திங்கள், 26 ஜூன், 2023

இராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் - (1825 ~ 1839)



முந்தைய மன்னர் காலமான பிறகு 1825 ஜூன் 4இல் பதவிக்கு வந்தவர் இந்த ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர். இவருடைய ஆட்சி 1839 ஜூலை 13 வரை நீடித்திருந்தது.

ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர் 1798இல் பிறந்தவர். இவருடைய தந்தையார் விஜய ரகுநாத தொண்டைமான். தாயார் ராணி ஆயி அம்மனி ஆயி சாஹேப் அவர்கள். விஜயரகுநாத தொண்டைமானின் இரு மகன்களில் இவர் இளையவர். இவர் அண்ணன் 2ஆம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1825இல்  காலமானதையொட்டி இவர் பதவிக்கு வந்தார்.

ரகுநாத தொண்டைமான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய மகுடாபிஷேகம் 1825 ஜூலை 20இல் நடந்தது.

பொறுப்பேற்றுக் கொண்டதும் தன் சகோதரரின் நினைவாக புதுக்கோட்டை நகருக்கு கிழக்கே இருபது வீடுகளை ஏற்படுத்தி விஜயரகுநாதபுரம் என்று பெயரும் இட்டார். அடுத்து தன் தந்தையின் நினைவாக இன்னொரு குடியிருப்பையும் ஏற்படுத்தி அதற்கு பிரசன்ன ரகுநாதபுரம் என்று பெயரிட்டார். இப்பெயர்கள் இன்றும் இவ்விடங்களுக்கு வழங்குகின்றன.

1837ஆம் ஆண்டில் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கென்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். திருச்சிக்கு அருகிலிருந்து காவிரி நீரை புதுக்கோட்டைக்குக் கொண்டு வரும் திட்டம் அது. ஆனால் அப்போதைய சமஸ்தானத்தின் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால் அந்தத் திட்டம் நிறைவேற்றப் படவில்லை.

ரகுநாத தொண்டைமான் மன்னரை அழைக்கவோ, பெயரைக் குறிப்பிடவோ அவர் பெயருக்கு முன்னால் “ஹிஸ் எக்செலன்சி” என்று குறிப்பிட வேண்டும் எனும் உத்தரவையும், இவருக்கு 17 பீரங்கி குண்டு வெடித்து மரியாதை செய்ய வேண்டுமென்றும் 1830 ஆம் வருஷம் உத்தரவு ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டது. இவரது செல்வாக்கு இதனால் மேலும் உய்ர்ந்தது.


1838ல் புதுக்கோட்டையில் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் போர் ஏதும் நிகழாமல் அமைதியாக நிர்வாகம் நடை பெற்றது. இசை, நாட்டியம்,இலக்கியம் ஆகியன இவரது ஆட்சியில் நன்கு வளர்ச்சியுற்றன. இம்மனரது காலத்தில் சுங்கவரிகள் எழிமையாக்கப்பட்டு சில வரிகள் ரத்தும் செய்யப்பட்டன்.

இவர் இரு மனைவியரைத் திருமணம் செய்து கொண்டார். முதலில் 1812ஆம் வருஷம் சூரியமூர்த்தி பன்றிகொன்றான் என்பவருடைய மகளையும், பிறகு ராணி கமலாம்பால் ஆயி சாஹேப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்கள் இரு மகள்கள் பிறந்தனர்.

இவர்களில் ராஜகுமாரி பெரிய ராஜாமணி பாயி சாஹேப் 1836இல் காலமாகி விட்டார். ராஜகுமாரி சின்ன ராஜாமணி பாயி சஹேப் 1840இல் காலமானார். மகன்கள் ராமச்சந்திர தொண்டைமான் (1829 – 1886), திருமலை தொண்டைமான் (1831 – 1871).

ராஜா ரகுநாத தொண்டைமான் 1839 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.

இவரை அடுத்து இவ்ரது மூத்த மகன் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மன்னரானார்.


"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் தொண்டைமான்