1656-ல் இவர்களை மேற்பார்த்து வந்த திருச்சிராப்பள்ளி நாய்க்கர் (வைசிராய்) ஆன குப்பாண்டி யென்பவர் காந்தலூருக்குச் சென்று அங்குள்ள பாதிரியைப் பயமுறுத்திப் பணங்கேட்டபொழுது, அப்பாதிரி கள்ளர்களின் பாதுகாவலில் இருந்ததனால் அவர்களுக்கும் குப்பாண்டி நாய்க்கருக்கும் பெரிய சண்டை யுண்டாயிற்று' என்று ரெவரெண்டு காஸ்டெட்ஸ் கூறியிருக்கின்றார். 1745-ல் முராரி ராவுக்குக்கீழ் மகாராட்டிரர் படையெடுத்தபொழுது ஆவூரிலுள்ள பாதிரிகளும், மற்றைய கிறிஸ்துவர்களும் கூனம்பட்டியில் அடைக்கலம் புகுந்தனர் என்று தெரிகிறது, இங்ஙனம் பலவுள. அடைக்கலம் புக்காரைப் பாதுகாப்பதில் தம்முயிரையும் பொருட்படுத்தாப் பெருந்தன்மை வாய்ந்தவர் இக்கலத்தினரென்பது துணிபு.