியார் சத்திரம், காந்தி மார்க்கெட், முடுக்குபட்டி, பொன்மலைபட்டி, கிழக்குறிச்சி, கல்க்கண்டார்கோட்டை, திருவெரும்பூர்.

நாம் திருச்சி மலைக்கோட்டையை பார்க்கும்போதெல்லாம், அதன் பிரமாண்ட அமைப்பும், மலைஉச்சியில் அமைந்துள்ள கோயிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு, மலையின் உச்சியை மிஞ்சும் அளவிற்கு வீரம் மிகுந்த கள்ளர்கள் திருச்சி மலைக்கோட்டையில் செய்த போர்கள் நினைவுத்துளிகளில் வந்து வியப்பை ஏற்படுத்தும். வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வீரம் செறிந்த நிகழ்வுகள் சிலவற்றை காண்போம்.


பீஜப்பூர் சுல்தான்களை தோற்கடித்தல்:


கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களின் படைத்தளபதிகள் முல்லா மற்றும் ஷாஜி என்பவர்கள் தலைமையில் துலுக்கர் படைகள் முதலில் நாயக்கர் வசம் இருந்த தஞ்சையை தாக்கினர். தாக்குதலை சமாளிக்க இயலாத தஞ்சை நாயக்க மன்னர் ஒடி மறைந்தார். தஞ்சையை சூரையாடிய பின் துலுக்கர்கள் திருச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். திருச்சி நாயக்கர் படைதளபதி லிங்கம நாயக்கர் தலைமையில் வலுவான படை இருந்ததால், கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. துலுக்கர் படையின் ஒரு பிரிவினர் திருச்சியின் மற்ற பகுதிகளை சூரையாடி மக்களை வதைக்க தொடங்கினர். இச்சமயத்தில் கள்ளர்கள் இரவு நேரங்களில்,எதிர்பாரா தாக்குதல்களை பீஜப்பூர் படை மீது நடத்தினர். அவர்களின் முகாம்களை தாக்கி சூரையாடி தவிடு பொடியாக்கினர். தாக்குதல்களை சமாளிக்க இயலாத பீஜப்பூர் படை திருச்சியை விட்டு அகன்றனர். அங்கு மதம் பரப்ப வந்த போதகர்கள் தங்களது குறிப்புகளில், தமிழகத்தின் மீது படையெடுத்த சுல்தான்கள், மன்னர்களின் படையைவிட, கள்ளர்களின் திடீர் தாக்குதல்களை கண்டே அஞ்சி நடுங்கியதாக கூறியுள்ளனர்.

(Tamilaham in 17th century: page 73)

மராத்தியரை விரட்டியடித்த கள்ளர்ப்படை:-


கிபி 1682ல் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் வசம் இருந்த திருச்சி மலைக்கோட்டையை மராத்தியர் தாக்கினர் கைப்பற்றினர். தாக்குதலை சமாளிக்க இயலாத நாயக்கர், புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். அம்புநாட்டு கள்ளர்களுடன் தொண்டைமான் மலைக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் கள்ளர்கள் பெரும் ஏணிகளை கொண்டும், கயிறுகளை பயன்படுத்தியும் கோட்டை மதில்களை தாண்டி உள்ளே சென்று, தொடர்ந்து போரிட்டு மராத்தியர்களை விரட்டியடித்தனர். இந்த உதவியால் மகிழ்ந்த திருச்சி நாயக்கர், அம்புநாட்டு கள்ளர்களை 12 மாவட்டங்களின் தலைமை காவல் அதிகாரிகளாக நியமித்தனர். புதுக்கோட்டை தொண்டைமானுக்கு திருச்சியை பாதுகாக்கும் அரசு காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
(General history of pudukkottai state 1916 R Aiyar Page 121)

கர்நாடக நவாப்பை கருவறுத்தல் :-


கிபி 1741 ல், கர்நாடக நவாப் சந்தா சாகிப் வசமிருந்த திருச்சி கோட்டையை மீட்க, புதுக்கோட்டை கள்ளர்களும் தொண்டைமானும் மராத்தியரோடு சேர்ந்து நவாப்பை தாக்கினர். கள்ளர்களும், மராத்திய படையும் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்தி மலைக்கோட்டையை கைப்பற்றினர். கோட்டையை ஆக்ரமித்து இருந்த சந்தா சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை தொண்டைமான் வீரத்தை கண்டு வியந்த மராத்திய தளபதி வட்டா சிங் என்பவன், மன்னருக்கு வஜ்ஜிருடு எனும் பட்டத்தை அளித்தான். இதன் பொருள் " தன்னிகரற்ற போர்வீரர் " என பொருள்படும்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 183 )

ஐதரதாபாத் நிசாம் படையை விரட்டியடித்த கள்ளர்கள்:


கிபி 1743 ல், ஐதராபாத் நிசாம் பெரும்படை கொண்டு தமிழகத்தை தாக்கினான். மதுரையும் நிசாமிடம் வீழ்ந்தது. திருச்சி கோட்டையை கைப்பற்ற தாக்குதல் நடந்து வந்தது,அச்சமயம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்கள் நிசாம் படையின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். நிசாம் படையின் முகாம்களை துவம்சம் செய்து ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் வண்டி மாடுகளை கவர்ந்து சென்றனர். நிசாம் படை இழந்ததை மீட்க கள்ளர் நாட்டை தாக்கியது. ஆனால் அவர்களை நினைத்ததை போல கள்ளர்களை எளிதில் வெல்லமுடியாததால் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நிசாம் படை ஒடிவிட்டதாக அங்கு மதபோதனைகள் செய்து வந்த பாதர்கள் குறித்துள்ளனர்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 184)(The letter of madura mission to rome 1743)

மராத்திய படைகளை சூரையாடல்

.

கிபி 1745ல் நிசாம் வசமிருந்த திருச்சி கோட்டையை கைப்பற்ற மீண்டும் மராத்திய படை திருச்சியை தாக்கியது. திருச்சியை தாக்கியது மட்டுமில்லாமல், திருச்சி முதல் ஆவூர் வரையிலான பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கிறிஸ்தவர்கள் தப்பி புதுக்கோட்டை கள்ளர்களிடம் சரணடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பலிவாங்க கள்ளர்கள் திருச்சி கோட்டை அருகே முகாமிட்டு இருந்த மராத்தியரை தாக்கினர். கிட்டதட்ட 3000 பேர் கொண்ட மராத்தியரின் குதிரைப்படை கள்ளர்களால் சிதறடிக்கப்பட்டது. முகாமில் இருந்த தளவாடங்கள் கள்ளர்களால் கவரப்பட்டது. தாக்குதலுக்கு மிஞ்சிய மராத்திய குதிரைப்படை வீரர்கள் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு, மாறுவேடங்களில் நடந்தே தஞ்சைக்கு சென்றதாக மதபோதகர்கள் தங்களது குறிப்புகளில் எழுதியுள்ளனர்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 186)
(The letter of madura mission to rome 1746)

சந்தாசாகிப்போடு மற்றுமொரு போர்:


கிபி 1751ல் சந்தா சாகிப் மீண்டும் திருச்சியை கைப்பற்றினான். கர்நாடக நவாபின் மற்றொரு பிரதிநிதியான முகமது அலியும், பிரிட்டீசாரும் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 400 பேர் கொண்ட குதிரைப்படையும், 3000 கள்ளர்களை கொண்ட காலாட்படையும் அனுப்பி திருச்சி கோட்டையை தாக்கி கைப்பற்றினார்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 189)

சந்தா சாகிப்பின் இறுதி நாள் :-

கிபி 1752ல் திருச்சியை இழந்த சந்தா சாகிப், ஆலம் கான் என்பவனிடம் உதவி கோரினான். ஆலம் கான் என்பவன் சந்தா சாகிப் படையில் பணியாற்றி தளபதிகளில் ஒருவன். 2000 பேர் கொண்ட குதிரைப்படையை திரட்டி மதுரை மற்றும் திருநெல்வேலியை கைப்பற்றுகிறான் ஆலம்கான். சந்தா சாகிப்பிற்கு உதவ திருச்சி நோக்கி விரைந்தான். தொண்டைமான் அரசவைக்கு சென்ற ஆலம் கான் தனக்கு உதவினால் பெரும் நிலப்பரப்பை தருவதாக கூறினான். ஆனால் தொண்டைமானோ, உதவ மறுத்துவிட்டார். திருச்சி கோட்டைக்கு தொண்டைமான் நாட்டில் இருந்து வரும் பொருட்களை தடுத்து நிறுத்த ஆலம் கான் புதுக்கோட்டை - திருச்சி சாலைகளில் தாக்குதல்களை நடத்தினான். இதையறிந்த தொண்டைமான் தனது படையுடன் சென்று ஆலம் கானை திருச்சி இரட்டைமலை பகுதி வரை விரட்டினார். அங்கு யானை மேல் அமர்ந்து இருந்த ஆலம் கான் பீரங்கி குண்டால் கொல்லப்பட்டான். 200 க்கும் மேற்பட்ட ஆலம்கான் படையினர் கொல்லப்பட்டனர். திருச்சி கோட்டை முழுவதும் தொண்டைமான் உதவியுடன் முகமது அலியின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
(General history of pudukkottai state R aiyar page 191)

ப்ரெஞ்சுக்கு எதிராக போர்:


கிபி 1760 திருச்சி கோட்டையை கைப்பற்ற ப்ரெஞ்சு மற்றும் ஐதர் அலி கூட்டணி முயற்சி செய்தது. ஆங்கிலேயர் மற்றும் ஆர்காடு நவாப் தொண்டைமான் உதவியை நாடினர்.தொண்டைமான் 100 பேர் கொண்ட குதிரைப்படை மற்றும் 1000 பேர் கொண்ட காலாட்படையை அனுப்பி ப்ரெஞ்சு கூட்டணி தாக்குதலில் இருந்து திருச்சி கோட்டையை காத்தார்.
(General history of pudukkottai state R aiyar page 226)

ஐதர் அலியிடம் இருந்து திருச்சியை காத்தல் :

கிபி 1781 ல் ஐதர் அலி பெரும்படையோடு திருச்சி கோட்டையை தாக்கினான். தொண்டைமான் தனது படையை அனுப்பி ஐதர் அலி படையிடம் போரிட்டு திருச்சி கோட்டையை காத்தார். பின்வாங்கிய ஐதர் அலி படைகள் திருக்காட்டுப்பள்ளியை தாக்கி பலரை கொன்று குவித்தான். ஆங்கிலேயர் படைகள், தொண்டைமான் அனுப்பிய கள்ளர் படையுடன் சேர்ந்து ஐதர் அலி படைகளை திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பின்வாங்க செய்தது.
(General history of pudukkottai state R aiyar page 267)

திப்பு சுல்தானிடம் இருந்து திருச்சியை காத்தல் :


கிபி 1790 ல், ஐதர் அலியின் மகன், திப்பு சுல்தான் மீண்டும் திருச்சி கோட்டையை தாக்கினான். திருச்சியில் மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டு, மாடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 1500 பேர் கொண்ட கள்ளர் படையை அனுப்பி, திப்புவின் படைகளை திருச்சியில் இருந்து பின்வாங்க செய்தார்.
(General history of pudukkottai state R aiyar page 291)


திருச்சியின் Kallar police force



கிபி 1816 ல் திருச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாராம்பரிய காவல் துறை முறை ஒழிக்கப்பட்டு ஆங்கிலேய காவல் முறை புகுத்தப்பட்டது.

 ஆனாலும் திருச்சி நகரத்தில் மட்டும் கள்ளர்களின் காவல் முறை தொடர்ந்தது. கள்ளர்களிடம் இருந்து திருச்சியின் காவல் உரிமையை மீட்க பிரிட்டீசார் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என 1878 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Trichinopoly gazetter எனும் நூலில் Lewis Moore குறிப்பிட்டுள்ளார்....

 

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் திருச்சிராப்பள்ளி கோட்டைக்கும், கள்ளர்களுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை நமக்கு உணர்த்தும். திருச்சி மலைக்கோட்டை பல செங்குறுதி வரலாறுகளை தன்னகத்தே கொண்டு, இன்று மௌன சாட்சியாக தனது பழம்பெருமைகளை அசை போட்டுக்கொண்டு உள்ளது.

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்