திங்கள், 26 ஜூன், 2023

பொ. ஆ 1730~1769 - மன்னர் முதலாம் விஜயரகுநாதராய தொண்டைமான்


புதுக்கோட்டையை 1730 முதல் 28.12.1769 வரை ஆட்சி செய்தார்.

விஜயரகுநாதராய தொண்டைமான் சாகிப் 25.08.1713 ஆம் ஆண்டு புதுக்கோட்டை இளவரசரான திருமலைராய தொண்டைமானுக்கும், அவரது மனைவியான ஸ்ரீமதி நல்லாயி ஆயி சாஹேப்புக்கும் மகனாகப் பிறந்தார்.

தனி ஆசிரியரை அமர்த்திக் கொண்டு கல்வி கற்றார்.

1729இல் இவரது தந்தை காலமானதும் இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய பாட்டனாரான முதல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத ராய தொண்டைமான் இவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆக பாட்டனுக்குப் பிறகு பேரன் அரசு கட்டிலில் ஏறிய நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் விஜய ரகுநாத ராய தொண்டைமானுடைய முடிசூட்டு விழா குடுமியான் மலை ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர்களுடைய விழாக்கள் அனைத்தும் அந்த ஆலயப் பிரகாரத்தில் அமைந்துள்ள அறுகோண வடிவில் அமைந்த ஒரு பெரிய பாறையைத் தளமாகக் கொண்ட மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதன்படி இவருடைய முடிசூட்டு விழா குடுமியான் மலையில் கோலாகலமாக நடைபெற்றது.

தாத்தாவுக்குப் பிறகு பதவி கிடைத்த இவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்படியான நிலைமை தோன்றியது. அப்படி அவர் போரிட்டது வேறு எந்த எதிரிகளுடனுமல்ல, அவருடைய சொந்த சித்தப்பாக்களுடன் தான். ரகுநாத ராய தொண்டைமானுக்குப் பிறகு அவர்களுடைய புதல்வர்கள் பதவிக்குக் காத்திருக்க பேரனுக்குக் கிடைத்ததில் அவர்களுக்கு கோபம். உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. அதில் வெற்றியும் பெற்றார்.

இவர் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவரருக்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.

தெய்வ பக்தி மிகுந்த இவா் மன்னராக இருந்தபோதும் திருவரங்குளம் காடுகளில் தவம் செய்து தவவாழ்வு மேற்கொண்ட உத்தமா். இதனால் இவரை “சிவஞானபுரம் துரை” என்ற சிறப்பு பெயரோடு மக்கள் அழைப்பதுண்டு.

ஏழைப்பங்காளி, கருணைக்கடைகண், போராவில்லாத அருள், மனத்துயர் தீர்த்தருள்ம், தருணமிதம்மா, பஞ்சரத்தினம் என்று அழைக்கப்பட்ட இந்த ஐந்து பாடல்களும், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் பெயரில் பாடியதாகும்.

மன்னா் காடுகளில் தவ வாழ்க்கை வாழ்ந்த காலங்களில் அவ்வழியாக சென்ற சதாசிவரை சந்தித்தாா். 

மன்னரின் தூய மனத்தையும் ஆன்மஞானம் அடைய அவா் கொண்டுள்ள ஆவலையும் அறிந்த சுவாமிகள் அவர் மீது அளவற்ற கருணைகொண்டு மந்திர உபதேசம் செய்தார்.






மணலில் சில மந்திரங்களை எழுதி மன்னருக்கு உபதேசம் செய்தசுவாமிக பதஞ்சலி பாஷ்யத்திற்கு உரை எழுதிய கோபாலகிருஷ்ண சாஸ்திரிகளை குருவாக ஏற்றுக்கொள்ள மன்னருக்குப்பணித்து அவரிடமிருந்து விடைபெற்றாா். 

சதாசிவா் மணலில் எழுதிய உபதேச மந்திரத்தை ஒரு பொன் பேழையில் வைத்து அரண்மனை யில் வழிபட்டு வணங்கி வந்தார் சதாசிவரின் சீடரான புதுக்கோட்டை மன்னா்.

புதுக்கோட்டை பழைய அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மன்னர் பரம்பரையினரால் வழிபாடு செய்யப்பட்டு வரும் தொண்டைமான் மன்னருக்கு சதாசிவ பிரம்மேந்திரர் மந்திரம் எழுதிக் கொடுத்த மணல் தெட்சிணாமூர்த்தி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்த போது தொண்டைமான் மன்னர் நெரூர் வந்து, சதாசிவ பிரம்மேந்திரர் விருப்பப்படி காசியில் இருந்து கொண்டுவந்த பாண லிங்கத்தை கொண்டுவந்து அவரது சமாதியில் அருகில் காசி விஸ்வநாதர் என்கின்ற பெயரில் பிரதிஷ்டை செய்து , காசி விஸ்வநாதருக்கு கோவில் காட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்தார்.


நாலுக்கோட்டை பெரிய உடையத்தேவர், கிழவன் சேதுபதி காலத்தில், 300 பேர் கொண்ட படையை கொண்டு நாலுக்கோட்டை பகுதியை ஆட்சி செய்து வந்தார். கிழவன் சேதுபதிக்கு பின் பொறுப்பேற்ற விசய ரகுநாத சேதுபதி, தனது மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை, பெரிய உடைய தேவரின் மகனான சசிவர்ண தேவருக்கு மணம் முடித்து கொடுத்தார். சசிவர்ண தேவர் 3000 பேர் கொண்ட படையை வைத்துக்கொள்ள சேதுபதி அனுமதி அளித்தார். சசிவர்ணத்தேவர் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம், திருப்புவனம் ஆகிய பகுதிகளில் இருந்த கோட்டைகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். தொண்டை துறைமுகத்தின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
( A struggle of freedom in redsoil of south by M.balakrishnan p 4-5)

கிபி 1723 ல் திருவுடைய சேதுபதி மரணமடைந்த பின், அவரது வாரிசான தண்டத்தேவர் சேதுபதி மன்னராக பதவி ஏற்க தயாரானார். இந்த பதிவியேற்பை ஏற்காத பவானி சங்கரன், தண்டத்தேவரோடு போரிட்டார். தண்டத்தேவர் புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமான் மற்றும் மதுரை மன்னரிடம் உதவி கேட்டார். அறந்தாங்கி அருகே நடைபெற்ற போரில் பவானி சங்கரன் தோற்கடிக்கப்பட்டு , தஞ்சைக்கு தப்பி ஒடினார். தண்டத்தேவர் இராம்நாடு மன்னராக பதவி ஏற்றார். போரில் உதவிய இரகுநாதராய தொண்டைமானுக்கு திருமயம் கோட்டையை அளித்தார்.
( General history of pudukkottai state 1916 p 152)

பவானி சங்கரன் தோற்கடிக்கப்பட்டு 4 மாதங்களில் மீண்டும் சேதுபதி மீது தஞ்சை மராத்தியர் உதவியோடு போர் தொடுத்தான். தஞ்சை மராத்திய உதவினால், தஞ்சை தெற்கில் உள்ள பகுதிகள் முழுவதும் அளிப்பதாக பவானி சங்கரன் உறுதி அளித்ததன் பேரில் மராத்திய தளபதி ஆனந்த ராவ் தலைமையில் படை சேது சமஸ்தானத்தை தாக்கினார். சேதுபதிக்கு உதவியாக வந்த மதுரை படைகள் மற்றும் தொண்டைமான் படைகள் முறியடிக்கப்பட்டு தண்டத்தேவர் கொல்லப்படுகிறார். சேது சமஸ்தானம் பவானி சங்கரன் கைக்கு மாறியது. பவானி சங்கரன் உறுதி அளித்தப்படி தஞ்சை மராத்தியருக்கு நிலங்களை அளிக்கவில்லை. தண்டத்தேவரின் தம்பி கட்டயத்தேவர் இராம்நாட்டில் இருந்து தப்பித்து தஞ்சையை அடைகிறார்.
( General history of pudukkottai state 1916 p 153)


சேதுபதியாக பதிவியேற்ற பவானி சங்கரன், சசிவர்ணத்தேவருடன் சண்டையிட்டு அவரை நாலுகோட்டை பாளையத்தை விட்டு வெளியேற்றினான்.பாளையத்தை இழந்த சசிவர்ண தேவர், காளையார் கோயில் காட்டில் சாத்தப்பையா எனும் ஞானியை சந்திக்கிறார்.அவரது அறிவுரைப்படி சிவகங்கை தீர்த்தத்தில் குளித்து, ஞானி அளித்த விபூதியையும், மந்திர உபதேசத்தையும் பெற்று, தஞ்சை மராத்திய மன்னரை சந்தித்து, வேங்கைப்புலி ஒன்றை அடக்கி தனது வீரத்தை நிரூபித்தார். தஞ்சை மன்னர் சசிவர்ணத்தேவருக்கு உயர் ராணுவ பதவியையும், மரியாதையையும் அளித்தார்.தஞ்சை மன்னரை கொல்ல செய்யப்பட்ட சதியை முறியடித்து அவரது உயிரை காப்பாற்றினார். இதனால் மகிழ்ந்த மன்னர், சசிவர்ணத்தேவரிடம் என்ன உதவி வேண்டும் என கேட்க, அவர் பவானி சங்கரனை வீழ்த்த படை உதவி வேண்டும் என கேட்க,ஏற்கனவே போர் உதவி செய்தும் பவானி சங்கரனால் ஏமாற்றப்பட்ட தஞ்சை மன்னர் படை உதவி அளிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் தஞ்சையில் தஞ்சம் புகுந்த மறைந்த சேதுபதி தண்டத்தேவரின் தம்பி கட்டையத்தேவரும் இணைந்து கொண்டார். தஞ்சை மன்னர் 12000 பேர் கொண்ட படையை உதவிக்கு அளித்தார்.
( A struggle of freedom in redsoil of south by M.balakrishnan p 6-7)


" சேது பதிதுரை சென்றார்கள் தொண்டைமான் சீமையிலே மன்னர் சேதுபதி துரைவார சேதியை தொண்டைமான் தானறிந்து இந்நிலந் தன்னி லெதிரே சென்று இராசனைப் பணிந்து அழைத்து வந்து தன்னுடை சீமைதளம் ராணுவத்தை சகலமுங் கூட்டியே ஒன்று சேர்த்து ஏகப்பெரும்படை யாய்த்திரண்டு "
( சிவகங்கை சரித்திர கும்மி 1820 பக்-8) 

சேதுபதி கட்டயத்தேவர் சசிவர்ண தேவருக்காக தொண்டைமான் சீமை சென்று ரகுநாதராய தொண்டைமானை சந்தித்து படை உதவி கேட்டார். தொண்டைமான் மன்னர் பெரும்படையை அளித்து உதவினார்.


" காளிகா தேவியைத் தான்துதித்துக் கால்நடை யாயொன்றி யாக வேதான் வீளிமார் தூண்குடி சேர்ந்து வெளியேற மலங்கே யொளித்திருந்தார், மன்னன் சேதுபதிச் சுவான்துரை தொண்டை மண்டல துரை மூவருடன் செந்நெல் விளை முகவை நகர்கோட்டை சென்றங்கே, சுற்றிப்பார்பளவில், பவான் சிங்கு ஓடி ஒளித்ததினால் எப்படி சீமை ஆள்வோமென்று"
( சிவகங்கை சரித்திர கும்மி 1820 பக்-8)



ரகுநாதராய தொண்டைமான், கட்டயத்தேவர், சசிவர்ணத்தேவர் (சுவான்துரை) மூவரும் பெரும் படை கொண்டு பவானி சங்கரனை தாக்கினர். தாக்குதலில் தோல்வியடைந்த பவானி சங்கரன் ஒடி ஒளிந்துவிட்டான்.

கட்டயத்தேவர் சேதுபதியாக பதவி ஏற்கிறார், போரில் வீரம் காட்டிய சசிவர்ணத்தேவருக்கு சேது சமஸ்தானத்தின் 5ல் இரு மடங்கு பகுதிகளை அளித்து, ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடையத்தேவர் எனும் பட்டத்தையும் அளித்தார்.

சேது சமஸ்தானம் ஆபத்தில் இருந்த சமயங்களிலும், சமஸ்தானத்தை இழந்த போதும் ரகுநாதராய தொண்டைமான் சேதுபதி மன்னர்களுக்கு தொடர் போர் உதவிகளை செய்துள்ளார். சிவகங்கை சமஸ்தானம் உருவாக, போரிட்டவர்களில் ரகுநாதராய தொண்டைமானின் பங்கும் முக்கியமானது. புதுக்கோட்டை சமஸ்தானமும் சிவகங்கை சமஸ்தானமும் மண உறவால் இணைந்திருந்தனர்.

1733-ல் தஞ்சை அரசரின் சேனைத்தலைவனாகிய ஆனந்தராவ் ஒரு பெரிய சேனையுடன் புதுக்கோட்டை மேல் படையெடுத்துப் போர்புரியமாலே சூழ்ச்சியால் பெரும் பகுதியைப் பற்றிக்கொண்டார் ஆயினும், நெடுநாள் வரை திருமெய்யம் கோட்டையைப் பிடிக்க முடியமையால் முடிவில் புதுக்கோட்டையைக் கைவிட்டு ஓடி விட்டான்.

‘கனத்த புகழ்படைத்த காளிக்
குடிக்கோட்டையில்,
ஆனந்தராயனை அதிரவெட்டுந்
தொண்டைமான்’



என்றும் இவரை புகழ்ந்து பாடுவதும் உண்டு.

திரும்பிச் செல்லும்போது புதுக்கோட்டையின் பாதுகாப்பு அரண்களையெல்லாம் தகர்த்துவிட்டு தலைநகரத்தையும் சூறையாடிவிட்டுச் சென்றான்.

கிபி 1738 ல் விஜய ரகுநாதராய தொண்டைமான், தென்னங்குடியில் உள்ள கோயிலை பராமரிக்க பல்லவராயர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினார்.

இவர் ஆட்சிக் காலத்தில் வடக்கே முகலாய வம்சத்து சக்கரவர்த்திகள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்த முகலாய சக்கரவர்த்திகளின் ஆளுகைக்குட்பட்டதாக தெற்கே நிஜாமும், அவருக்குக் கீழ் ஆற்காடு நவாபும், அவர் கட்டுப்பாட்டின்கீழ் நாயக்கர்கள் ஆண்ட செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய சின்னஞ்சிறு ராஜ்யங்களும் இருந்து வந்தன.

இந்த சின்னஞ்சிறு ராஜ்யங்கள் கர்நாடிக் நவாப் எனப்படும் ஆற்காடு நவாபுக்குக் கப்பம் கட்டி வந்தனர். இடையிடையே இவர்கள் கப்பம் கட்ட தவறும் போது, கர்நாடக நவாப் இவர்கள் மீது படையெடுப்பதும், அதற்கு ஆங்கில கம்பெனியார் உதவி செய்வதும் வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட படையெடுப்புகளுக்கு ஏனைய ராஜ்யங்கள் பலியான போதும் புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் இதுபோன்ற படையெடுப்புகளில் இருந்து தப்பித்து வந்தது.

தொண்டைமானுடன் போரிட்டவர்கள் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களும், சந்தா சாஹேபும் அவனுக்கு உதவியாக வந்த பிரெஞ்சுப் படைகளும்.

தென் இந்தியாவில் பிரிட்டிஷார் ஒரு புறமும், பிரெஞ்சுக்காரர்கள் மறுபுறமும் இருந்து கொண்டு இந்திய பகுதிகளை வேட்டையாட முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்து வந்தார்கள்.

புதுக்கோட்டை மன்னர் தங்களுடன் உறவு பூண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சுக் காரர்களிடமும், சந்தா சஹேபிடமும் விரோதம் கொண்டு போராட வேண்டியிருந்தது.



தஞ்சை கள்ளர் பாளையமான  பாலையவனம் மற்றும் வாராப்பூரை ஜாகீரை தாக்கி இதில் வாராப்பூர் ஜாகீரான பிராமணரை தொண்டைமான் படையில் இருந்த ஒருவர் கொல்கிறார். வாராப்பூர் முழுவதும், பாலையவனத்தின் சிலபகுதிகள் தொண்டைமான்கள் வசமாகிறது.

1741 ல் மராத்தியர்களுக்கு ஆதரவாக சந்தா சாகிப்புக்கு எதிராக தொண்டைமான் படை போரிடுகிறது இதிலும் தொண்டைமான்கள் வெற்றியடைகின்றனர். வஜ்ஜிருடு (துணிவான வீரர்கள்) பட்டம் அப்பொழுது கொடுக்கப்படுகிறது.


சந்தாசாகிப்படையெடுப்பினால் புதுக்கோட்டையிலுள்ள அரண்மனையும் பகைவருடைய பீரங்கிக் குண்டுகளால் அழிந்து விட்டது ஆதலின் இவர் புதுக்கோட்டைக்குத் தென்கிழக்கே சிவஞானபுரம் என்னும் ஓர் புதிய அரண்மனையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து ஆட்சி செய்து வந்தனர்.


கிபி 1749 ல் கீழாநிலை கோட்டை கைப்பற்றப்பட்டது.

ஆற்காடு நவாப் பதவிக்கு அங்கு பங்காளிச் சண்டை நடந்து கொண்டிருந்த சமயம். நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையில் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முகமது அலிக்கு ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனியாரும், சந்தா சாஹேபுக்கு பிரெஞ்சுக்காரர்களும் ஆதரவு தந்தனர்.



இந்த யுத்தங்கள் திருச்சியை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

தஞ்சை மராத்தியர்கள் அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டு, ஒரு முறை முகமது அலிக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தும், சந்தா சாஹேபு படையெடுத்து வந்தால் அவனுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்து சமாதனம் செய்து கொண்டும் இருந்துவிட்டு, இறுதியில் சந்தா சாஹேப் வசமாக மாட்டிக் கொண்ட சமயம் அவனைப் பிடித்து சிறைவைத்து, முகமது அலியின் விருப்பப்படி அவன் தலையை வெட்டி திருச்சிக்கு அனுப்பியும் வைத்தனர். ஆற்காடு நவாப் சந்தாசாகேப் சமாதி தஞ்சாவூரில் உள்ளது.




இந்த யுத்த அரசியலின் காரணமாக தெற்கே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் ஆதிக்கத்தை மிகவும் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டனர்.

இப்படி புதுக்கோட்டை தொண்டைமான்களும், தஞ்சை மராத்தியர்களும் ஆங்கில கம்பெனிக்குச் செய்த உதவி காரணமாக ஆற்காட்டு நவாபுக்கு இவர்கள் கப்பம் கட்டுவது தள்ளுபடி செய்யப்பட்டது. இது புதுக்கோட்டைக்கு நிரந்தரமான சலுகை என்றாலும், தஞ்சையைப் பொறுத்த மட்டில், கர்நாடக நவாப் ஆங்கிலேயர்களிடம் வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமல் தஞ்சைக்குக் கொடுத்த சலுகையை நீக்கிக் கொண்டு, மீண்டும் கப்பம் கேட்டு தஞ்சையை துளஜேந்திர ராஜாவிடமிருந்து இரு ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தனர்.



இந்த சூழ்நிலையில் 1750இல் இரண்டாம் கர்நாடிக் யுத்தம் தொடங்கியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு தஞ்சை மராட்டியர்கள் ஆதரவு கொடுத்துப் போரிட்டனர். அப்போது திருச்சிராப்பள்ளி கோட்டையை பிரெஞ்சுக் காரர்கள் முற்றுகையிட்டனர். அந்த முற்றுகையின் போது பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியப் படைகளுக்கு புதுக்கோட்டை எல்லா உதவிகளையும் அனுப்பி உதவி செய்தது. 1752 ஆம் ஆண்டில் தொண்டைமான் , சின்னன்னா சேர்வைக்காரன் தலைமையில்,  400 குதிரைகள் மற்றும் 5000 கள்ளர் படையினரை அனுப்பினார். கள்ளர்களின் நீண்ட ஈட்டிகளை ஆயுதங்களாக பயன்படுத்தினர். எதிரிகளின் முகாம்களை அவர்கள் கொள்ளையடித்தும்  மற்றும் எல்லோரையும் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பிரெஞ்சுப் படைகள் 1754 மே மாதத்தில் புதுக்கோட்டையைக் குறி வைத்துத் தாக்கி புதுக்கோட்டையை துவம்சம் செய்தது.

பச்சை தொண்டைமான் என்பவர் குளத்தூரை ஆண்ட கடைசி தொண்டைமானின் சகோதரர் அவர் விஜய ரகுநாத தொண்டைமானை எதிர்க்கிறார்.


ஆவுடையப்ப சேர்வைக்காரரும், இளந்தாரி அம்பலமும் தொண்டைமானை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகாதாம்பாள் கோவிலில் அமர வைக்கின்றனர்.

பச்சை தொண்டைமான் தன்னுடைய படைகளை குமார கலியராயன் தலைமையில் குடுமியான் மலையில் நிறுத்தி அங்குள்ள கிராமங்களை கைப்பற்றி விட்டனர்.


விஜய ரகுநாத தொண்டைமான் படையானது இரண்டு தளபதிகள் தலைமையில் பச்சை தொண்டைமான் படைகளை சூரையாடி வென்றது.


இதில் சிறப்பாக பணியாற்றிய ஆவுடையப்ப சேர்வைக்காரருக்கு "அரசு நிலைநிறுத்திய ஆவுடையப்ப சேர்வைக்காரர்" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.


1750 இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடிதிருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார்.


பச்சை தொண்டைமான் குடிமியான் மலை கோவிலில் ஒழிந்து கொள்கிறார்.மீண்டும் அவரை பிடித்து சிறையில் அடைக்கின்றனர்.


கிபி 1756 ல் வல்லநாடு தாலுக்காவில் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டது. 


1759-1760 ஆம் ஆண்டில் சென்னை முற்றுகையின் போது 1,500 வீரர்கள் மற்றும் 500 குதிரைகளை அனுப்புவதன் மூலம் பிரித்தானியருக்கு மீண்டும் உதவினார், பின்னர் 1763 இல் முழு பிரிட்டிஷ் பாதுகாப்பை முறையாக ஏற்றுக்கொண்டார்.

இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் மராத்திய சாம்ராஜ்யம் மற்றும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி, சந்தா சாகிப் ஆகியோருடன் இடைவிடாத போர்களில் ஈடுபாட்டார்.

மன்னர் விஜய ரகுநாத ராய தொண்டைமான் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் இடைவிடாது போரிலே காலங்கழித்து இந்த போரின் பயனாக இவருக்கு அனேக நாடுகள் சேர்ந்தன.

இவ்வரசர் 1769-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவருக்கு அடுத்து மன்னராகிய இராய ரகுநாத தொண்டைமான் என்பவர், இவருடைய மனைவியர் அறுவரில் மூன்றாவது மனைவியாகிய ரெங்கம்மா ஆய் என்பவருக்குப் பிறந்தவர்.


"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு"' எழுதிய ஜெ. ராஜாமுகம்மது பார்வையில் பொ.ஆ 1730~1769 - மன்னர் முதலாம் விஜயரகுநாதராய தொண்டைமான்



















நன்றி : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்