செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

வீரசுந்தர பாண்டிய தேவர் காலத்தில் கள்ளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட நிலம்


கள்ளர் இனத்தவர்கள் இன்று தாங்கள் வாழும் பகுதிகளில் அதிகமான நிலங்களை தங்கள் வசம் கொண்டுள்ளனர். கள்ளர்கள் வெள்ளாளர்களிடம் இருந்து பிற்காலத்தில் தான் நிலங்களை பெற்றனர் என பல எழுத்தாளர்கள் தங்களது கற்பனையை திணித்து உள்ளனர். இத்தகைய கற்பனை வாதங்களை உடைத்தெறியும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் கிடைத்த கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த கல்வெட்டின் விளக்கத்தை தன்னுடைய " 30 கல்வெட்டுகள் " எனும் புத்தகத்தில் பழம்பெரும் வரலாற்று ஆய்வாளர் வை. சுந்தரேச வாண்டையார் அளித்துள்ளார்.




புதுக்கோட்டை கல்வெட்டு 260:-

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் நெய்வாசல் எனும் ஊரில் அகத்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த கல்வெட்டு வீரசுந்தர பாண்டியதேவர் காலத்தில் கள்ளர்களின் சமூகநிலையை விளக்குகிறது.

கிபி 1222ல் வீரசுந்தர பாண்டியதேவர் காலத்தில் , வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார். திருத்தியூர் முட்டம் என்பது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பெருச்சிக்கோயிலை மையமாக கொண்ட ஒரு பகுதி. திருத்தீயூர் முட்டத்தை சார்ந்த 24 கிராமங்களில் வண்டாங்குடியும் ஒரு கிராமம். வண்டாங்குடியையும் அதன் சுற்றியிருந்த நிலப்பகுதிகளையும் காராண் கிழமையாக( உழுது பயிர் செய்யும் உரிமையை) கள்ளர்களிடம் இருந்து கூத்தன் தில்லை நாயகன் விலைக்கு பெற்றார் எனும் கல்வெட்டு தகவல் மூலம், கள்ளர்களின் வசமே வண்டாங்குடி எனும் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நிலங்கள் இருந்துள்ளது என்பதை அறியலாம். கள்ளர்களிடம் இருந்த நிலம் உழும் உரிமையை பெற்று, அதற்கு பதிலாக அந்நிலங்களுக்குரிய வரிகளை அகத்தீஸ்வரர் கோயிலுக்கு அளிக்க கூத்தன் இசைந்துள்ளார். இது தவிர குறிப்பிட்ட காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு நெல்லையும் அளிக்க கூத்தன் உறுதி அளித்து, கல்வாயில் நாடாள்வானான கண்டன் ஆளுடையான் என்பவரிடம் கற்பூரவிலையைப் பெற்று அதற்கு சம்மதமும் கொடுத்துள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கல்வாயில் நாடாள்வான் கள்ளர்களின் பிரதிநியாகவோ,கள்ளர் தலைவராகவோ இருக்கலாம். பாண்டிய மன்னர் காலத்திலேயே கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை மாவட்டத்தில் கள்ளர்கள் ஒரு ஊரின் மொத்த நிலப் பகுதியையும் தங்கள் வசம் வைத்திருந்துள்ளனர். கள்ளர்கள் காலங்காலமாக நிலவுடைமையாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சிறந்த சான்றாக அமைகிறது.