புதன், 31 ஜூலை, 2019

தஞ்சை ஒக்கூர் கள்ளர்நாடு


தஞ்சை - ஒக்கூர்நாடு - கள்ளர் நாடு - ஒக்கநாடு கீழையூர் - மேலையூர்




நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு
நலம் பெறும் ஒக்கநாடு
பச்சிலை பறிக்கா நாடு
பைங்கிளி நோகாத நாடு
கள்ளர் மரபு தவறாத நாடு
கடல் தண்ணீயை வாட்டும் நாடு
சொல்லுக்கும் பெரிய நாடு
நிகழத்தால் பதில் சொல்லும்
சுயமரியாதை உடைய நாடு 

ஊர்ப்பெயர்கள்  பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். 

இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு  என்னும் ஊர்களாகும். 

10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது.  

இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்களிலும் வழக்குகள் இருந்தால், தீர்த்து வைக்கும் ஊராகவும் ஒக்கூர் இருந்துள்ளது. இன்றும் அந்நிலை இருப்பதைக் காணமுடிகின்றது. 

இந்த ஊரில் கள்ளரும் வெள்ளாரும் ஒருங்கு இருந்ததாகவும். வெள்ளாளர்கள் கள்ளர்களுக்கு கணக்ப்பிள்ளையாக இருந்துள்ளனர். வெள்ளார் இனத்துப் பெண் ஒருத்தி வேறு சாதிப் பையனை விரும்பியதால் தங்களது இனத்துக்கு பெரிதும் இழுக்கு வந்துவிட்டதாக்க கருதி அந்த ஊரில் இருந்த வெள்ளாளர் இனக் குடிகள் எல்லாம் தீக்குழி வெட்டி, கட்டக்குடி என்னும் ஊர் அருகே தீ பாய்ந்த தாகவும் அத்தீயில் விழப்போனவர்களைக் காப்பாற்ற கள்ளர் இன மக்கள் முயன்றதாகவும் அதற்கு அவர்கள்  வர மறுத்து ஒருவரைமட்டும் விட்டுவிட்டு இவர்உங்களுக்குத் துணையாக இருப்பார் இவருடன் சேர்ந்திருங்கள்  என்றுகூறி தீயில் பாய்ந்துள்ளார்கள் . இவருடன் சேர்ந்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால் அக்கள்ளர் மக்களுக்கு சேந்தமுடையார் என்று ஒரு பட்டப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. வெள்ளாளர்கள் தீயில் பாய்ந்த பகுதி கட்டக்குடியில்  தீபாஞ்சகுளம் என்னும் பெயரில் இன்றும் இருக்கின்றது.

அதிலிருந்து ஒக்கூர் பகுதியல் வசித்த  கள்ளருக்கு, சேந்தமுடையார் எனப்பட்டப் பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சேந்தமுடையார் பட்டப்பெயரைச் சார்ந்த  பழனி சேந்தமுடையார் என்பவருக்கு இரண்டு பெண் ஒரு ஆண் பிள்ளைகள். தஞ்சைப் பகுதியிலிருந்து மகாதேவபட்டிணக் கோட்டைக்கு காவலுக்குச் சென்ற அண்ணன் தம்பிகளான பெரிய மொத்தி, சின்ன மொத்தி என்னும் இருவரையும் பழனி சேந்தமுடையாரின்  பெண்கள் விரும்பியுள்ளார்கள். 

தமது பெண்களின விருப்பத்தை அறிந்த பழனி சேந்தமுடையார் உடன் பட்டு, திருமணம் செய்து வைக்க சம்மதித்துளார். பெரிய மொத்தி, சின்ன மொத்தி இருவரையும் தன்னுடைய பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டபொழுது,  பெரிய மொத்தி தனக்கு ஏற்கனெவே தஞ்சராயன் மகளுடன் திருமணம் ஆகிவிட்டது என்று கூற, திருமணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை என்று கூறி, தன்னுடைய மூத்தப்பெண்ணை பெரிய மொத்திக்கும், சின்ன பொண்ணை சின்ன மொத்திக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஒக்கூரிலேயே அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளைச் செய்துகொடுத்துள்ளார்.

பெரிய மொத்தியின் மூத்த மனைவியான தஞ்சராயர் மகள் நீண்ட நாட்களாக தன் கணவன் திரும்பாமல் இருந்த காரணத்தை அறிந்த பிறகு, தான் தன் கணவன் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டமெனத் தன் தந்தை வீட்டாரிடம் கூறிய பொழுது, அவர்கள் மறுக்க, பிடிவாதமாக செல்லவேண்டமென்று கூறியுள்ளாள். அவர்கள் வேறு வழியில்லாமல் இங்கிருந்து உனக்கு என்ன தேவையோ அதனை எடுத்துக்கொண்டு செல் என்று கூற, அவள் அங்கிருந்த செல்லியம்மன் சிலை மட்டும் போது எனக் கூறி அதனை மட்டும் தன்னோடு எடுத்துக்கொண்ட்டு ஒக்கூருக்கு வந்து, தன்னுடைய நிலையினைப் பழனி சேந்தமுடையாரிடம் எடுத்துச் சொல்ல அவரும் அவளைத் தன் மகள் போல பாவித்து, அவ்வூரிலேயே அவள் வாழ வழி வகை செய்து கொடுத்தாராம்.

ஒக்கநாடு, ஒக்கநாடு மேலையூர் ஒக்கநாடு கீழையூர் என்று பிரிந்த பிறகு, அங்கு திருவிழா நடத்துவதற்குப் பயன்படுத்திய செல்லியம்மன் சிலையினை மேலையூர் எடுத்துச் சென்றவிட, தஞ்சைராயன் மகள் பெரிய மொத்தியின் மனைவி எடுத்து வந்த செல்லியம்மன் சிலையை வைத்துக்கொண்டு இன்றும் திருவிழா நடத்துவதாக்க கூறப்படுகின்றது. இந்த பெண் இருந்த வரை அத்தெய்வத்தை வைத்துக்கொண்டு வழிபட்டதாகவும், அவள் அத்தெய்வத்திற்காக வெட்டிய குளம் கிழவிக்குளம் எனவும் இன்றும் அழைக்கப்படுகின்றது.


இந்த  ஊரில் நடைபெறும் திருவிழாவை மையப்படுத்தியே,  அனைத்து செய்லபாடுகளும் நடைபெறுகின்றன. திருவிழாவினை அவ்வூரில் வாழும் பிற இனத்தாரின் அனுமதி / பங்கேற்புடன் தலைமை ஏற்று நடத்துவது  பழனி சேந்தமுடையாருடைய குடும்பம், அவர் குடும்பத்துக்கு முதல் மரியாதையும் முடியும் வழங்கப்படும். 

தமது மகளுக்குக் குழந்தை பிறந்த பிறகு தமது  பேரனை (மகள் வயிற்றில் பிறந்தவனை) மடியில் வைத்துக் கொண்டு  திருவிழாவின் போது மரியாதை பெற்றுள்ளார், அப்பொழுது அவர் மடியில் இருந்த பேரன்  கையை நீட்டியுள்ளான், பழனி சேந்முடையார் பேரன் கையிலேயே முடியை வழங்கும் படி  கூறியுள்ளார். அக்குழந்தை பெரியவனாகும் வரை தொடர்ந்துள்ளது. அவன் பெரியவனாக வளர்ந்த பிறகு பழனி சேந்தமுடையார் முதல் மரியாதையும், முடியையும் தானே பெற்றுள்ளார், உடனே இத்தனை நாள் தன் கையில் வாங்கி பழக்கப்பட்ட பேரன்,  தாத்தா இத்தனை நாள் என்னை வாங்க சொல்லி விட்டு இப்பொழுது நீங்கள் வாங்குகிறீர்களே என்று கேட்க,  பெரிய பெண்ணினுடைய வாரிசுக்கு முதல் முடியும், இரண்டாவது பெண்ணு வாரிசுக்கு இரண்டாவது முடியும், பெரிய மொத்தியின் மூத்த மனைவியின்  மகனுக்கு மூன்றாவது முடியும் வழங்க சொல்லிவிட்டு, இறுதியாக அவரும் பெற்றுக்கொண்டாராம். இந்த வழமை மாறாமல் இன்றும் திருவிழாவில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகின்றது.

குடும்பம் பெரிதாக தொடங்கியவுடன், தெற்கு தெரு மூத்த பெண்ணின் வாரிசுகளுக்கு உடைமைப்பட்டது என்றும், மேலத்தெரு இரண்டாவது பெண்ணின் குடும்ப வாரிசுகளுக்கு என்றும், வடக்குத் தெரு மோத்தியின் முதல் மனைவி வாரிசுக்கு என்றும், கிழத்தெரு தமது வாரிசுகளுக்கும் என பழனி சேந்தமுடையார் பிரித்துக் கொடுத்துள்ளார். இத்தெருக்களில் வசிக்கும் மரபுவழி தோன்றிய வாரிசுகள் தான் பஞ்சாயத்து குடும்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பின்னாள் வேறு பட்டப்பெயர்களைக் கொண்ட குடும்பங்கள் வந்தாலும்,  இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்று வரை மரபு வழியாக பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வூரில் 18 இனத்தார் இருப்பதாக கூறப்படுகின்றது. இப்பதினெட்டு இனத்தாரின் சம்மதம் பெற்ற பிறகே பஞ்சாயத்தாரால் திருவிழா கூட்டப்படுகின்றது. திருவிழா கூட்டும் பொழுது ஏதேனும் வழக்குகள்/சிக்கல்கள் இருந்தால் சாவடியில் வைத்துப் பேசப்பட்டு தீர்க்கப்படுகின்றன. அதன் பிறகு அங்குள்ள ஆலமரத்தின் கீழ் வேட்டி விரித்து பஞ்சாயத்தார் (மரபு வழியாக வரக்கூடிய பஞ்சாயத்துக் குடும்பத்தை சார்ந்தவர்கள்) கூடி திருவிழாவினைக் கூட்டுகின்றனர். அப்பொழுது யாரும் மறுத்து பேசுவதோ, வழக்குகள் குறித்து  சச்சரவுகளைக் கிளப்புவதோ கிடையாது. அப்படி ஏதேனும் யாராவது மறுத்தோ வழக்கு குறித்தோ பேசினால், அடுத்த திருவிழாவிற்குள் பேசியவருக்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது. 

ஆலமரத்துக்கு கீழ்வேட்டி விரித்து திருவிழா கூட்டத் தொடங்கும் பொழுது மறுத்து பேசிய சிலர் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். இவ்வூரில் 18 இனத்தை சேர்ந்த மக்கள் வசித்தாலும் அவர்களுக்குள் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்கின்றனர். திருவிழாவின் போது  எந்த இனத்தாரும் விடுபாடு இன்றி அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பு நிகழ்த்தும் வண்ணம் திருவிழாவின் பணிகள் அமைக்கப்படுகின்றன. திருவிழாவின் போது இவ்வூரில் வசிக்க கூடிய பறையர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.


கிராமங்களில் பொதுவாக நிலத் தகராறு, வரப்பு தகராறு, பங்காளி சண்டைகள் பஞ்சாயத்திற்கு வருகின்றன. கிராம சார் மரபு வழி பஞ்சாயத்துகள் கட்டப்பஞ்சாயத்து என்று தடை செய்யப்பட்டு இருந்தாலும், தங்கள் ஊர்களில் இருக்க கூடிய சிறு சிறு சிக்கல்களை அங்குள்ள பஞ்சாயத்தாரின் மூலமே தீரத்துக்கொள்ள, கிராம மக்கள் விழைகின்றனர். பொதுவாக நிலத் தகராறுகளுக்கு பஞ்சாயத்தார் இரு தரப்பினரிடமும் சந்து செய்துவிக்க முயலுகின்றனர். அவரகளும் அதற்கு கட்டுப்படுகின்றனர். 

அது போலவே அண்ணன் தம்பி சொத்து பிரிப்பு  போன்றவை கிராமங்களில் பஞ்சாயத்தார் முன்னிலையில் பாகம் பிரிக்கப்படுகின்றது. சாதி மாறிய காதலர்கள் ஊரை விட்டு ஓடிவிட்டால், முன்பு பஞ்சாயத்தார் எடுத்த முடிவுக்கும், இப்பொழுது எடுக்கும் முடிவுக்கும் வேறுபாடு இருக்கின்றது. இது போன்ற வழக்குகளில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் தற்போது எடுக்கப்படுகின்றன.  இப்பொழுது இவ்வூரின் அதிக பச்ச தண்டை அபதாரம் விதிப்பது தான். ஒக்கூர் அவ்வூரில் ஏற்பட்டும் வம்புவழக்குகளுக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் நிகழக்கூடிய சண்டை, சிக்கல்களுக்கும் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஊராக இருக்கின்றது.


அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது. நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது, காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.


வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு , கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ள இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது. ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது. இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும், இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். 

கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது. இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வீடுக்ளிலும் நவதானியங்களைக் கூட்டி, ஆட்டின் புழுக்கையைக் கொண்டு வந்து , இடித்து, பொடியாக்கி, அதனை பானையை உடைத்து அதன் கழுத்துப் பகுதியில், இல்லை இப்பொழுது வெங்கலத்தில் , முளைப்பாளி இடுவதற்கென வந்துள்ள பாத்திரத்திலோ இட்டு முளைப்பாளியை வளர்ப்பார்கள். தனித்தனியாக வீடுகளில் வளர்க்காமல் நான்கு ,ஐந்து பேர்கள் இணைந்து ஒரு வீட்டில் போடுவார்கள்.

முளைப்பாளி இடும் வீட்டினைத் தினமும் மிகத் தூய்மையாகப் பேணுவார்கள்.முளைப்பாளி நன்றாக வளர வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுதலாக இருக்கும். காரணம் யாருடைய முளைப்பாளியாவது சரியாக வளரவில்லை என்றால்,அந்த ஆண்டு ,முளைப்பாளி சரியாக வளராதவர்களுடைய வீட்டில் ஏதேனும் கெட்டது நடக்கும் என்பது நம்பிக்கை. அது உண்மையும் கூட,எங்கள் வீட்டில் 1999 இல் திருவிழா நடந்தபோது போட்ட முளைப்பாளி அழுகிவிட்டது, ஏதோ நடக்க போகிறது என்றார்கள்,அ துபோலவே என் தந்தை 2000 இல் இயற்கை எய்திவிட்டார். அதிலிருந்து அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு.


விழா அறிவிக்கப் பட்ட ஏழாம் நாள் கழித்து மூன்று நாள்கள் விழா நடைபெறும் .முதலா நாள் கொழுக்கட்டை திருவிழா.அன்று வெளியூரில் இருக்க கூடிய சொந்த பந்தங்களுக்கு கொழிக்கட்டை சுட்டுக் கொண்டு கொடுத்து விட்டு விழாவிற்கு அழைப்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை ஒரே கொழுக்கட்டை மயமாக இருக்கும். மாலையில் முளைப்பாளி போட்ட வீட்டிலிருந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்து வந்து, அதற்கு சாமிகும்பிடுவார்கள்.


இரண்டாம் நாள் முமையாக மீன்.எங்கு பார்த்தாலும் மீன் விற்பனை, எல்லார் வீட்டிலும் மீன் குழம்பு மீன் வறுவலாக இருக்கும். மாலையில் முளைப்பாளியினை அலங்கரித்துக்கொண்டு, அனைவரும் ஒரே இடத்தில் குழுமி,திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் கொட்டி விட்டு வருவார்கள். அன்று இரவு முமுதும் 21 காய்கறிகள் ,மீன் குழம்பு கருவாட்டு குழம்பு, மீன் கருவாடு வறுவல் சமையல் நடக்கும்.







மூன்றாம் நாள் தேர் திருவிழா.தேரில் வாரையினைக் கட்டி முன்பு தூக்கிச் செல்வது வழக்கம்,அதனைப் பார்க்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் இப்போது உள்ளவர்களால் தூக்கமுடியாமல் , சக்கரத்தின் மீது தேரினை வைத்து இழுத்துச் செல்லுகின்றார்கள். அப்போது உடல் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். இன்று இளைஞர்களிடம் உடல் வலிமை எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகவுள்ளது.


செல்லியம்மன் உள்ள அந்த கோயில்லுக்கு இரவு சமைத்த உணவினை ஊரில் உள்ள அனைவரும் கொண்டு வந்து அங்கு வைத்துக் கும்பிடுவார்கள், வரமுடியாத சிலர் வீட்டில் வைத்தும் கும்பிடுவதும் உண்டு. இதனை சுள்ளுஞ்சோறு படைத்தல் என்று கூறுவார்கள்.


அது முடிந்தவுடன் மதுகாட்டல் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுகாட்டல் என்றால் , அந்த ஊரில் உள்ள பறையர் இன மக்கள் திருவிழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் நவதானியங்களை ஒன்று சேர்த்து , ஒரு புதுப் பானையில் ஊர வைப்பார்களாம் ,அது ஒரு வாரத்திற்கு நன்கு ஊறுவதால் ,அதிலிருந்து ஒருவகையான மது உற்பத்தி ஆகுமாம்.அதனை அந்த ஆண்டு தேர்ந்தெட்டுக்கப் பட்ட குடும்பம் தான் செய்யும்.திருவிழா அன்று அந்த மதுவினை வடித்து இரண்டு புதுப் பானைகளில் ,அந்த இனத்தை சார்ந்த பெண்கள் எடுத்து வருவார்கள். அவர்கள் எப்படி எடுத்து வருவார்கள் என்றால் இடுப்புக்கு மேல் எவ்வித துணியும் அணியாமல் பூவினை அணிந்து மட்டும்கொண்டும், சிலர் வேண்டுதல் காரணமாக பெண்கள் தங்களுடைய தாலிகளை எல்லாம் கழற்றி இவர்கள் கழுத்தில் அணிந்து கொண்டும் வருவார்கள் . தாலியினை கழற்றி அவர்கள் கழுத்தில் அணிவிப்பதால்அம்மனிடம் வேண்டிய வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை.


இரு பெண்களும் மது உள்ள அந்த கலசத்தை தாரை,தப்பட்டைகள் அதிர எடுத்து வருகிறார்கள்.அவர்களுடன் புதுப்பானையில் கரண்டிபடாமல் சமைத்த உணவு,காய்கறிகள், ஆட்டுக்கறி போன்றவற்றையும் எடுத்து வருகின்றார்கள். எடுத்து வந்து அந்த கோயிலை ஒருமுறை வலம் வந்த பிறகு, அந்த பெண்களை தலையில் இருந்து அந்த கலசம் இறக்கப்பட்டு,அம்மனுக்குப் படையல் இடப்படுகின்றது. அம்மனை அவ்வூர்கார்ர்கள் தூக்கிக் கொண்டு நிற்க,இவர்கள் படையல் இடுகின்றார்கள்.படையல் இடும் போது வாயினைத் துணியைக் கொண்டு கட்டிக்கொண்டும், உணவுகளை கையினாலேயே எடுத்து வைக்கின்றார்கள்.


சாமி கும்பிட்ட பிறகு,தாளம் சொல்லுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உள்ளது, அவர்கள் ஒவ்வொரு கரை என்று கூறுகிறார்கள் அந்த ஒவ்வொரு கரைக்கும் ஒருவராக வரிசையாக நின்று கொண்டு , தப்போசைக்கு ஏற்ப , அம்மனின் பெருமையைப் பாட்டாக பாடுகின்றார்கள். இந்த பாட்டில் இதனைப் பற்றிய நிகழ்ச்சி காஞ்சிபுத்திலும் ,திருவாரூரிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். எனக்கு சரியாக புரியவில்லை ஆராயப்படவேண்டிய ஒன்று.

தாளம் சொல்லுதல் முடிந்தவுடன், அங்கு படைக்கப்பட்ட மதுவினை அவர்கள் அனைவரும் குடிக்கின்றார்கள், அது அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடிக்க வேண்டுமாம், பெண்களும் அதனைப் பருகின்றார்கள்.


இதன் பிறகு அம்மன் தேரில் ஏற்றபட்டடு,ஒவ்வொரு தெருவாக கொண்டு செல்வார்கள். நல்ல பெரிய தேராக இருக்கும். இங்கு என்ன சிறப்பு என்றால் புதிதாக வெட்டி மரத்தில் இருந்த உடனே இந்த தேர் செய்யப்படுவது. நல்ல உயரமாக இருக்கும். தேரில் அம்மன் ஏற்றப்பட்டு தெருவுக்குள் நுழையும் போது,பல ஆடுகள் பலியிடப்படும்.முதலில் எங்கள் தெருவுக்குத்தான் வரும். எங்கள் தெருவுக்கு மட்டும் ஒரு பழக்கம் தேர் வந்து சென்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பது. தேர்வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் காத்திருந்துதான் சாப்பிடவேண்டும். ஒரு முறை தேர் எங்கள் தெருவின் பாதியிலேயே நின்று விட்டது அப்போது சாப்பிடாமலேயே இருந்தோம் தேர் சென்ற பிறகு மாலைதான் சாப்பிட்டோம்.




ஒக்கநாடு தான், நடிகர் நவரசத்திலகம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும்.

ஆய்வு : முனைவர் கல்பனாசேக்கிழார் , 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்





முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் ஐயா செல்வம் ஈழம்கொண்டார் , திலகவதி  அம்மையார் மகள் ஆவார். கணவர் மருத்துவர் சேக்கிழார் ஆவார்.