புதன், 9 ஜனவரி, 2019

சோழமண்டல கள்ளர் நாடான வல்லநாட்டின் முதலாம் ராஜராஜ சோழனின் "இளங்காடு"




சோழமண்டல கள்ளர்நாடுகளில் வல்லநாடாகவும், ஆர்க்காட்டு கூற்றத்தின் கீழும் "இளங்காடு கிராமம் " இளசை மாநகர் வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்துத் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கல் தொலைவில் நியமம் திகழ்கின்றது. பண்டைய நியமம் என்னும் கோநகரம் தற்போது நியமம், இளங்காடு, உஞ்ஜினி என்ற மூன்று சிற்றூர்களாகப் பிரிந்து பழமைச் சுவடுகளைத் தாங்கி நிற்கின்றன.



அந்த பண்டைய நகரத்தில் திகழ்ந்த கோயில்களில் இன்று முழுமையாக எஞ்சி நிற்பவை நியமத்து ஐராவதீஸ்வரர் கோயிலும், இளங்காட்டு சிவாலயமுமேயாகும். ஐராவதீஸ்வரர் திருக்கோயில் காவிரிக்கரையிலேயே அமைந்துள்ளது. இந்த ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு தென்மேற்காக அமைந்த திடலில் தான் பல்லவர்காலத்து ஆயிரத்தளி என்ற சிவாலயம் இருந்துள்ளது.


இரண்டாம் நந்திவர்ம பல்லவன் இதே காவிரிக்கரையில் வீரசிங்கம் பேட்டை என்ற தற்போதைய ஊரில் ஆயிரம் சிவலிங்கங்களுடன் ஆயிரத்தளி என்ற கோயிலை எழுப்பித்ததோடு அந்நகருக்கு நந்திபுரம் எனவும் பெயரிட்டு தனக்குரிய சோழநாட்டுத் தலைநகரமாக்கினான். அதே காலக்கட்டத்தில் தான் நியமத்தில் அவனுடைய குறுநில அரசன் முத்தரையன் ஆயிரம் லிங்கங்களுடன் ஒரு ஆயிரத்தளியை அமைத்தான்.

ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோயிலை எழுப்பித்தபோது நியமத்து ஆயிரத்தளி மிகச் சிறப்புடைய கோயிலாக இருந்திருக்கிறது.

பல்லவர், முத்தரையர், சோழர், பாண்டியர் என நான்கு மரபு மன்னர்களும் போற்றி வழிபட்ட காளாபிடாரியும் இந்த பகுதியில் உள்ளது.

இளங்காடு ஒரு சிறிய கிராமம். வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி ஆற்றின் தெற்கிலும், பிள்ளை வாய்க்காலுக்கு வடக்கிலும் அமைந்திருக்கிறது இந்த ஊர். ராஜகிரி, வாலவனம், இளங்காடு என இந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு. எல்லாம் காரணப் பெயர்களே.

சோழ மன்னர்களுக்கும், இந்த ஊருக்கும் நிறைய தொடர்பு உண்டு. சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும், மலையமான் மகளான வானவன் மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது மகன் முதலாம் ராஜராஜ சோழன். இம்மன்னன் தான் போரிட்ட காந்தளூர் சாலைப் போரில் பெரிய வெற்றி பெற்றான். இந்த வெற்றிக்கு அடையாளமாக இளங்காட்டில் ஒரு சிவாலயத்தை கட்டினான். கி.பி.989-க்கு மேல் கி.பி 998-க்குள் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அதுவே விஜயவிடங்கேஸ்வரர் ஆலயம்.

தனது முதல் வெற்றியின் அடையாளமாக தனது முதல் பட்டமான ராஜகேசரி என்ற பெயரையே இவ்வூருக்கு வைத்துள்ளான். அதன்பின்னர் கி.பி. 1004 முதல் கி.பி 1010 வரை தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக மட்டுமல்லாமல், தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடியாகவும் இளங்காடு திருத்தலம் அமைந்ததாக கூறப்படுகிறது.




தமிழ் வளர்த்த இளசை மாநகரின் பெரும்நிலக்கிழார்கள்  பலகோதண்டபாணி சேதிராயர் , கோவிந்தசாமி சேதிராயர் , கணபதி சேதிராயர்


இக்கோவிலில் கள்ளர் குடியினரின்

சேதிராயர், 
மேற்கொண்டார், 
மூவரையர், 
வில்வராயர், 
கொல்லத்திரையர், 
நாட்டார்,
பாப்புரெட்டியார் (பார்புரட்டியார்)

பட்டந்தாங்கிய கள்ளர் இனக்குழுக்களுக்கு மட்டுமே இன்றளவும் முதல் மரியாதை செய்யப்படுகிறது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பாப்புரெட்டியார் பிறந்த ஊரும் இதே என்பது கூடுதல் தகவல். மேலும் இந்த ஊரில் தமிழ்ப்பற்று உள்ளவர்கள் .



வாலைவனம் இளங்காட்டில் (இராசகிரி, வல்லநாடு) உள்ள "நவீன இயற்கை வேளாண்மையின் சிற்பி" ஐயா.நம்மாழ்வார் பார்புரட்டியாரின் இல்லம்:-




கிபி-1881ல் வாலை வனம் வல்லநாடாம் (இளங்காட்டில்) தொடங்கப்பட்ட நற்றமிழ்ச்சங்கம்


வாலைவனம் ஐந்துகரை வல்ல நாட்டார்களின் கொற்றவை ஶ்ரீ திரெளபதி அம்மன் ஆலயம்





சந்தி வீரன் கோயில்
மூவரையர்களின் அறப்பணி



என் ஆசிரியப்பிரான்  என்னும் நூலில் மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாதையர் சுயசரித்திரத்தின் தொடர்ச்சி கி. வா. ஜகந்நாதன் எழுதியது :




ஒரு முறை. 1916-ஆம் ஆண்டு மே மாதம் 6, 7-ஆம் தேதிகளில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் சிற்றுாரில் நற்றமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு ஆசிரியப் பெருமானைத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். ஆசிரியர் அந்த அழைப்பை ஏற்று அங்கே போனவுடன் எல்லோரும் மிகவும் அன்புடன் வரவேற்றர்கள். அங்குள்ள கள்ளர் வகுப்பினர் நல்ல தமிழ் அறிவு உடையவர்கள். வரிசையாக நின்று ஆசிரியப்பெருமான அவர்களைக் கும்பிடுகிறேன் என்று ஒருவர் சொல்லி விழுந்து வணங்கினர். அப்படியே மற்றவர்களும் வரிசையாக விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்டு ஆசிரியப் பெருமான் வியந்தார்.

அவர்களில் ஒரு வயோதிகர் நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து வணங்கி எழுந்தார். "ஐயா அவர்கள் வந்ததைத் தமிழ்த் தெய்வமே இங்கே வந்துள்ளதாக நினைக்கிறோம். நாங்கள் எழுதிய விண்ணப்பத்தை ஏற்றுத் தாங்கள் இங்கே வந்தீர்களே! இப்போது வராவிட்டால் அப்புறம் எப்படியோ?” என்று சொன்னபோது எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். வஞ்ச நெஞ்சம் இல்லாத அவரது பேச்சில் அன்பு இருந்தது. ஆனால் மற்றவர்களோ தவறாக எண்ணிக் கொண்டார்கள்.







இளங்காட்டில் உள்ள சேதுராயர்களின் பழமையான வீடுகள்





நியமத்தில் உள்ள ஆயிரத்தளி மண்டபத்தில் சோழர்கள் முடிசூடுவர். இராசராசன் காலத்தின் தொடக்கத்தில் சோணாட்டை வென்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன் இந்த ஆயிரத்தளி நகரை அழித்து வீர அபிஷேகமும் விசய அபிஷேகமும் (குலோத்துங்கன் மதுரையிற் செய்தாற் போல) செய்து கொண்டான். விஜயவிடங்கேஸ்வரர் கோவிலில் இதற்கு ஆதாரமாக மீன், அம்பு போன்ற பாண்டியர்களின் அடையாளம் கோவிலின் முகப்பு வாயிலில் வரையப்பட்டு இன்றளவும் உள்ளது.


1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவாலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விஜய விடங்கேஸ்வரர் என்பதாகும். வாலவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இறைவி பெயர் வாலாம்பிகை அம்மன். இந்தப் பெயரின் காரணமாக இவ்வூருக்கு வாலைவனம் என்ற பெயர் வந்திருக்கலாம். வாலைவனம் என்பதை தமிழ்படுத்தி இளங்காடு என தற்போது அழைப்பதாகக் கூறுகின்றனர்.




இந்த சிவாலயத்தின் அமைப்பு தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போன்றே உள்ளது. இக்கோவிலின் கருவறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள விமானம் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் மேலுள்ள விமானம் போலவே காட்சியளிக்கிறது.
இக்கோவிலின் கருவறையைச் சுற்றி ஒரு பிரகாரம் போல், சுமார் இரண்டு அடி அகல சாந்தாரம் எனும் திருச்சுற்று அமைந்துள்ளது.

ஆலய திருச்சுற்றுக்கும் கருவறைக்கும் இடையே உள்ள இந்த திருச்சுற்றின் அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியின் அருகே உள்ள ஒரு நுழைவாசலில் நுழைந்து, இந்த திருச்சுற்று வடக்கில் திரும்பி, மறுபடியும் கிழக்கில் திரும்பி, வடக்கு பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு முன்பாக பிரகார வலம் நிறைவு பெறுகிறது. முற்றிலும் இறைவனின் கருவறையை சுற்றிய திருச்சுற்றாகவே இது உள்ளது.

ஆலய விமானம் எத்திசையிலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே காட்சி அளிக்கிறது. ஆலய முகப்பில் ராஜகோபுர மண்டபம் நுழைவு வாசலாக அமைந்துள்ளது. இந்த வாசலின் இடதுபுறம் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்துடனும், வலதுபுறம் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.

உள்ளே நுழைந்ததும் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நான்கடி உயரமும், நாலரை அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரே கல்லால் ஆன நந்தி காணப்படுகிறது. இந்த நந்தி தனது கால்களை மடக்கி படுத்த நிலையில் இறைவனை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அடுத்து மகாமண்டபம். அதையடுத்த கருவறைக்கு தென்புறம் விநாயகரும், வடபுறம் ஆதி விஜயவிடங்கேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இந்த இறைவனின் ஆவுடை சதுர வடிவமானது. மண்டபத்தின் தென்பகுதியில் நால்வர் திருமேனி உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விஜயவிடங்கேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.

திருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.

ஆலய பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் வாலாம்பிகை அம்மன் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் அடுத்துள்ள கருவறையில் அன்னை வாலாம்பிகை நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் அழகே அழகு. இங்கு அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்திய படியும், கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள். பெரும்பாலும் சிவாலயங்களில் இறைவி தெற்கு நோக்கியே அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் திருவையாறு, திருவானைக்கோவில், திருவண்ணாமலை தலங்களைப் போல, இங்கும் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். இக்கோலத்தை திருக்கல்யாண கோலம் என்று அழைப்பார்கள். எனவே இங்குள்ள இறைவி வாலாம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரமும் சிவபெருமான் சடையில் சூடும் சரக்கொன்றை மரமும் உள்ளன. கோவிலுக்கு உரிய தீர்த்தங்கள் மூன்று. ஊரின் வட புறம் ஓடும் காவிரி. ஊரின் தென்புறம் உள்ள முழங்கான் குளம். கோவிலின் ஈசானிய மூலையில் உள்ள தீர்த்தக்கிணறு.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா, கார்த்திகை மாதத் திருநாள், மார்கழி மாத திருவாதிரை, தை மாதப் பூசத்திருநாள், மாசி மாத மகா சிவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம் என திருவிழாக்கள் மிக சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. இது தவிர மாதப் பிரதோஷங்கள், சஷ்டி, கிருத்திகை வழிபாடுகளும் நடைபெறுகின்றன. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்

நன்றி : மாலைமலர்