செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

யானைத் தமிழன் சிவாஜி கணேசன் மன்றாயர்



‘நீதானே சிவாஜி கணேசன்?‘-இப்படிக் கேட்டது காஞ்சி மஹா பெரியவர்.

‘ஆமாங்கய்யா ! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாராம் சிவாஜி.

காஞ்சிப்பெரியவர் – சிவாஜி சந்திப்பில், அப்புறம் நடந்ததை சிவாஜியே சொல்கிறார் :

"காஞ்சிப் பெரியவர் என்னிடம்  சொன்னார்.
“உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள்.

திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.

யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”- இப்படி பக்திப் பரவசத்தோடு சொல்லியிருக்கிறார் சிவாஜி.

#திருஆனைக்கா #யானை

அருள்மிகு ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் 1962-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 48 வருடங்கள் இறைப் பணியாற்றிய சாந்திக்கு, முதலாம் ஆண்டு நினைவு நாள்!’

 - திருச்சியில் வைக்கப்பட்டு இருக்கும் அந்த ஃப்ளெக்ஸ்களைப் பார்க்கும் அனைவரின் கண்களும் கலங்குகின்றன.

திருவானைக்காவில் அமைந்து இருக்கிறது, அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் கோயில். யானை இறைவனை பூஜித்து, காவல் காத்த ஸ்தலம் என்கிறது ஸ்தல புராணம். அதனால், ஊருக்கு 'திருஆனைக்கா’ என்று பெயர். இப்படி யானையோடு நெருங்கிய தொடர்புடைய கோயிலில், கோயில் யானை சாந்தி 1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கொடுத்தது.

தனது வீட்டில் இரண்டு வருடம் வளர்த்த யானையை, அதன் ஐந்தாவது வயதில் தானமாக அளித்தார். யானையை தனது குழந்தையைப்போல் பாசமாக வளர்த்து வந்த சிவாஜி, தனது மகள் சாந்தியின் பெயரையே யானைக்கும் சூட்டினார். திருச்சிக்கு வரும்போது எல்லாம் கோயிலுக்கு வந்து யானையைப் பாசமாகப் பார்த்துவிட்டுச் செல்வார் சிவாஜி. அவரது மனைவி கமலாவும் சாந்தி மீது மிகுந்த அன்போடு இருந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன்கள் யானையின் பராமரிப்பை

ஏற்றுக்கொண்டனர். அவரது மூத்த மகன் ராம்குமார் யானை இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து பார்த்துவிட்டு சென்றார். சாந்தியைப் பார்த்ததும், அவருக்கு சிவாஜியின் ஞாபகம் வந்துவிட்டதுபோல... யானையைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்!'' என்று சிவாஜி குடும்பத்துக்கும் சாந்திக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விவரிக்கிறார்கள் கோயில் ஊழியர்கள்.

#புன்னைநல்லூர் #யானை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த, "வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நினைவாக, 1960ல், 10 வயதுடைய யானையை, தன் இஷ்ட தெய்வமான, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு, சிவாஜி கணேசன் வழங்கினார். அந்த யானைக்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் இடம் பெற்ற, கதாபாத்திரத்தில் ஒன்றான, "வெள்ளையம்மாள்' என்ற பெயரை சூட்டினார். தொடர்ந்து, 25 ஆண்டுகள், மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்களை மகிழ்வித்த யானை, 1985ல், தஞ்சாவூர், பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தன், 63 வயதில் இறந்தது.