சனி, 24 ஆகஸ்ட், 2019

ஐந்து ஊர் நல்லதங்காள்








கள்ளர்களின் ஐந்து ஊர் நல்லதங்காள் - கொடிக்குளம். வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, பிறவியன்பட்டி, அகிலாண்டபுரம்



வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட நல்லதங்காள், தன் குழந்தைகள் ஏழு பேரையும் கிணற்றில் தூக்கிப் போட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபக் கதை நம் எல்லோருக்கும் ஏற்கெனவே தெரியும். மதுரை அருகே ஐந்து ஊர்களைச் சேர்ந்த மக்கள், இன்றும் அந்த நல்லதங்காளை தங்களது ஊர் காக்கும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

மதுரை- உசிலம்பட்டி பாதையில், மதுரையிலிருந்து 27-வது கி.மீ. தொலைவில் வருகிறது செல்லம்பட்டி. இங்கிருந்து வடக்கே சுமார் ஐந்து கி.மீ. தூரம் போனால், கரும்புத் தோட்டங்கள் தோரணம் கட்ட... கழனி நெல் முரசொலிக்க... நம்மை எதிர் கொண்டு அழைக்கிறது கொடிக்குளம். வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, பிறவியன்பட்டி, அகிலாண்டபுரம் - இந்த நான்கு ஊருக்கும் தாய் கிராமம் கொடிக்குளம். 

படிவுத் தேவன் என்பவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்குச் காவல்பணிக்கு சென்றார் (இங்குதான் நல்ல தங்காளும் அவள் குழந்தைகளும் உயிர் நீத்தனர்). நல்லதங்காளின் மறைவுக்குப் பிறகு வத்திராயிருப்பு மக்கள் அவளுக்குச் சின்னதாகக் கோயில் ஒன்றை எழுப்பி, நல்லதங்காளைக் குலதெய்வமாக வழிபடத் தொடங்கினர்.

எனினும், அந்தக் கோயிலைச் சரியான முறையில் கவனிக்க ஆட்கள் இல்லாத சூழல். இந்த நிலையில் அங்கு சென்ற படிவுத்தேவன், செல்வந்தர் ஒருவரிடம் பண்ணை காவல் பணியில் சேர்ந்தார். படிவுத்தேவன் காவல்காக்கும் போது, அங்கு வந்த பெண் குழந்தை ஒன்று அவர் வைத்திருந்த பிரம்புக் கூடைக்குள் படுத்து உறங்கி விட்டது. கூடைக்குள் குழந்தையை கண்ட படிவுத்தேவன் பேயோ, பிசாசோ தன்னை வந்து மிரட்டுவதாக நினைத்து அந்தக்குழந்தையைக் கீழே தூக்கி வீசிவிட்டுப் போனார்.

மறு நாள் அவர் காவலில் இருந்த இரண்டு மாடுகள் மாயமாக மறைந்தன. இதனால் மிரண்டு போன தேவன், பண்ணையாரிடம் விஷயத்தைச் சொன்னார். அதை நம்பாத பண்ணையார், தேவனை பிரம்பால் அடித்துத் துன்புறுத்தி, பட்டினி கிடக்கவும் விட்டார். பசி ஒரு பக்கமும், பயம் ஒரு பக்கமுமாகத் தூக்கத்தைத் துரத்த... பண்ணையார் வீட்டுத் திண்ணையிலேயே முடங்கிக் கிடந்தார் படிவுத்தேவன்.

அப்போது அவருக்கு எதிரே வந்து நின்ற அந்தப் பெண் குழந்தை, ‘‘அண்ணா... அண்ணா!’’ என்று குரல் கொடுத்து தேவனை எழுப்பியது. வாரிச் சுருட்டி எழுந்த தேவன், தனக்கெதிரே மீண்டும் அந்த குழந்தை நிற்பதைக் கண்டு மிரண்டார். சட்டென்று அவர் தொடை மீது ஏறி உட்கார்ந்த குழந்தை, ‘‘அண்ணே, நான்தான் நல்லதங்காள் வந்துருக்கேன். எனக்கு இந்த ஊருல இருக்கப் பிடிக்கலை. பேசாம என்னை வடக்கே இருக்கிற உங்க தேசத்துக்குத் தூக்கிட்டுப் போயிருண்ணே’’ என்றது.

ஆனால், படிவுத்தேவன் அதை நம்பவில்லை. அப்போது, ‘‘உங்கள் மாடுகள் இரண்டையும் இங்கிருக்கிற குளத்து தண்ணிக்குள்ள நான் ஒளிச்சு வெச்சுருக்கேண்ணே!’’ என்ற நல்லதங்காள், மறு விநாடியே அந்த மாடுகளை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினாள்.

நல்லதங்காளின் மகிமையை உணர்ந்த படிவுத்தேவன், குழந்தை வடிவ நல்லதங்காளைத் தன் பிரம்புக்கூடைக்குள் தூக்கி வைத்துக் கொண்டு புறப்பட்டார். அவர் கொடிக்குளத்து எல்லையைத் தொட்டபோது, ‘‘இங்கேயே என்னை தங்க வெச்சுருண்ணே’’ என்றாள் நல்லதங்காள்.

‘‘இங்கே எங்கு உன்னை உட்கார வைப்பது?’’ என்று படிவுத்தேவன் கேட்டார்.

‘‘ஊருக்குள்ள மேற்கால எங்கண்ணன் ராமன் இருக்கிறார். அவருகிட்ட போயி நான் உட்கார ஒரு இடம் கேட்டுட்டு வர்றேன்!’’ என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பினாள் நல்லதங்காள். ஊருக்கு மேற்கே- வயல்காட்டையட்டி இருந்த பெருமாள் கோயிலுக்குப் போன நல்லதங்காள், தான் குடியிருக்க ஓர் இடம் கேட்டு திரு மாலிடம் வேண்டினாள். அப்போது அவளுக்குக் காட்சி கொடுத்த திருமால், அவளுக்கு ஓர் இடத்தைக் காட்டி, ‘‘அங்கே அமர்ந்து கொள்!’’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

திருமால் சொன்ன அதே இடத்தில் நல்லதங்காளைக் குந்த வைத்தார் படிவுத்தேவன். அப்போது அங்கு வந்த படிவுத்தேவன் தம்பி யான பிறவாத்தேவன், ‘‘எங்கிருந்தோ ஒரு புள்ளையத் தூக்கிட்டு வந்து தெய்வம்னு சொல்லி இந்த இடத்துல குடி வைக்கிறே! இதை நான் ஏத்துக்க முடியாது!’’ என்று தகராறு செய்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்வப் பிறப்பு என்று அண்ணன் சொன்னதையும் தம்பி நம்பவில்லை.

‘‘அவனை நம்ப வைக்க என்ன வழி?’’ என்று நல்லதங்காளிடம் உபாயம் கேட்டார் படிவுத்தேவன். ஏழு பச்சை (சுடாத) பானை எடுத்து, இந்த வயல்ல விளைஞ்சு கிடக்கிற பச்சை நெல்லை அறுத்து, பச்சை வாழை மட்டையை விறகாக்கி, இந்த இடத்துல பொங்கல் வையண்ணே. அத்தனை பானையும் அணு பிசகாமல் பொங்கும். அப்ப பிறவாத்தேவன், நான் யாருங்கிறதை தெரிஞ்சுப்பார்!’’ என்றாள் அந்த மங்கள நாயகி.


படிவுத்தேவன் அப்படியே செய்தபோது பச்சை வாழை மட்டை படபடவென தீப்பற்றி எரிந்தது. பச்சைப் பானை யில் போட்ட பச்சை நெல், பால்சோறாகப் பொங்கியது. இதைப் பார்த்து மெய்சிலிர்த்த பிறவாத்தேவன், ஓடோடி வந்து நல்லதங்காளின் காலில் விழுந்து வணங்கி, தனது அறியாமையை பொறுத்தருள வேண்டினார். இதன் பிறகு இருவருமாகச் சேர்ந்து அங்கு நல்லதங்காளுக்கு ஆலயம் எழுப்பினர். நல்ல தங்காள் ஆலயம் கொண்ட பிறகு அவளுக்குத் துணையாக அய்யன், மாயன், அரசமகன், அருதகுளாளன், ஆண்டி, அக்கினிவீரன், கருப்பன் உள்ளிட்ட தெய்வங்களையும் அங்கே குடிகொள்ள வைத்தார் திருமால்.

நல்லதங்காளைத் தலைச்சுமையாகத் தூக்கி வந்த படிவுத்தேவன் வம்சத்தவர் இன்று வரை இங்கே பெரிய பூசாரிகளாகவும், பிறவாத்தேவன் வம்சத்தவர் சின்னப் பூசாரிகளாகவும் விளங்குகிறார்கள். வருடந்தோறும் சிவராத்திரி திருவிழாதான் இங்கு விசேஷமான நிகழ்வு. வடுகபட்டியிலுள்ள பெரிய பூசாரி வீட்டில் நல்லதங்காளின் சிலம்பு, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அடங்கிய பெட்டி இருக்கும். சிவராத்திரியன்று மாலையில் இந்தப் பெட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு தாரை- தப்பட்டை முழங்க ஐந்து ஊருக்கும் பொதுவான கொடிக்குளம் ஊர் மந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். அப்போது அங்கு வரும் இருபத்தோரு தெய்வங்களுக்கான மருளாடிகளும் அருள் வந்து இறங்கி ஆக்ரோஷம் காட்டுவர். அவர்களில் ஆணி பாதரட்சைகளை அணிந்து அருள் வந்து ஆடியபடி மக்களுக்கு அருள்வாக்கு சொல்வார் மாயனாக வந்து நிற்கும் மருளாடி. இவர் தடம் போட்டுச் செல்வதற்கு ஏதுவாக கையில் தீப்பந்தம் ஏந்தி நிற்பார் வீரபத்திரன் மருளாடி.



இவர்களுக்குப் பின்னால் கையில் தென்னம் பாளையை ஏந்தியபடி வருவார் நல்லதங்காள் மருளாடி. இத்தனை தெய்வங்களும் மந்தையைவிட்டு அருளோடு புறப்பட்டு அன்றிரவே கோயிலை அடையும். மறு நாள் காலையில் கோயில் வாசலில் பொங்கல் வைத்து, கருப்பனுக்கு கடா வெட்டி பலி கொடுத்து உணவு படைக்கிறார்கள். அதோடு திருவிழா முடிவடைகிறது. அன்று மாலையே நல்லதங்காளின் பூஜை பெட்டியை, கொண்டு வந்தது போலவே வடுகபட்டிக்குத் திரும்ப எடுத்துச் செல்கிறார்கள் மருளாடிகள். பத்து நாள் நடக்கும் ‘பெரிய கடாவெட்டு’ இந்த பகுதியில் பிரபலமாகப் பேசப்படும் மற்றுமொரு திருவிழா எனலாம்.

பில்லி, சூனியம், பேய், பிசாசு, காத்து, கருப்பு.. என்று பாதிக்கப்பட்டு தன்னை அண்டி வருபவர்களுக்கு கைகண்ட மருந்தாக இருக்கிறாள் நல்லதங்காள். இப்படிப்பட்டவர்களை நல்லதங்காள் சந்நிதியில் நிறுத்தி விபூதியை அள்ளிப் போட்டதும், தங்களை பிடித்திருக்கும் ஏவல் எதுவென்று அவர்கள் வாயா லேயே சொல்லி விடுகிறார்கள். இது போன்ற குறைகள் நீங்க, நல்லதங்காளிடம் ஆசி வாங்கிக் கொண்டு, மாயாண்டி சாமியின் மருளாடியே பரிகாரங்களைச் சொல்லி பாவங்கள் போக்க வழிகாட்டுகிறார்.

பிள்ளை வரம் கேட்பவர்கள் மாயாண்டி சாமியிடம் வந்து மனசுருக வேண்டிச் சென்றால், வரம் கொடுக்கிறார் மாயாண்டி. பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள், நன்றிக்கடனாக தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மாயாண்டி சாமிக்கு காணிக்கை கொடுக்கிறார்கள். இவற்றை மாயாண்டிசாமியின் மருளாடி தாராளமாக அணிந்து கொண்டு அனுபவிக்கலாம். அதே நேரம் மருளாடியின் ஆயுட் காலத்துக்குப் பிறகு, அடுத்ததாக யார் மீது மாயாண்டி சாமி வந்து இறங்குகிறாரோ, அந்த மருளாடியின் பொறுப்புக்கு அத்தனை பொருட்களும் கை மாறிவிடும்!


மனிதப் பிறப்பாக இருந்தபோது வறுமையின் பிடிக்கு வாழ்க்கையைத் தொலைத்த பெண் என்பதால், இன்றைக்கும் தனது வாசலுக்கு வந்து வணங்குகிறவர்கள் மீது வறுமையின் நிழல் படாதவாறு பாதுகாக்கிறாள் நல்லதங்காள்!

நல்லதங்காளை குல தெய்வமாக வணக்குபவர்கள் கள்ளரில் படிகொடுத்தான் பங்காளிகள் ஆவார்கள். இவர்கள் ஆரியபட்டி, பாப்பாபட்டிக்கு பங்காளிகள் ஆவார்கள். குழந்தைக்கு படியதேவன், படிவு என்று பெயர் வைப்பார்கள்.




மண்ணின் மைந்தர்களை வீழ்த்துவதற்காக, வெள்ளை ஏகாதிபத்தியத்தால் கொண்டு வரப்பட்ட இன அழிப்பு சட்டமான குற்றப்பழங்குடி (criminal tribe act)ல், மிகவும் பாதிக்கப்பட்ட கள்ளர்களில் முக்கிய பிரிவினர்
பிறமலைக்கள்ளர்கள் ஆவர்.

இச்சட்டத்தின் மூலமாக
தாயிடம் இருந்து குழந்தைகளை பிரித்தல்,
தந்தையிடம் இருந்து முழுத் தலைமுறையையும் பிரித்தல்,
குழு முன்னோரிடம் இருந்து கூட்டத்தை பிரித்தல் என பலவகையான யுக்தியை கையாண்டனர்.

இவ்வகையான யுக்தியில் பிறமலைக் கள்ளர்களில் பலரை அவர்களின் கூட்டத்தை விட்டு பிரித்து, அவர்தம் பூர்வ பூமியான மதுரை,திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து கால்நடையாக உளுந்தூர் பேட்டை(அஜிஸ் நகர்),ஓட்டேரி(சென்னை),வேப்பூர்(கடலூர்),பம்மல்(காஞ்சிபுரம்) போன்ற பகுதிகளில் பிரித்து குடியமற்றப் பட்டனர்.

குடியமர்த்தப்பட்ட அவர்களை பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டனர்:-
ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது, சிலம்பம்,களரி உள்ளிட்ட போர் கலைகள் பயிற்று விக்கவோ,பயிற்சி கொள்ளவோ கூடாது, குடியிருப்பை தாண்டி எவரும் வெளியே செல்லக் கூடாது என போர்குடிகளின் சிறப்பம்சங்களை ஒடுக்கினர்.

பல நூறு கிலோமீட்டர் கடந்து சென்றாலும், தங்களுடைய குடும்ப பட்டத்தையும்,குல தெய்வத்தையும் மறக்காமல் பேணிக் காத்துள்ளனர். இன்றும் இந்த செட்டில்மெண்டுகளில் நல்லதங்காள் கோவில் உள்ளது.

பொதுவாக பிறமலைக் கள்ளர்கள் தங்களுடைய குல தெய்வ வழிபாட்டில் மிகவும் தீவிரமாகவும்,அதீத பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

Source
Martial race of undivided India

அன்புடன்
சோழபாண்டியன்