ஞாயிறு, 25 ஜூன், 2023

முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு வழிகாட்டிய தொண்டைமான் மன்னர்



புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மாதர் குல மாணிக்கங்கள் தமிழகத்தில் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் தலையாய இடம் பெறும் தகுதி பெற்றவர் ஒருவர் உண்டென்றால், அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றால் மிகையல்ல. அந்த முத்துலட்சுமி ரெட்டி உருவாக காரணமாக அமைத்தவர் ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் கிராண்ட் கமாண்டர் ஆப் தி இண்டியன் எம்பையர்.



இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகவும், முதல் சட்டமன்ற உறுப்பினராகவும் உருவாகி, பெண்களின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக விளங்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த காலத்தில், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இருந்தனர். பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கிபி 1886ல் பிராமண தந்தைக்கும், மேளக்காரர் பிரிவை சேர்ந்த தாய்க்கும் பிறந்தார் முத்துலட்சுமி. தொடக்க கல்வியில் சிறப்பாக விளங்கிய முத்துலட்சுமி அனைவரின் பாராட்டையும் பெற்றார். சிறந்த முறையில் பள்ளிப்படிப்பை முடித்தார். 18 வயதில் கல்லூரி படிப்பை தொடர விரும்பினார். ஆனால் அக்காலத்தில் 16 வயதிலேயே பெண்களுக்கு திருமணம் முடிக்கும் முறை வழக்கமாக இருந்தது. முத்துலட்சுமி மேற்படிப்பை தொடர்வதை முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை. பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்ட காலம் அது. இதற்கு பின்பு நடந்த நிகழ்வுகள் Pudukkottai darbar records/ pudukkottai gazettee எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது :--

பள்ளிப்படிப்பை முடித்த முத்துலட்சுமி 4.02.1904 அன்று தனது கல்லூரி படிப்பை தொடர வேண்டுமென விண்ணப்ப கடிதம் ஒன்றை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சமர்ப்பித்தார்.

நாராயணசாமி ஐயர் எனும் முக்கிய அதிகாரி முத்துலட்சுமியின் விருப்பத்தை ஆதரித்தார்.



ஆனால் கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ண ஐயர், தர்பாருக்கு எழுதிய கடிதத்தில்," மன்னர் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இச்சமயத்தில் ஒரு பெண்ணை அனுமதித்தால்,கல்லூரியின் நடைமுறை மாறிவிடும், ஒரு பெண் ஆண்களுடன் அமர்ந்து பாடம் கற்பது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல" என மறுப்பு தெரிவித்தார். சமஸ்தான திவானும் கவுன்சிலரும் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமஸ்தான திவான் வெங்கடராமதாஸ் தனது கருத்தை கூறுகையில், " புதுக்கோட்டை சமஸ்தான வழக்கப்படி மேளக்கார சாதி பெண்களை, டவுன் பெண்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கவே அனுமதி கிடையாது, இவரது மேற்படிப்பை தொடர அனுமதிப்பது சரியானதாக எனக்கு தோன்றவில்லை" என்றார்.

பலதரப்பு வாதங்களை கேட்டறிந்த புதுக்கோட்டை மன்னர், அக்கால ஒடுக்குமுறைகளை தூக்கி எறிந்து, ஆண்கள் மட்டுமே படித்து வந்த மன்னர் கல்லூரியில், முதன்முதலாக ஒரு பெண் மாணவர் படிக்க அனுமதிக்க ஆணையிட்டார். பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு புதுமையை செய்தார். முத்துலட்சுமியின் திறமையை அன்றே உணர்ந்தார். பிற்காலத்தில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக முத்துலட்சும் வருவார் என அன்றே கணித்தாரோ அந்த தீர்க்கதரிசி!



பெண்கள் விடுதலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய, முத்துலெட்சுமி ரெட்டியின் படிப்பை தொடர அக்கால நடைமுறைகளை தூக்கி எறிந்து, தேவதாசி சமூகத்திலிருந்து ஒரு பெண் படித்து முன்னேறுவதை முழு மனதோடு ஆதரித்த கனிவு உள்ளம் கொண்டிருந்தவர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்!

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்