திங்கள், 12 மார்ச், 2018

நாட்டரசன் கோட்டை “கள்ளர்” "நாடாழ்வான்" கோட்டை



சிவகங்கையிலிருந்து பத்து கி.மீ., தொலைவில் நாட்டரசன்கோட்டை என்ற ஊர் உள்ளது. இதற்கு களவழிநாடு என்ற பெயர். கண்ணகிக்கு கோவிலும் உள்ளது.

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் ஊரில் அமைந்துள்ளது. சயங்கொண்ட சோழ சீவல்லபன் குலசேகரன் ஆட்சியில் அரசியல் அதிகாரியாக இருந்தவன். களவழி நாட்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியதனால் களவழி நாடாழ்வான் எனப் பட்டம் பெற்றான். இவனைப் பற்றிய தகவல்கள் இராமநாதபுரம் கல்வெட்டுக்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஊர்த் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினருக்கு 'நாட்டரசன்' என்ற பட்டம் கூறி திருநீறு வழங்கப்படுகிறது. மேலும் கி.பி-11 ஆம் நூற்றண்டில், சிவகங்கையில், களவழி நாடாள்வான் என்ற சூரன் ஜெயங்கொண்ட சோழன் மடை அமைத்தது என்ற கல்வெட்டும் உள்ளது. போர்க்களம்‌ பல கண்ட மறவர்‌ வாழும்‌ நாடு அன்றோ? (களவழி நாற்பது) பாடும்‌-களமும்‌ பாண்டிய மூடிசூடும்‌ அரண்மனையும்‌ இருந்தமையால்‌ இவ்வூீ முடிகொண்ட பாண்டியர்புரம்‌ என்று பெயர்‌ பெற்றதாகவும் கருதப்படுகிறது. “களவழி நாடாள்வான்‌ கண்ணன்‌ கூத்தன்‌” என்ற கல்வெட்டுச்‌ சொற்‌ றொடர்க்கு ஏற்ப, இவ்வூர்த்‌ திருவிழாக்களில்‌ கள்ளர்‌ வகுப்பினர்க்கு “நாட்டரசன்‌” என்ற சொற்றொடரின்‌ காரணம்கூறித் திருநீறு வழங்கப்படுகிறது. நாட்டரசன்‌ என்ற குடும்பம்‌ இன்றும்‌ உள்ளது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்‌ களியாட்ட விழாவில்‌ இக்குடும்பதாருக்கு  சிறப்பான பங்கு இருந்து வருகிறது.







கள்ளர்கள் இன்றும் அங்கு நாட்டார், நாட்டாள்வார், நாடாள்வார், நாடாவார், நாட்டரசர், நாட்டரியார், நாட்டரையர் என்ற பட்டங்களை கொண்டுள்ளனர்.

சோழ நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த கள்ளர் நாட்டார் என்ற பட்டம் தாங்கி வந்துள்ளனர்.




நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாளை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டது "கண்ணுடையம்மன் பள் "நூல்! சைவநெறி முத்துநாயகம் எனும் முத்துக்குட்டிப் புலவர் இயற்றியது. ஏட்டுச் சுவடியிலிருந்த இந்நூலை 1938 இல் நாட்டரசன் கோட்டை செட்டியார்கள் முதல் பதிப்பை அச்சிட்டிருக்கிறார்கள்.

ஏழூர் நகரத்தார் என அழைக்கப்பட்ட செட்டியார்களின் புகழ்பாடும் நூல்களில் ஒன்று இந்த "கண்ணுடையம்மன் பள் " 1750 களில் இது படைக்கப் பட்டிருக்க வேண்டும். 

நாட்டரசன் கோட்டையை தென்பனசையூர் என்றும் இதனையும் சுற்றியுள்ள ஊர்களையும் வடகலை வேள்வி நாடென்கிறார்.

கண்ணாத்தாள் கோயிலுக்கு வடகலை நாட்டார் அழகிய தேர் ஒன்றை செய்தளித்தனர்.

கண்ணாத்தாளை
தெய்வக் கள்ளிச்சி என்றும்,
கரு மறத்தி என்றும்
மாணிக்கச் செட்டிச்சி என்றும்
போற்றுகிறார் முத்துக் குட்டி.

கண்ணாத்தாளை காவல் தெய்வமாக்கி வடக்குவாய்ச்செல்லி என்றும் வணங்குகிறார்.


கானாடு, கோனாடு ஆகிய இருநாட்டிலும் வாழ்ந்த இருபத்துநான்கு கோட்டத்து வேளாளர்கள் தாம், வேளாளரைச் சிறப்பித்து 'ஏர் எழுபது' என்னும் நூலைக் கம்பரை இயற்றச்செய்து, அரங்கேற்றி, பரிசில்களும் வழங்கினர். பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய்சொல்லாதேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இதுகுறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது.

இது கவிச்சக்கரவர்த்தி கம்பன் சமாதி உள்ள ஊராகும். கம்பன் இங்குதான் உயிர் துறந்தார் என்பர். இங்கு ஆண்டுதோறும் கம்பன் விழா எடுக்கப்படுகிறது. கம்பன் குளம், கம்பன் ஊருணி, கம்பன் செய், கம்பன் நடுகல் முதலியனவும் உள்ளன. நாட்டரசன் கோட்டையிலும், தேவ கோட்டைக்கு தென்மேற்கே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குடி எனும் ஊரிலும் தனது நிறைவுக்காலம் வரை கவிச்சக்கர வர்த்தி வாழ்ந்திருக்கிறார். கவிச்சக்கரவர்த்தியின் உறவினர்கள் வாழ்ந்த கல்லங்குடி கிராமத்தில் இருந்த சிவன்கோயில், அவருடைய வழிபாட்டுக் கோயிலாக இருந்திருக் கிறது. இன்றைக்குப் பாழடைந்து கிடக்கும் அந்தச் சிவன் கோயிலில் கவிச்சக்கரவர்த்தியின் முழு உருவச்சிலை இருக்கிறது.

இந்தப் பகுதி நாட்டார்களின் பாதுகாப்பில் கோட்டை வீடுகளைக் கட்டி வாழ்ந்து கொண் டிருக்கும் செட்டியார் குடும்பங்களுக்கு, இந்தப் பகுதியில் ஐநூறுக்கும் அதிகமான ஊர்களில் வாழ்கின்ற ஏழுகிளைக் கள்ளர்களும், வல்லம்பர்களும் துணையாக இருந்துள்ளனர், இன்றளவும் இருந்து கொண்டுமிருக்கிறார்கள்.

தல வரலாறு: 

நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். இவ்வூருக்கு , ஒரு இடையன், பால் எடுத்து வரும் போது, நாட்டரசன் கோட்டைக்கு அருகில் வருகையில் ஒரு கல் இடறியதால், பால் குடம் தவறி, பால் முழுவதும் கழனியில் கலந்தது. ஒரு நாள், இரு நாள் அல்ல, பல நாட்கள் இது தொடர்ந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் இது நடந்தது.. இது பற்றி சிந்தித்த இடையர்கள், ஒரு நாள், பால் குடம் கொண்டு வரும் போது, நினைவாக, அந்தக் குறிப்பிட்ட கல் இடறும் முன்பே, மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை வெட்டினர். பீறிட்டடித்தது குருதி வெள்ளம்!.. அந்த இடம் முழுவதும் செந்நிறக் காடாகியது!..இது தெய்வ சக்தியின் இருப்பிடம் என்பதை உணர்ந்தனர். கள்ளர் குலத்தை சேர்ந்த அம்பலக்காரரான மலையரசன் என்பவர், செய்தியறிந்து, அந்த இடத்திலிருந்து கல்லை, முழுவதுமாக வெளியே எடுக்க வைத்தார்.

அப்போது தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவரின் கடப்பாரையின் நுனி கண்ணில் பட்டு ரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியை தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது.

அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், "கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' என போற்றப்பட்டது. எடுத்த அம்பாள் சிலையை இடையர் குல மக்கள் வடக்கு நோக்கி கொண்டு வந்தனர். வரும் வழியில் நாயன்மார்குளம் கீழ்புறத்தில் சிலையை கொண்டு செல்ல முடியாமல் கிழக்கு புறமாக கீழே வைத்து விட்டனர். வடக்கு நோக்கி செல்வதாக கனவில் தோன்றி களியாட்டம் நடத்தி பலி கொடுக்குமாறு அம்பாள் கூறினாள்.

உடனடியாக களியாட்டம் கூட்டி 30 நாள் திருவிழா நடத்தி பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என 2 கட்டடங்கள் தனித் தனியாக கட்டினர். அதில் பெண் வீட்டார் கள்ளர்கள் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கணக்குப்பிள்ளை வகையறாக்கள் என்றும் கூறப்பட்டது. காலை, மாலை இருவேளையிலும் பூஜைகள் நடத்தி நாயன்மார்குலத்தில் அம்பாளுக்கு ஆரயித்து 500 ஆடுகள் பலிகொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் வெட்டப்பட்ட ஆயிரத்து 499 ஆடுகளிலிருந்து ஒருதுளி ரத்தம் கூட சிந்தவில்லை. ஆயிரத்து 500 வது ஆட்டை வெட்டும் போது தான் ரத்தம் வந்தது. அப்போது தான் அம்பாளும் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

அங்கிருந்து தொடர்ந்து கொண்டு வரப்பட்ட அம்பாள் சிலை விரகண்டான் உரணி தென்புறத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் தெற்குப் புறமாக வைக்கப்பட்டது. மறுநாள் கோயிலில் சென்று பார்த்தபோது அம்பாள் வடக்கு புறமாக திரும்பி இருந்தாள். அதன்படியே அம்பாளை தூக்கி வந்தனர். தற்போது கருவறை இருக்கும் இடத்தில் அம்பாளை வைத்து பூஜிக்குமாறு அசரீரி ஒலித்தது. அதன்படி அம்பாள் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வளையர் குல மக்கள் மூலம் பூஜைகள் செய்யப்பட்டது.

சில நாட்கள் கழித்து வளையர்களின் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பூஜை செய்ய உகந்தவன், உவச்சர் இனத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதியில் இருப்பதாக கூறி அவர்களை அழைத்து வந்து பூஜை செய்யுமாறு உத்தரவிட்டாள். அன்று முதல் இன்று வரை அவர்களே அம்பாளுக்கு பூஜை செய்து வருகின்றனர். காளியாட்டம் எனும் கவின்மிகு திருவிழா கண்ணுடைய நாயகி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான விழாவாகும். இக்களியாட்டம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கும்பகோணம் மகாமக திருவிழா போன்று இத்திருவிழாவும் நடத்து வருகிறது.

இவ்விழாவிற்காக நாட்டரசன் கோட்டை பழைய வளைவில் களியாட்ட கண்ணாத்தாள் தெருவில் இரு களியாட்ட வீடுகள் இருக்கின்றன. அவை
கள்ளவீட்டு களியாட்ட வீடு என்றும் கணக்க வீட்டு களியாட்ட வீடு என்றும் கூறப்படும்.

காரணக்காரர்களாகிய கள்ளரையும் கணக்கரையும் கொண்டு இவ்விழாவை நடத்துகின்றனர்.
கள்ளரில் 5 பிரிவினர் இருப்பதால் அவர்கள் ஐந்து காரணக்காரர்கள் என பெறுவர்.