சனி, 3 பிப்ரவரி, 2024

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி அள்ளி கொடுத்த ஆயி பூரணம்மாள்




கள்ளர் மரபில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியத் தேவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

படிப்பு எவ்வளவு முக்கியம்.. என்பதை தாய்மை தான் உளப்பூர்வமாக உணரும்.. நம்மிடையே மாசற்ற மனிதருள் மாணிக்கங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் இப்படிப்பட்ட உள்ளம் கிடைப்பது அரிதினும் அரிது.


நினைவில் வாழும் ஜனனிக்கும், பூரணத்தம்மாளுக்கும் பேரன்புகள்❤️🙏