வியாழன், 30 மார்ச், 2023

பழையாறை வரலாறு - சோழர் தலைநகரம்

Pazhayarai History - பழையாறை வரலாறு 

பழையாறையில் சோழ புலிகள் தங்கள் காலத்திற்காக, தங்கள் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருத்தனர். களப்பிரர் கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டை வென்று அரசாண்டனர். பின்னர், சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் களப்பிரரை வென்று சோழநாட்டைத் தொண்டை நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். சோழ அரசர்கள் முதலில் களப்பிருக்கும் பின்னர் பல்லவ அரசருக்கும் கீழடங்கி இருந்தார்கள். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அவர்களிடமே சில உயரிய பதவிகளை வகித்து வந்தனர். பிற்காலத்தில் ஆட்சி புரிந்த விசயாலய சோழன் வழியினரும் அப்பழையாறை நகரைத் தமக்குரிய இரண்டாவது தலை நகராகக்கொண்டது அதன் தொன்மைத் தொடர்பு நோக்கியேயாம். இரண்டாம் பராந்தகன், கங்கைகொண்ட சோழன் முதலானோர் அம்மாநகரில் பல நாட்கள் தங்கியிருந்தமையும் அறியத் தக்கது.

சமயகுரவராகிய சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர் என்பார் கி. பி. ஆறாம் நூற் றாண்டிலாதல் அதற்குமுன்னராதல் இருந்திருத்தல் வேண் டும்.

சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகள், சோழநாட்டில் பழையாறை வடதளியில் இறைவனை வணங்குவதற்குச் சென்றபோது அக்கோயி லில் சிவலிங்கப் பெருமானை அமண் சமயத்தினர் மறைத்து வைக்கவே, அடிகள் உள்ளம் வருந்தினாராக, அதனை யுணர்ந்த அவ்வூரிலிருந்த வேந்தன், அடிகளது இன்னலைப்போக்கி வடதளிப்பெருமானை வழிபடச்செய்து சிறந்த விமானம் ஒன்றும் எடுப்பித்து, நாள் வழி பாட்டிற்கு நிவந்தங்களும் அளித்தனன் என்று திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் கூறுகின்றது . இதில் குறிப்பிடப்பெற்ற அரசன், அடிகள் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டில் பழையாறை' என்னும் தொன்னகரில் தங்கி வாழ்ந்து கொண்டிருந்த சோழர் மரபினனாகிய ஒரு குறு நில மன்னன் என்பதில் ஐயமில்லை.

நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்ற வனும் ஆகிய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் மனைவி மங்கையர்க்கரசி, ஒரு சோழ மன்னன் மகள் ஆவள். இதனை, 'மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி'  என்னும் திருஞானசம்பந்தர் அருட்பாடலால் நன்கறிய லாம். மங்கையர்க்கரசியின் தந்தை மணிமுடிச் சோழன் என்னும் பெயரினன் என்பது அவ்வடிகள் திருவாக்கினால் உணரப்படுகின்றது. ஆகவே, கி. பி. ஏழாம் நூற் றாண்டின் இடைப்பகுதியில் மணிமுடிச்சோழன் என்ற மன்னன் ஒருவன் சோழ நாட்டில் இருந்தான்.

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரையில் குறுநில மன்னரா யிருந்த சோழர், சில காலங்களில் பாண்டியர்க்கும் சில காலங்களில் பல்லவர்க்கும் திறை செலுத்திக்கொண்டு அவர்கட்கு அடங்கி வாழ்ந்து வந்தனர் என்பது உய்த் துணரப்படுகிறது.

பழையாறையில் தான், பல்லவர் காலத்தில் குறு நில மன்னராயிருந்த சோழர் இருந்தனர் என்பது ஈண்டு உணரற்பாலதாகும்.

சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. இங்குதான் சோழர்களின் முடிசூட்டும் விழா நடைபெறும்.

சோழர்களின் இறுதி தலைநகரமாக பழையாறை நகரமே இருந்தது.


ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு, நந்திபுரம் என்று பல பெயர்களைப் பெற்றிருந்தது.

விஜயாலயன் காலம் தொட்டு தஞ்சையும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழன் காலந்தொட்டு கங்கை கொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகத் திகழ்ந்த போதும் அப்பேரரசர்களின் குடும்பத்தவர் வாழ்ந்த கோநகரம் பழையாறையேயாகும்.

இவ்வூருக்கு தெற்கில் முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது.

பழையாறை கள்ளர் மரபை சேர்ந்த வீரையா இடங்கபிறந்தார், மற்றும் சுந்தராஜ வன்னியர்.




கள்ளர்களின் பட்டங்களான 
பழையாற்றரையர் (பழையாறை + அரையன்) 
மற்றும் 
பழைசையாளர்,  
பழைசையாட்சியார், 
பழைசைகொண்டார், 
பழைசைநாடர், 
பழைசையாண்டார், , 
பழையாறுகொண்டார், , 
முடிகொண்டார், 
நந்தியர், 
நந்திராயர், 
மழுவாடியார் 

பட்டங்கள் இப்புண்ணிய நகரினை தொடர்புடையவைகளாக உள்ளன.

இன்று பழையாறையில் கள்ளர் மரபினரின் 

1) இடங்காபிறந்தார்
2) வன்னியர்
3) அம்மானைதேவர்
4) தேவர்
5) கொட்டையுண்டார்
6) முதலியார்
7) சோழகர் 
8) 


பட்டங்களுடையவர்கள் உள்ளனர்.


பல பெருமைகளை கொண்ட பழையாறைக்கு ஊராட்சிமன்ற தலைவராக வென்ற 
ஐயா. ராமமூர்த்தி கொட்டையுண்டார் (அ ம மு க)

பழையாறை பக்கத்தில் கொட்டையூர் உள்ளது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்த ஊரின் அரையர்களே கொட்டையுண்டார்கள். 

1957 ஆம்  ஆண்டு கள்ளர் மரபை சேர்ந்த
G.சுந்தரராச வன்னியர்
N. வீரையா இடங்காபிறந்தார்

அவர்கள் பழையாறை கோயில் டிரஸ்டியாக இருந்து கோயிலை புதுப்பித்தார்கள். மேலும் வீரைய இடங்காபிறந்தார் பரம்பரை சேர்ந்தவர்களே இன்றும் அருள்மொழித் தேவீச்சரம் ஆனி மாத ஆனி திருமஞ்சனம் திருவிழாவை  செய்து வருகின்றனர்.

பழையாறைத் தலவரலாறு
பழையாறை தேவஸ்தான வெளியீடு , 1957





இன்றும் அங்குள்ள பழமையான வீடுகளும், அதனில் கள்ளர்களின் இடங்காபிறந்தார், சோனாடுகொண்டார், கொட்டையுண்டார் போன்ற பட்டம் உடைய செல்வந்தர்ளும் வாழ்கின்றனர்.


இடங்காபிறந்தார்



அம்மானைதேவர்

வன்னியர்


பழையாறை கள்ளர் 11 சுதந்திரபோரட்ட தியாகிகள் இருந்தனர். கடைசியாக சோமு தேவர் 2015ல் 95 வயதில் இயற்கை எய்தினார்.

சோமு இடங்காபிறந்தார்





இடங்காபிறந்தார்


கடைசி சோழனின் தலைநகரமாக பழையாறை சோழர்களின் தலைநகரமாக இருந்தது.

சோழர்களின் இறுதி காலத்தில் பழையாறையில் இருந்தனர் மூன்றாம் ராஜராஜ சோழனும், மூன்றாம் ராஜேந்திர சோழனும். பழையாறை மாநகர் சோழர்களின் இறுதியில் தலைநகராகக் இருந்து என்பதற்கு பாண்டியர்

"மணிமுடி இந்திரன் பூட்டிய பொலங்கதிர் ஆரம் மார்பினிற் பொழிய......
...... தஞ்சையும் உறந்தையும் செந்தழல்
கொளுத்தி மாடமதிலும் கோபுரமும் மாளிகையும் இடித்து ... ஆடகபுரிசை ஆயிரதளி வளவர் மண்டபத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் புரிந்த கோமாறவர்மர் சுந்தரபாண்டியதேவர்..." என்று குறிப்பிடுவதால் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரில்லை என்பதையும், மேலும் பாண்டியன் சோழனை பழையாறையிலயே இருக்க செய்தான்.














சோழப் பேரரசின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜராஜசோழனும், ராஜேந்திரசோழனும் வளர்ந்தது இந்த நகரிலேதான்.

சோழர் காலத்தில் அரண்மனைகளும், கோவில்களும், ஊரைச் சுற்றி படைவீடுகளும் கொண்டிருந்த பெருமை மிகு பழையாறை இன்று காலமாற்றத்தால் ஒரு சிறிய ஊராக மாறி உள்ளது.


பழையாறை ஊர் நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி (பழையாறை) மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்தன. தேவார காலத்தில் (1) முழையூர் (2) பட்டீச்சரம் (3) சத்திமுற்றம் (4) சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படையூர்களாக விளங்கின.

இந்நகரில் இருந்த 19 கோயில்களில் பல காலவெள்ளத்தில் அழிந்துவிட்டன. ஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் வழங்கப்பட்ட பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாதன் கோயில் என்றழைக்கப்படும் நந்திபுரத்து விண்ணகரம், கோபிநாதப்பெருமாள் கோயில், ராமநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படும் பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகிய கோயில்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.


சோழன் மாளிகை என்னும் பகுதியில்தான் சோழ மன்னர்களின் மாளிகைகள் இருந்தன. இந்தப் பகுதிக்கு அருகே இருந்த படைவீடுகளான அரியப்படைவீடு, பம்பைப்படைவீடு, புதுப்படைவீடு, மணப்படைவீடு ஆகியவையே இன்று ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் என அழைக்கப்படுகின்றன.

பழையாறை நகரத்தில் திருவாதிரை சுவாமி ஊர்வலம்




முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்தி முற்றம், சோழ மாளிகை, திருமேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்கள் அடங்கிய ஊரே பழையாறு ஆகும்.

உலக வரலாற்றில் எந்த ஒரு தலை நகருக்கும் ஒன்பது பெயர்கள் காலந் தோறும் மாறி மாறி வந்துள்ளதாக வரலாறும் இல்லை, ஆனால் பழையாறை மாநகரம் பெற்றிருந்த பெயர்கள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (மூவர் தேவார காலங்களில்)
1. ஆறை
2. பழையாறை
3. பழையாறு
4. பழைசை

கி.பி. எட்டாம் நூற்றாண்டில்
5. நந்திபுரம்
6. நந்திபுரி

கி.பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டில்
7. முடிகொண்ட சோழபுரம்
8. ஆகவமல்லகுலகாலபுரம்

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில்
இராச ராசபுரம்


எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம்:

கி.பி. 825 முதல் கி.பி. 850 வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், தன்னை எதிர்த்த சோழ, பாண்டிய கூட்டுப்படையினை தெள்ளாற்றுப் போரில் வெற்றி கண்டு, வெள்ளாறு, பழையாறு ஆகிய இடங்களில் எதிர் கொண்டு பாண்டிய எல்லை வரை விரட்டினான். நந்திக்கலம்பகம், இந்தப் போர் வெற்றியை “படையாறு சாயப் பழையாறு வென்றான்” என்று குறிப்பிடுகிறது.

பழையாறை நகரம் பல்லவ மன்னனாகிய நந்தி வர்மனது உள்ளத்தைக் கவர்ந்தது. அவன் தன் பெயரையும் அதற்கு அளித்தான், நந்திபுரம் என்னும் பெயர் பெற்ற அந்நகரில் திருமாலுக்குக் கோயில் கட்டினான். அதற்கு நந்திபுர விண்ணகரம் என்ற திருப்பெயர் சூட்டினான். அவ்விண்ணகரம் திருமங்கை மன்னனது பாமாலை பெற்றது.

நந்திவர்மன் காலத்திலும் சோழர்கள் அவனுக்குக் கீழடங்கியே யிருந்தார்கள். சோழ அரச குடும்பத்தார், உறையூர், பழையாறை, குடந்தை, திருவாரூர் முதலிய ஊர்களில் சிற்றரசர்களாக இருந்தார்கள்.

நந்திவர்மன் ஆட்சியின் கீழ் சில சிற்றரசர்கள் அரசாண்டார்கள். குமாராங்குசன் சோழன், சாத்தன் பழியிலி முத்தரையன், விக்கிரமாதித்தியன் வாணாதிராயன், நரசிங்க முனையரையர் என்னும் நால்வர் பெயர் தெரிகின்றன. (சோழகர், முத்தரையர், முனையரையர், வாணாதிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் சோழ மண்டலத்தில் அதிக செல்வ செழிப்போடும், செல்வாக்கோடும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்)

நந்தியன், நந்தன் என்ற #கள்ளர்கள் பட்டங்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம், பட்டவெளி, கண்டகிரயம், நல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.

சோழத்தேவர் சதயவிழா சோழத்தலைநகர் பழையாறை



அருண்மொழித் தேவேச்சரம்:

பழையாறையில் நாணயச் சாலை இருந்த இடம் இன்று ‘கம்பட்ட விசுவநாதர்’ ஆலயம் உள்ள இடமென்பர். (கம்பட்டம் - நாணயச் சாலை). இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. இவன் பெயரால் அருமொழிதேவர் என்ற பட்டம் கள்ளர்களுக்கு இருப்பதே ஒரு சிறப்பாகும்.

ராஜராஜ சோழரின் பெயரில் அவர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் சில உண்டு. தஞ்சை பெரிய கோவில் இறைவன் ராஜராஜேச்சரமுடையார் என்றே அவர் பெயரில் கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறார். அது போலவே சிவபுரம் கோவிலும் ராஜராஜர் பெயரில் அழைக்கப்படுகிறது. இதே போல் ராஜராஜ சோழரின் இயற் பெயரான அருமொழி தேவர் பெயரிலேயே ஒரு கோவில் சோழர்களின் முக்கிய நகரமான பழையாறையில் இருந்துள்ளமையை வேறோரு கோவிலின் கல்வெட்டின் மூலம் அறிகிறோம்.

குடந்தை அருகேயுள்ள திருநறையூர் எனும் நாச்சியார் கோவிலில் உள்ள சித்தநாதஸ்வாமி திருக்கோவிலுள்ள ராஜராஜரின் கல்வெட்டொன்றில் பழையாறையில் இருந்த அருமொழிதேவ ஈஸ்வரம் கோவிலுக்குரிய தேவதான ஊரைப் பற்றி விளக்குகிறது. பழையாறை சோழர்களுக்குப் பின் வந்த பிற்கால பாண்டியர்களால் அதிகமான சேதமுற்ற நகராகும். அரண்மனைகளை பாண்டியர் அழித்திருந்தாலும் கோவில்களை அழிக்கும் வழக்கம் இல்லை. எனவே பின்னர் வந்த படையெடுப்புகளாலோ அல்லது காலமாற்றத்தாலோ அக்கோவில் முற்றிலும் அழிவுற்றிருக்கலாம்.
எப்படியோ ராஜராஜர் காலத்தில் கட்டப்பட்டிருக்கக் கூடிய அக்கோவிலின் கல்வெட்டுகளும் அவை கூறும் வரலாற்றுத் தகவல்களும் அதன் கூடவே அழிந்து விட்டன என்பது வேதனை தரும் செய்தியாகும். ராஜேந்திர சோழர் கட்டியதாக சிலர் தவறாக கூறுகிறார்கள், ராஜராஜர் காலக் கல்வெட்டிலேயே சொல்லப்பட்டிருப்பதால் இது ராஜராஜர் கட்டிய கோவில் தான்.

முடிகொண்ட சோழபுரம்: -

ஆயிரம் மாடங்களை உடையதாய் நின்று நிலவிய மாளிகை ‘ஆயிரத்தளி’ என்று பெயர் பெற்றது. ஆயிரம்தளி கூடின இடம் ஆயிரத் தளி என்று அப்பெயரின் பொருளை விளக்குகின்றது வீர சோழிய உரை “ஆடகப் புரிசை ஆயிரத்தளி” என்று புகழப் பெற்ற அவ்வரண்மனையில் முடிசூட்டு விழாக்கள் நடைபெற்றன. அங்கு நின்ற அரியாசனத்தில் அமர்ந்து மாநில மன்னர் அரசாங்க ஆணை பிறப்பித்தனர். இராஜராஜன் உடன் பிறந்த குந்தவைப் பெருமாட்டியின் தனி மாளிகையொன்று அந்நகரில் அமைந்திருந்தது. கங்கைகொண்ட சோழன் என்று தமிழகம் பாராட்டும் இராஜேந்திரன் இளமைக் காலத்தில் அந்நகரிலுள்ள அரண்மனையில் வாழ்ந்தான் என்று அவன் வரலாறு கூறுகின்றது.

இம் மன்னன் அரசாளத் தொடங்கிய பின்னர் முடிகொண்ட சோழபுரம் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது அந்நகரம். முடி கொண்ட சோழன் என்பது அப் பெரு மன்னன் பெற்ற விருதுப் பெயர்களில் ஒன்று. பழம் பெருமை வாய்ந்த தலைநகரின் வளம் பெருக்கக் கருதி, அம் மன்னவன் காவேரியினின்றும் கொணர்ந்த நதி முடிகொண்டான் ஆறு என்றே இன்றளவும் வழங்கி வருகின்றது. இலங்கை அரசனின் கோட்டையையும் முடியையுங் கொண்டதால் கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்றும் அழைக்கப்பட்டனர். இன்றும் இந்த சிறப்பு பட்டோதோடு கள்ளர் வாழ்கின்றனர்.

இராசராசபுரம்:

இரண்டாம் இராசராசனின் பெயரால் இராச ராசபுரம் என்று அழைக்கப்பட்டது. இவனுடைய மெய்கீர்த்தி "கள்வன் ராஜராஜன்" என குறிப்பிடுகின்றது.

பஞ்சவன்-மாதேவிச்சரம்:

முதலாம் ராஜராஜனின் மனைவி பஞ்சவன்மாதேவி பழுவேட்டரையரின் மகள். இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின் திருமகள்” என்று கூறுகிறது. இத்தேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி”. ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர்.


பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும், சாதனைகளும் பலவாகும். நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்” என பெயர் மாற்றம் ஏற்பட்டது.

பஞ்சவன் மாதேவிச்சரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றனைகாக எடுக்கப்பட்ட நினைவாலயம்.


இத்திருகோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை “பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்” என்று குறிப்பிடுகிறது.

பழையாறை மாநகரில் ஒரு பகுதியாக திகழ்ந்த பட்டீச்சரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பஞ்சவன் மாதேவிச்சரம். பட்டீச்சரம் தேனுபுரிச்சரர் திருகோவிலில் இருந்து அரை கி மீ துரத்தில் உள்ளது இந்த பள்ளிப்படை ஆலயம். தற்பொழுது இந்த கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கபடுகிறது.

எட்டுக்கரதுர்க்கை:-


பட்டீஸ்வரம் அருகே பழையாறை மற்றும் சோழன் மாளிகையில் இருந்தவள் இந்த எட்டுக்கர துர்க்கை. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன், பொன்வேய்ந்தி பராந்தகன், வானமாதேவி, குந்தவைப்பிராட்டி, மங்கையர்க்கரசி ஆகிய சோழ அரசவம்சத்தவர்கள் இந்த துர்க்கையை வழிபட்டிருக்கின்றனர். சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசி தேவியாரும், ராஜராஜ சோழனுக்கு மதியூகி ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியாரும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜராஜ சோழத்தேவர்

கி.பி.1012 ம் ஆண்டில் ராஜராஜசோழன் தனது பட்டத்தை துறந்து, தன் மகன் ராஜேந்திரசோழனுக்கு முடிசூட்டினான். பின்னர் மகன் ஆட்சி புரிந்ததும் தன்னுடைய வாழ்நாளை பழையாறையில் கழித்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது கி.பி.1014ல் ராஜராஜசோழன் காலமானார்.

சோழர்களின் பழைய தலைநகரம், அந்நாளில் பெரிய நகரமாக இருந்தது தற்பொழுது பல கிராமங்களாகப் பிரிந்துக் கிடக்கிறது.

இந்த பகுதியின் சிறப்பு பெற்ற இடங்களில் சில

1. பழையாறை கீழ்தளி
2. நந்திப்புர விண்ணகரம்
3. முழையூர் ஞானாம்பிகை சமேத பரசுதேவர் ஆலயம் (இது பழையாறை தென்தளியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது).
4. பழையாறை வடதளி மாட கோவில்.
5. உடையாளூர் இராஜராஜர் பள்ளிப்படை.
6. உடையாளூர் பால்குளத்து அம்மன் கோவில்.
7.உடையாளூர் கைலாசநாதர் கோவில்.
8. உடையாளூர் கோட்டை வாயில் வினாயகர் ஆலயம்.


பழையாறை கீழ்தளி :

பழையாறை கீழ்தளியான சோமேஸ்வரர் ஆலயம், இடிந்த நிலையில் கோபுரம் உள்ளன. இக்கோவிலை முதலாம் குலோத்துங்கன் அல்லது விக்கிரம சோழர் கட்டுவித்திருக்கலாம் என இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிறைய சிற்பங்கள் உள்ள அற்புதமான ஆலயம். ரத அமைப்பில் அமைந்திருக்கும் ஈசனது சன்னிதி.

நந்திப்புர விண்ணகரம் :

பழையாறையில் அடுத்து நாங்கள் சென்ற ஆலயம் நந்திப்புர விண்ணகரம். மூலவராக சீனிவாசப் பெருமாளும் உற்சவராக ஜெகன்னாத பெருமாளும் அருளும் திருத்தலம்.

முழையூர் ஞானாம்பிகை சமேத பரசுதேவர் ஆலயம் :

பழையாறையிலுள்ள வைப்புத் தலமான இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதுவே பழையாறை தென்தளியாக இருத்தல் கூடும் என்பது ஆய்வாளர்கள் சிலரது கருத்து. இங்குள்ள ஞானாம்பிகை அம்பாள் அட்சயத் திரிதியைக்கு சிறப்பு மிக்கவர். ஆகவே இத்தலம் அட்சயத் திரிதியை சிறப்பு தலமாக உள்ளது.

பழையாறை வடதளி :

பழையாறை வடதளியான இது, ஒரு மாட கோவிலாகும். இது மிகவும் பழமை வாய்ந்த ஆலயம். பல்லவர் காலத்தில் சமண மதப்பள்ளியாக இக்கோவில் மாற்றப்பட்டதைக் கண்ட தேவார மூவருள் ஒருவரான திருநாவுக்கரசர் உண்ணாநோன்பிருந்து சமணர்களிடமிருந்து இக்கோவிலை மீட்டெடுத்தார். இங்கு தான் 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனராது வரலாறு நிகழ்ந்தது. கோவிலில் அமர்நீதிநாயனார் மற்றும் அவரது மனைவிக்கு சிற்பங்கள் உள்ளன. இவ்வூரில் தான் கூன்பாண்டியனான நின்றசீர் நெடுமாறனது மனைவி மங்கையர்க்கரசியார் பிறந்தார். இங்குள்ள தர்மபுரீசுவரர் 16 பட்டை தாரலிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் 12 ராசிகளுக்கும் தனித்தனியே லிங்கங்கள் உள்ளது வேறு எங்கும் காண இயலா சிறப்புமிக்கது. இக்கோவிலின் நந்தவன தோட்டத்தில் சில அழகிய சிலைகள் கேட்பாரன்றி உள்ளது.

உடையாளூர் ராஜராஜ சோழர் பள்ளிப்படை : ( உறுதி செய்யப்படவில்லை)

பழையாறை உடையாளூரில் ராஜராஜ சோழர் பள்ளிப்படை என்கிறார்கள். அது ராஜராஜரின் பள்ளிப்படை அல்லவென்று திரு. செல்வராஜ் ஐயா சில ஆதாரங்களை கூறினார். விரைவில் உண்மை வெளிவரும்.

உடையாளூர் பால்குளத்தம்மன் ஆலயம் :

உடையாளூர் பால்குளத்தம்மன் கோவில். இங்கே முட்டுக்கொடுக்கப்பட்ட தூண் ஒன்றில் தான் ராஜராஜர் பள்ளிப்படை குறித்த கல்வெட்டு உள்ளது. திரு. செல்வராஜ் ஐயா அந்த கல்வெட்டைப் பற்றி விளக்கி கூறினார்கள். அக்கல்வெட்டில் 'திருமாளிகை எழுந்தருளிய' என்ற வார்த்தைகளே உள்ளன...'பள்ளிப்படை' என்ற வார்த்தைகள் இல்லை...ஆதலால் உடையாளூரிலுள்ளது ராஜராஜரின் பள்ளிப்படையாக இருக்காது என்று திரு.செல்வராஜ் ஐயா விளக்கம் அளித்தார்கள். பால்குளத்தின் அக்கரையில் உடையாளூர் கைலாசநாதர் ஆலயம் உள்ளது.

உடையாளூர் கைலாசநாதர் ஆலயம் : 


உடையாளூர் கைலாசநாதர் ஆலயத்தில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பாதி கல்வெட்டுகளுக்கு மேல் சிதைந்து போய் உள்ளது. அக்கல்வெட்டுகளில் உடையாளூர் சிவபாதசேகரமங்கலம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்குள்ள சிவபாதசேகர அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தில் ராஜராஜ சோழரது திருவுரு உள்ளது. கைலாசநாதர் சன்னிதியினுள் மூன்று ராணிகளின் சிற்பங்கள் வணங்கும் நிலையில் உள்ளது.

உடையாளூர் கோட்டை வாயில் வினாயகர் ஆலயம் :

கைலாசநாதர் ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வெளிவந்ததும், அதே தெருவின் தொடக்கத்தில் ஒரு சிறிய அளவிலான வினாயகர் ஆலயம் உள்ளது. இவ்வினாயகர் கோட்டை வாயில் வினாயகர் என்றழைக்கப்படுகிறார். இதிலிருந்து அந்த இடத்தில் அக்காலத்தில் கோட்டையின் வாயில் இருந்திருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.


ஆயிரத்தளி

ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறுவது : எனது ஆய்வுகளுள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று 'நந்திபுரம் ஆயிரத்தளி' பற்றியது. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காஞ்சிபுரம் தனக்குப் பாதுகாப்பில்லை என்று கருதிய காரணத்தால், சோழநாட்டில் ஒரு பாதுகாப்புமிக்க தலைநகரை உருவாக்கினான். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளி என்பது. ஆயிரத்தளி என்றால் ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட பெருங்கோயில். நந்திபுரம் அதன் தலைநகர். பல்லவர், சோழர்களைப் பற்றி ஆராய்ந்த வல்லுநர்கள் எல்லாருமே இந்த நந்திபுரம் பழையாறையை அடுத்துள்ள நாதன்கோயில் என்பதாகத்தான் பதிவு செய்துள்ளனர். பழையாறையில் சோழ அரண்மனைகள் பல இருந்துள்ளன. பல்லவர்களின் அரண்மனையும் அங்கே இருந்திருக்கிறது. அதை வைத்து அவர்கள் அப்படி முடிவுகட்டினர்.

நானும் பல ஆண்டுகள் இதுபற்றி ஆராய்ந்தேன்; கல்வெட்டுச் சான்றுகளைப் பரிசீலித்தேன். Indian National Trust for Art and Culture (INTAC) ஒருமுறை கண்டியூர் கோயிலைப்பற்றி எழுதுவதற்கான ஆய்வுத் திட்டத்தை எனக்கு அளித்தது. நான் கண்டியூரில் கள ஆய்வு செய்தேன். அப்போது தஞ்சையருகில் வீரசிங்கம் பேட்டையில் ஒரு தோட்டத்தில் நிறையச் சிவலிங்கங்கள் உள்ளதாகவும், எங்கு தோண்டினாலும் சிவலிங்கமாக வருவதாகவும் செய்தி கிடைத்தது. உடனே நான் அங்கு சென்று ஆராய்ந்தேன். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளியாக இருந்திருக்க வேண்டும் என்று யூகித்தேன். அதற்கான தேடல்களைத் தொடர்ந்தேன். அரண்மனை, கோயில் இருந்த இடம், ஏன் அந்தக் கோயில் அழிந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தேன். மாலிக்காபூர் படையெடுப்பில் அழிந்த கோயில்களுள் அதுவும் ஒன்று. அதற்கான ஆதாரத் தரவுகளைச் சேகரித்தேன். எழுநூறுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால், மேலும் வலுவான சான்று தேவைப்பட்டது. அப்போதுதான் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைத்தது. அதில் ஆதாரம் இருந்தது.

மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டைக் கைப்பற்றி அதன் பழைய தலைநகரங்களான உறையூர், தஞ்சாவூர், பழையாறை போன்ற நகரங்களை அழித்துவிட்டுவிஜயாபிஷேகம் செய்துகொண்டது நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனை என்று தனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிட்டிருக்கிறான். வெற்றிக் கொண்டாட்டமாகச் சில ஊர்களையும் ஆலயங்களுக்கு நிவந்தமாக அளித்திருக்கிறான். அதனைப் பற்றி கல்வெட்டில் "சோழமண்டலத்து நித்த வினோத வளநாட்டு, கிழார் கூற்றத்து நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனையில் அமர்ந்து" செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறான். இது ஒரு முக்கியமான ஆதாரம்.

சோழநாட்டில் மூன்று நந்திபுரங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று வேதாரண்யம் பக்கத்தில்; மற்றொன்று பழையாறை அருகில்; மற்றொன்று இந்த நந்திபுரம். பழையாறை நந்திபுரம் திருநரையூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. வேதாரண்யம் நந்திபுரம் ஆவூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. கிழார்கூற்றத்தில் அமைந்த ஒரே நந்திபுரம், தஞ்சைக்கருகே கண்டியூர் பகுதியில் அமைந்திருக்கும் இதுதான் என்பது உறுதியானது. அதை மெய்ப்பித்து 'நந்திபுரம்' என்ற நூலை எழுதினேன். INTAC அந்நூலை வெளியிட்டதுு.


பழையாறை சோமேசர் திருக்கோயில்




































மன்னப்ப அய்யனார்  






நன்றி: 
 

உயர்திரு : ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன்
தெய்வதிரு : அபிராமி பாஸ்கரன்