சனி, 3 மார்ச், 2007

வாண்டையார் கோவில் என்று அழைக்கப்பட்ட மலேசியா இராஜமாரியம்மன் கோவில்



1911- ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தென்னந் தோட்டங்களும், இரப்பர் தோட்டங்களும் சூழ்ந்த சதுப்பு நிலமாக இருந்தது (இப்போது ‘பிளாச பிளாங்கி). இந்த தோட்ட கங்காணியாகவும், ஜொகூர்பாரு வாழ் இந்து மக்களின் தலைவராகவும், பலருக்கும் நன்கு அறிமுகமானவராகவும் திகழ்ந்தவர் திரு.கா.கூத்தபெருமாள் வாண்டையார்.



ஜோகூர் மாநிலத்தின் அரசராக இருந்த மாட்சிமை தங்கிய சுல்தான் சர் இப்ராஹியம் அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.கா.கூத்தபெருமாள் வாண்டையார் ஜொகூர்பாரு பட்டணத்தில் இந்துக்கள் வழிபடவும், வணங்கவும் ஒரு கோயில் அமைக்க ஆர்வம் கொண்டு அதற்கு ஒரு தகுந்த இடம் கொடுத்து உதவுமாறு சுல்தானிடம் விண்ணப்பித்தார்.



மேன்மை தங்கிய சுல்தான் அவர்கள் தம் குடி மக்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். ஆன்றோர் வாக்கிற்கிணங்க அதாவது ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும் ‘என்பதற்கொப்ப ஜாலான் உங்கு புவானின் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலம் கோயில் எழுப்புவற்கு கொடுத்தோடல்லாமல், கட்டுமான பணிக்கு வெள்ளி ஐநூறும் கொடுத்துதவினார். [அன்று ஐந்நூறு வெள்ளி இன்று ஐம்பது கோடிக்கு சமமாகும்]




திரு.கா.கூத்தபெருமாள் வாண்டையார் அவர்கள், மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான் அவர்கள் வழங்கிய நிலத்தில் ஒரு சிறு ஆலயத்தை அத்தாப்பினால் அமைத்து அதில் உலக நாயகியாகிய மாரியம்மனை எழுந்தருளச் செய்தார். ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்ற வாக்கிற்கு ஏற்ப கோயில் எழுப்புவதற்கு நிலமும் பணமும் வழங்கிய மேன்மை தங்கி ஜொகூர் மாநில மன்னருக்கு தங்களின் நன்றி உணர்வைப் புலப்படுத்தும் வகையில் கோவிலுக்கு ‘'இராஜமாரியம்மன் கோவில்'' என பெயர் சூட்டப்பட்டது. (இராஜா - அரசர் = இராஜா + மாரியம்மன்)

முதல் கும்பாபிஷேக விழா 08-12-1911 ஆம் நடைபெற்றது. 'இராஜமாரியம்மன் கோவில்'' திரு. கா.கூத்தபெருமாள் வாண்டையார் அவர்களின் பெரும் முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் எழுப்பப்பட்டு அவரே சொந்தமாகப் பரிபாலித்து வந்ததினால் பொது மக்கள் அக்கோவிலை ‘'வாண்டையார் கோவில்'' என அன்புடன் அழைத்தனர். 20.06.1935 ஆம் ஆண்டு வரை அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளது.



பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திரு.கா.கூத்தபெருமாள் வாண்டையார் அவர்கள் 20.06 .1935- ல் பொது மக்களிடம் கோவில் பொறுப்பை ஒப்படைத்ததுடன் வெள்ளி 500/-யையும் ரொக்கமாகப் புது நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு அவர் அதில் தொடர்ந்து சேவையாற்றி வந்தார்கள். செயல் திறன் கொண்ட புதிய நிர்வாகம் கோவிலை அவ்வப்போது விரிவாக்கமும், விருத்தியும் செய்து புதிய உபயங்கள் மற்றும் சமய விழாக்கள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்தது அதன் பொருட்டு கோவிலைப் பற்றிய செய்தியும் பிரபலமாகியது.

கோவிலின் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 1935 ஆண்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆண்டு தோறும் புதிய நிர்வாகம் பலவிதமாக அந்தந்தக் காலத்திகேற்ப கோவிலை விரிவுபடுத்துவதற்குப் பொது மக்களிடமிருந்து நன்கொடையும் வசூலித்தது.

மூன்றாம் மகா கும்பாபிஷேகம் 30.04.1986 ஆம் ஆண்டும், நான்காவது மகா கும்பாபிஷேகம் 24.01.1999 ஆம் நடந்தேறியுள்ளது.
மாரியம்மனின் அருளொளி அருளாட்சியால் பல ஆன்றோர்களும், மகான்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனைத் தரிசித்துச் சென்றுள்ளார்கள்.' ஸ்ரீ ஞானாந்தா பிரமரிசியின் அருளொளி பெற்ற அருள் யோகி, ஹரிதாஸ் சுவாமிகள் (குருஜி), காஞ்சி காமக்கோடி ஸ்ரீ சங்கராச்சாரி சுவாமிகளின் பிரதம சிஷ்யை சரஸ்வதி அம்மையார், குன்றக்குடி அடிகளார்,திருச்சி சாமியார், ஸ்ரீல சுவாமிநாதன், ஸ்ரீ வாரியார் சுவாமிகள், ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்போன்றவர்களின் வருகையால் கோயில் சிறப்பு பெற்றது.

மூர்த்தி, தலம் தீர்த்தம் என்பதற்கொப்ப இத்திருக்கோவிலின் வடக்கு பக்கத்தில் உள் நிலத்தில் தென்னந் தோப்புகளுக்கு இடையில் ஓர் அழகிய தீர்த்தக்குளம் ஒன்று ஆரம்ப காலத்தில் இங்கு இருந்தது. அது எல்லாம் வல்ல அன்னை மாரியம்மன் திருவருளால் அமைந்துள்ளதென்றால் அது மிகையாகாது. சுவாமி தரிசனம் செய்வதற்கு முன் குளிப்பதற்கும், கைகால் சுத்தம் செய்யவும் பெரிதும் பயன்பட்டது. ஜப்பானியர் ஆட்சியின் போது சேதப்பட்டு மூடப்பட்டு விட்டது. அதே போல் தென்னந்தோப்பும் கோவிலின் வளர்ச்சியை முன்னிட்டு அழிக்கப்பட்டது.


அருள்மிகு இராஜமாரியம்மன் கோயிலின் பிரதான நுழை வாயிலில் திருமதிலோடு அமைந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது இராஜகோபுரம். இராஜகோபுர நுழைவாயிலியில் இரு கன்னியர்கள் (சுதை) நம்மை வரவேற்கும் பாணியில் அமைந்து உள்ளது.

கோபுரம் சுமார் 75 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டு, கட்டிடக் கலைத்திறனும், சிற்பக்கலையின் செழுமையும் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் கர்ணகூடு, பஞ்சரம் அகாரை, முகசாலை ஆகிய பகுதிகள் முன்னும் பின்னும் மாறி மாறி இடம் பெற்றுள்ளன. இவற்றுள் அம்பிகையின் பல்வேறு சிற்பங்கள் பல்வேறு நிலைகளில் மொத்தம் 210 வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றின் அமைப்பு சோழர் காலக்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது நுழைவாசல் கதவுகள் சாஸ்திர முறைப்படி மரத்தினால் தமிழகக் கலைஞரினால் கலைநயம் மிக்கதாயும், 104 மணிகளிடன் ஒலிக்கிறது.


சைவத் திருக்கோயில்களில் துவஸ்தம்பம் என்னும்‘'கொடி மரம்'' முக்கியமானது. கோவிலில் நுழைந்தவுடன் நமக்குத் தெரிவது நெடிது நிற்கும் கொடி மரம். துவஜ ஸ்தம்பம் சிறப்புடையதாகவும், கலை நுணக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. மூலவராக அருள்மிகு இராஜமாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கருணைமிகு, தாய்மையுடன்கூடிய அருள் பார்வை நம்மை ஒரு கணம் சிலிர்க்க வைக்கிறது. இடது புற சன்னதியில் ஸ்ரீ விநாயகர் பெருமான் வீற்றிருக்கிறார். வலது புற சன்னதியில் ஸ்ரீ தெண்டாயுதாபணியும் அருள்பாலிக்கிறார்.மகா மண்டபத்தில் முகப்பில் விநாயகர், முருகன், இருபுறம் அம்பாள் நடுவில் ஹம்ச வாகனத்தில் சுதையிலான நிலையில் அமர்ந்தபடிஉள்ளார்கள்.

சுத்தமான விலாசமான மண்டபம். தியானம் செய்யவும், அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தவும், ஏற்ற மண்டபமாகவும் திகழ்கிறது.
கோவிலின் சுற்று பிரகாரத்தில் தனி சன்னதியில் அருவ நிலையில் சிவம் பாண லிங்கம் அதுவும் மரகத லிங்கமாக அமைந்துள்ளது. துர்க்கை அம்மன் சுதை வடிவில் நம்மை வரவேற்கிறது. பெரியாச்சி அம்மன் ஒரே கல்லில்வடிக்கப்பட்டுதுள்ளது. சக்தி வாய்ந்த பெரியாச்சி அம்மன் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளதாக சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேவஸ்தானத்தில் செயலாளராக இருந்து சேவையாற்றும் திரு.சி. சேனாதிராசா கூறுகிறார். குழந்தை இல்லா பல தாய்மார்கள் இந்த பெரியாச்சியின் அருளால் மழலை செல்வம் பெற்றுள்ளார்கள்.

கோவில் சுற்று வலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், பாமா, ருக்குமணியுடன் உள்ளார். மற்றும் நவகிரக சன்னதி அம்பாளுடைய மூலஸ்தானத்திற்கு இடது புறத்தில் இடம் பெற்றுள்ளது. பைரவர் சன்னதி மூலஸ்தானத்திற்கு முன்புறத்தில் அமைந்துள்ளது.

கோவிலின் முக்கிய விழாக்களாகத் தைப்பொங்கல், மாசிமகம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், புத்தாண்டு விழா,வைகாசி விசாகம், கொடியேற்று மகோற்சவம், ஆடிக் கடைசி செவ்வாய், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,நவராத்திரி விழா, தீபாவளி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, வைகுண்ட ஏகாதசி பூஜைகளும் நடைபெற்று வருகிறன்றன.

ஆய்வு கட்டுரை : திரு. கிருஷ்ணன், சிங்கை