திங்கள், 26 ஜூன், 2023

பொ. ஆ. 1886~1928 - பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர்


முந்தைய ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்றுப் பேரனான இந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் 1875 நவம்பர் 26இல் பிறந்தார். தாயார் பிரஹதாம்பாள் ராஜாமனி சாஹேப். இவருடைய தந்தை கொழந்தைசாமி பல்லவராயர் சாஹேப் அவர்கள்.

ராமச்சந்திர தொண்டைமானின் மூத்த மகளான இந்த பிரஹதாம்பாள் பாயி சாஹேபின் மூன்றாவது மகன் இப்போது அரச பதவிக்கு வந்திருக்கும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். ராமச்சந்திர தொண்டைமான் தனக்கு ஆண் வாரிசு இல்லாமையால், இந்த மார்த்தாண்ட பைரவரை இளம் வயதாக இருக்கும்போதே சுவீகாரம் எடுத்துக் கொண்டார். 

இவர் பதினொரு வயதுடையவராயிருக்கும் பொழுது. 1886-ல் திருக்கோகரணத்தில் இவருக்கு முடி சூட்டு விழா நடந்தது. சிறு வயதிலேயே இம்மன்னர் தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளில் மிக்க தேர்ச்சி பெற்றார். 19-வது வயதிலிருந்து இராச்சியத்தைத் தாமே பார்த்து வருவாராயினர். குதிரை யேற்றம் முதலியவற்றில் அளவு கடந்த திறமையுடையவர். மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் கேம்பிரிட்ஜ் கல்வியாளரான ப்ரெடரிக் ஃபீல்டன் கிராஸ்லி என்பவரிடம் அரண்மனையிலேயே கல்வி கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய மார்த்தாண்ட பைரவர் விளையாட்டுத் துறையிலும் தலை சிறந்த வீரராகத் திகழ்ந்தார். தமிழகத்தின் இதயத்தானத்திலுள்ள புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் என்றாலும், இவருக்கு மேல்நாட்டு கலாச்சாரம் பழக்க வழக்கம் இவைகளில் அதிகம் நாட்டம் இருந்தது.   


இவரது பாட்டனாரும் முந்தைய மன்னருமான இராமச்சந்திர தொண்டைமான் 1886 ஏப்ரல் 15இல் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின் இறந்து போனார். அப்போது பதினோரு வயதே ஆன மார்த்தாண்ட பைரவருக்கு மன்னராகப் பட்டம் சூட்டி, அவர் சார்பில் ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள திவான் ஏ.சேஷயா சாஸ்திரி தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மார்த்தாண்ட பைரவர் மேஜர் ஆகும் வரை ஆட்சியை கவனித்து வந்து அவருக்கு வயது வந்தவுடன் ஆட்சிப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தது. அப்படி மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தினம் 1894 நவம்பர் 27ஆம் தேதி. அவருக்கு ஆங்கிலேயர்கள் சார்பில் சென்னை கவர்னராக இருந்த லார்டு வென்லாக் என்பவர் முழு அதிகாரத்தையும் அளித்தார்.





மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவிக்கு வந்தவுடன் மனோவர்த்தி நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று மனுச்செய்தார். மனோவர்த்தி நிலங்கம் என்பது நான்கு கிராமங்களை உள்ளடக்கியது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் இந்த நிலங்களைத் தன்னுடைய ராணிகளில் மூவரின் தனிப்பட்ட சொத்தாக அறிவித்திருந்தார். மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை, ஆகையால் மனைவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த மனோவர்த்தி நிலங்கள் எனப்படும் நான்கு கிராமங்களும் அவருக்கு மனைவிகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் போயிருக்கும், ஆனால் அவர் திருமணமாகாதவராயிருந்த படியால் அந்த கிராமங்கள் தன் பெயருக்கு வந்து விடவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கையை ஆங்கில கம்பெனி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.                     


மண் உப்புக் காய்ச்சுவதால் புதுக்கோட்டை அரசாங்கத்தார்க்கும், ஆங்கில அரசாங்கத்தார்க்கும் ஏற்பட்ட வழக்கு இம் மன்னர் காலத்தில் முடிவுற்றது. 


இம் முடிவுப்படியே ஆங்கில அரசாங்கத்தார் ஆண்டு தோறும் முப்பத்தெட்டாயிரம் ரூபாய் இம்மன்னருக்கு கொடுக்கம்படி நேரிட்டது. புதுக்கோட்டை அரசாங்கத்தில் மூன்று லட்சம் ஏக்கர் நிலம் வரையிலும் இனாமாக விட்பபட்டிருந்தது. இந்த இனாம் நிலங்கள் பகுதி நிலங்களைவிட மிகுதியாயிருந்தன. ஆதலால் ஆங்கில அரசாங்கத்தாரின் யோசனைமேல் இனாம் நிலங்களையெல்லாம் அளந்து சிறிது வரிவித்தனர். அதனால் ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு தோறும் அரசாங்கத்திற்கு மிகுவதாயிற்று. பயிர் செய்யாத தரிசு நிலங்களெல்லாம் பயிர் செய்யப்பட்டு நிலக்காரரெல்லாம் பணக்காரராயினர். இவர் காலத்தில் பட்டணம் சீர்திருத்தப்பட்டது. கல்லூரி மருத்துவ நிலையம், அலுவலம் இவற்றின் கட்டிடங்கள் திருத்தி அமைக்கப்பெற்றன. நீதி இலாக்காவும் மீண்டும் திருத்தி அமைக்கப்பெற்றன. இதன் படி மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதி மன்றம் ஆக 1887-ல் அமைக்கப்பட்டது.



1898-ல் இவர் ஐரோப்பா கண்டத்திற்குப் போக வேண்டியிருந்தமையால் , திவான், தமையனாகிய விஜய ரகுநாத துரை ராஜா இவர்களிடத்தில் அரசாட்சியை விட்டுச் சென்றனர், ஐரோப்பாவில் பல இடங்களுக்ச் சென்று பிறகு இங்கிலாந்துக்ச் சென்ற பொழுது இளவரசர் ஏழாவது எட்வர்ட் மன்னரால் தமது அரண்மனையில் மே மாதம் 23ந் தேதி வரவேற்று சிறப்பிக்கப்பட்டார், ஜுலை 14ல் மகாராணியார் தமது அரணமனையில் வரவேற்று கெளரவப் படுத்தினார்கள். 1898 நவம்பரில் இவ் வேந்தர் புதுக்கோட்டைக்கு திரும்பி பொழுது மக்கள் இவரைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். மகாராணியார் இம் மன்னரைவரவேற்று கெளரவப் படுத்தியதற்கு அறிகுறியாகப் புதுக்கோட்டையில் நகர மன்றம் (டவுன் ஹால்) கட்டப்பெற்றது.





1902-ல் 30 உறுப்பினர் அடங்கிய பெருமக்கட் கழகம் (மக்கள் பிரதிநிதிச் சபை) ஒன்று அமைக்கப் பெற்றது. மக்களுடைய குறைகளை யெல்லாம் தீர்த்து வைப்பதற்கு இக்கழகம் பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. 1907ல் இருந்து இதில் 18 உறுப்டபினர் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். வினைப்பொறுப்புக் கழகம் (காரிய நிர்வாக சபை) ஆனது திவான் , நாட்டுக்காவற் தலைவர் (ஸ்டேட் சூப்பரிண்டெண்ட்) ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி இவர்கள் அடங்கியதாகும. இம்மனர்காலத்தில் நாடு பல வழியிலும் சீர்திருத்தி மேனிலைக்குக் கொண்டுவரப்பட்டது. 1911 டிசம்பர் 12-ல் டில்லி மாநகரில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பெருமான் முடிசூட்டு விழாவுக்க இவ்வரசரும் அழைக்கப்பட்டிருந்தார்.

1913-ல் இவர் பட்டத்திற்கு வந்த இருபத்தைந்தாதவது ஆண்டு விழா புதுக்கோட்டையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது இவருக்கு ஜி.சி.ஐ.இ. (கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்) “Knight Grand Commander of the Order of the Indian Empire” என்னும் பட்டம் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது.






ல்லா சாதாரண மக்களுக்கும் திருமணம் வரை மனம்போல வாழ்க்கையும், திருமணம் எனும் கால்கட்டு ஏற்பட்டபின் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படுவது சகஜம் தானே. அப்படிப்பட்ட மாற்றம் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கும் ஏற்பட்டது.


1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்த்தாண்ட பைரவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அந்த நாட்டின் ஒரு பெரிய இடத்துப் பெண்ணான மோலி ஃபிங்க் என்பாரை மெல்போர்னில் உள்ள மெஜஸ்டிக் மேன்ஷன் எனும் ஓட்டலில் சந்தித்தார். கண்டவுடன் காதல் மலர்ந்தது. மோலியை மார்த்தாண்ட பைரவர் உயிருக்குயிராகக் காதலிக்கத் தொடங்கினார். அந்த மாதைத் தொடர்ந்து அவரும் சிட்னி நகருக்குச் சென்றார். அங்கு 1915 ஆகஸ்டில் மோலியிடம் மன்னர் தன் காதலை வெளிப்படுத்தினார். இந்திய சுதேச மன்னரான மார்த்தாண்ட பைரவரின் காதலை அந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பெண் ஏற்றுக் கொண்டு தன் சம்மதத்தையும் தெரிவித்தார். ரிஷி கர்ப்பம் இராத் தங்காது என்பர். இவர்களுடைய காதல் இனியும் காத்திருக்க விரும்பவில்லை.


1915 ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் இவ்விருவருக்கும் மெல்போர்ன் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதியருக்கு ஆஸ்திரேலியாவிலேயே 1916ஆம் ஆண்டு ஜுலை 22இல் ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுடைய பெயர் மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் என்பது. 


இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்த திருமணம்த்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆகவே அவர்கள் மோலி ஃபிங்கை ராணிக்கு உரிய மரியாதை தருவதையோ அல்லது அவர் நாடு திரும்பிய போது “மகாராணி” என்று அங்கீகரிக்கவோ இல்லை. இந்த நிலையில் 1915 அக்டோபரில் இந்தியா வந்து புதுக்கோட்டையை அடைந்த மோலி வெறும் ஐந்து மாதங்களே தாக்குப்பிடிக்க முடிந்தது, அத்தனை எதிர்ப்பு அவருக்கு அங்கே. சொந்த ஊரில் தான் விரும்பி மணம் புரிந்து வந்த மங்கைக்கு உரிய மரியாதை இல்லை என்பதை உணர்ந்த ராஜா மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிச் சென்றார். அங்கே அவர் 1916 முதல் 1919வரையிலும் இருந்து விட்டுப் பிறகு லண்டன் சென்றார்.


பிறகு கேன்ஸ் எனும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு வீட்டை வாங்கி வசிக்கத் தொடங்கினர். 1921இல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் எனும் உரிமையைக் கைவிட்டார். தன்னுடைய சகோதரரான ரகுநாத பல்லவராயர் என்பவரை தனக்குப் பதிலாக ராஜாவாக இருப்பார் என்று அறிவித்தார். மார்த்தாண்டர் பிரான்ஸ் நாட்டில் தன் மனைவி மோலியுடனும் மகன் சிட்னி தொண்டைமானுடனும் தங்கிவிட்டார். இவர் 1928ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் தேதி தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல மோலி அனுமதி கேட்டதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. ஆகவே அவர் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பல் லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் வைக்கப்பட்டது. 


மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை மன்னர் எனும் தகுதி மறுக்கப்பட்ட காரணத்தால் அவருடைய உறவினர் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் ராஜகுமாரனாகவும், அவருக்கு ரெஜண்ட் எனும் அமைச்சர் பதவியில் ரகுநாத பல்லவராயரும் இருந்து நிர்வாகம் செய்தனர்.


புதுக்கோட்டை மன்னர்(1886-1928), மாரத்தாண்ட பைரவ பல்லவராயரின் சமாதி!

இடம் :Golders Green Crematorium, London





இவ்வரசர் தமது சமஸ்தானத்திற்குச் செய்த சிறப்புடைய நன்மைகளாவன:-


1.புதுக்கோட்டைச் சீமையில் வேளாண்மையை வளம் சேர்க்கும் பொருட்டுக் கால்நடை மருத்துவ சாலையும், கால் நடைக் கண் காட்சியும் ஏற்படுத்தியதுடன், விதையும் உழவு மாடும் வாங்குதற்குக் குடியானவர்களுக்கு வட்டியின்றிப் பணம் கொடுத்துதவ ஏற்பாடு செய்தார்.

2.பல சாலைகளையும் வெள்ளாற்றுப் பாலத்தையும் உண்டாக்கி வாணிகம் பெருகும்படி செய்தார்.

3.பத்திரங்களைப் பதிவு செய்வதற்குத் தொலை விலுள்ளோர் புதுக்கோட்டைக்கு வரும் வருத்தம் நீங்குப்படி காப்புக்களரிகள்(பத்திர பதிவு அலுவலகங்கள்) பல இடங்களிலும் ஏற்படுத்தினார்.

4.புதுக்கோட்டை நகரத்தில் ஓர் பெரிய ஆங்கில மருத்துவ சாலையும் மற்றும் பல வைத்திய சாலைகளும் ஏற்படுத்தினார்.
5.நகரத்தில் வீதிதோறும் குழாய்கள் வைத்துப் புதுக்குளத்திலிருந்து நல்ல தண்ணீர் வரும்படி செய்தார்.

6.குழந்தைகள் சம்பளமின்றிப் படிக்கும்படி ஊர்தோறும் ஆரம்பப் பள்ளிக்கூங்கள் வைத்தார்.

7.தொழிற்சாலை, விவசாயசாலை முதலியன ஏற்படுத்தினார்.

8.எளியவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வாங்காது தொழில் செய்து வாழ்வதற்கு உதவியாகக் கூட்டுறவுத் தொழிற் சங்கங்கள் ஏற்படுத்தினார்.

9.நீதிமன்றத்தில் பெரிய குற்றங்களை விசாரிக்கும் போது நீதிபதிகளுக்கு உதவியாக இரண்டு அல்லது மூன்று அஸெஸர்கள் இருந்து நியாயம் வழங்க ஏற்பாடு செய்தார்.

10.மக்கள் பிரதி நிதிச் சபை ஏற்படுத்தினார்.

இவ்வரசர் மீது ‘ இயன்மொழி வாழ்த்து ‘ என்னும் ஓர் அழகிய தமிழ்ப் பிரபந்தம் ப்னனத்தூர் நாராயணசாமி ஐயர் என்னம் பலவரால் இயற்றப்பெற்று , மகா மகோபத்தியாய உ.வே. சாமிநாத ஐயர் அவரக்ளின் சாத்துக் கவியுடன் வெளிவந்துள்ளது.

அதிலே இவ்வேந்தர் பெருதைமகள்,
‘ தானந் தனியருள் ஞான முதலன
வுரிய நாயக னுத்தம குணநிதி
பெரியநா யகிபதம் பிரியா வுளத்தன்மு
னவிலும் விசயரகு நாதன் மகன் மக
னிவநெனக் கன்ன னிவனென நுவலும்
கராமடிந் திடச்சக் கரப்படை விடுத்த
இராம சந்திர வேநதல்சேயென
ஓராயிரந் தண்கதி ரொன்றா யுதித்தென
அராவணை யமல னருளொருங் குதித்தெனக்
குராவணி குமரவேள் குவலயத் துதித்தெனப்
பாராவருந் தருமம் பாரில் முளைத்தெனச்
சராசன மதனன் றனிவடி வெடுத்தென
இராசமுண் டலத்தி விவற்கிணை யிலையெனச்
சராதி டராசன் றொல்குலம் விளங்கத்
தராதவலம் விளங்கத் தவநெறி விளங்கப்
புராதன நான்மறை மபுவியிசை விளங்க
ஆவிர்ப் பவித்த வாசர் சிகாமணி’

என்று இங்ஙனம் பலவாறு சுறப்பட்டுள்ளன. 


"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்