செவ்வாய், 28 மார்ச், 2023

கரிகாலனின் மகன் உறந்தை சோழன் பேரரசன் நலங்"கிள்ளி"



கரிகாலனின் மகன் உறந்தை சோழன் பேரரசன் நலங்"கிள்ளி"
(உறந்தை - உறையூர் –– கோழியூர் – உரபுரம்)


உறந்தை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1.6 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது உறைந்தை, உறையூர், கோழி, கோழியூர், வாரணம், உரபுரம் முதலான பெயர்களாலும் வழங்கப்பட்டது. முற்காலச் சோழர்கள் வலிமையிழந்து சோழ நாடும் வீழ்ச்சியுற்ற பின்னரும், சோழச் சிற்றரசர்கள் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்தினர்



கி. பி. 81ல், எழுதப்பெற்ற “பெரிபுளுஸ் மாரிஸ் எரித்ரியா' என்ற நூலின் ஆசிரியர், உறையூரை, அர்கரு' என்றும் குறிப்பிட்டுள்ளார் (சமஸ்கிருத "உரகபுரா" என்பதன் திரிபான "அர்கரு" (Argaru) - உறையூர்). அவர்க்கு அரை நூற்றாண்டு கழித்து வாழ்ந்த தாலமி' என்பார், புகாரை கபெரீஸ்' என்றும், உறையூரை ‘ஒர்துரா ரெகியா சோரகடி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உரக என்பது நாகர்களை குறிக்கும். சோழர்கள் வெளியிட்ட நாணயங்களில் "உரக " என்று இருப்பதும். கள்ளர், மறவர் நாகர் வழி வந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே.

"கிள்ளி” மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர். புறநானூறு கிள்ளி என்னும் பட்டம் கொண்ட ஏழு சோழ மன்னர்களை குறிப்பிடுகிறது. இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி, முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, நெடுங்கிள்ளி, நெடுமுடிக்கிள்ளி.


இன்றும் கள்ளர்களில் கிள்ளியார், கிள்ளிராயர், கிள்ளிகொண்டார், கிள்ளியாளி, கிளியிநார், கிள்ளியாண்டார், கண்டர்கிள்ளி பட்டம் உடையவர்களும் (திருச்சிஉய்யக்கொண்டான் திருமலை, துளசிமாக நாடு பகுதியிலும் கிள்ளிக்கொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும் கிளிகொண்டார் என்ற பட்டம் உடைய கள்ளர்களும் உள்ளனர். )

மேலும் உறையூரை குறிக்கும் (கோழியூர்) : கோழியர், கோழிராயர் பட்டம் உடையவர்களும்,

உறையூரை குறிக்கும் (உரபுரம், உறந்தை) : உரந்தையாளர், உறந்தைகொண்டார் உறந்தைப்பிரியர், உறந்தையர், உறந்தையாண்டார், உறந்தையாளியார். உறந்தையாட்சியார், உறந்தையுடையார். உறந்தைராயர் பட்டம் உடையவர்களும் சோழமண்டலத்தில் இன்றும் வாழ்கின்றனர்.

தஞ்சைக்கருகில் உறந்தைராயன் குடிக்காடு என்னும் ஊரில் உறந்தைராயர் பட்டம் உடைய கள்ளர்களே வாழ்கின்றனர்.

இப்பட்டங்கள் சங்க காலத்தவை என்பதும் புலனாகிறது. வெள்ளாற்றின் கரையோர கிளிமங்கலம் எனும் கிள்ளிமங்கலம் சிவ தலத்தையும் உருவாக்கியவர்கள் சோழர்களே.

நமக்குக் கிடைத்துள்ள முதல் சான்றான சங்க இலக்கியத்தில் ஊறந்தை என்னும் சொல்லாச்சியே காணப்படுகின்றது, அதோடு அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் பட்டப்பெயர்களோடு உறந்தை என்னும் பெயரே வருவதால் முதலில் உறந்தை என்று வழங்கப்பட்டுப் பின்னால் உறையூர் என்னும் பெயர் வழங்கப்பட்டது.

உறந்தை சோழர்க்குரியதாகவும், வளமையாகவும், செல்வச் சிறப்புடன் திகழ்ந்ததால் மக்கள் அதனை விட்டு நீங்க விருப்பம் கொள்ளதவர்களாகவும் இருந்தனர்,

கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்

காவிரிப் படப்பை உறந்தை அன்ன

பொன்னுடை நெடுநகர்(அகம்.385)

என அகநானூறும், நல்ல புகழினையும் தேரினையும் உடைய சோழனது உறந்தை தன்பால் வாழ்வோர் விட்டு நீங்காமைக்குக் காரணமான சிறப்பினை யுடையது என (சிறுபாணற்றுப்படை82,83) கூறுகின்ற உறந்தை நகரினைத் கரிகாலன் காடுகளை வெட்டியழித்து நாடாகச் செய்து களங்கள் அழித்து பல்வேறு வளங்களையும் பெருகச்செய்து பெரியநிலைகள் பொருந்திய மாடங்களை அமைத்து விரிவுறச் செய்தான்.

சோழன் நலங்கிள்ளி கரிகாலனின் மகன். இவன் பலவகைப் படைகளைப் பெற்றிருந்தான். பெரியதொரு நாட்டைப் பகைவர் அஞ்ச ஆண்டுவந்தான் என்றே புலவர் கூறியுள்ளனர். இவனைப் பற்றிப் 10 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவனால் பாராட்டப் பெற்ற சங்கப்புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலந்துார் கிழார் என்பவர்கள். இப்புலவர் பாடல்களால் இவன் வரலாறு விளங்குகிறது.

நலங்கிள்ளி பட்டம் பெற்றவுடன் தாயத்தார்க்குள் பகைமை மூண்டது. நெடுங்கிள்ளி என்பவன் ஆவூரில் இருந்த சோழ அரச மரபினன். அவன், நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தில் முடி கவித்துக் கொண்டு சோழப் பேரரசன் ஆனதும், உறையூர்க்கு ஒடி, அதனைத் தனதாக்கிக் கொண்டான்.

நலங்கிள்ளி வஞ்சினம் உரைத்து நெடுங்கிள்ளியது ஆவூர்க் கோட்டையை முற்றுகை இட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே அமைதியாக இருந்து வந்தான்; வெளியே நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். கோட்டைக்கு வெளியே இருந்த நாட்டுப் புறங்கள் அல்லலுற்றன; போரால் துன்புற்றன.

கோவூர் கிழார் என்னும் புலவர் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைப் பார்த்து,. “நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன; உருமேறு போல முழங்குகின்றன. உள் பகுதியில் உள்ள குழந்தைகள் பாலின்றி அழுகின்றனர்; மகளிர் பூவற்றவறிய தலையை முடிக்கின்றனர். (மகளிர் பலர் வீரர் இறத்தலால் கைம்பெண்கள் ஆயினர்; இல்லற வாழ்க்கையர் நின்னை நோக்கி ‘ஒலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ இவற்றைக் கவனியாமலும் இவற்றிற்கு நாணாமலும் இனிதாக இங்கு (கோட்டைக்குள்) இருத்தல் இனியதன்று. கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருத்தல் நாணமுடைய செயலாகும்” என்று உறைக்க உரைத்தார்.

நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை விட்டு ஓடி உறையூர்க் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான். நலங்கிள்ளி அவனை விடாது பின்தொடர்ந்து சென்று உறையூரை முற்றுகையிட்டிருந்தான்.

உறையூர் முற்றுகை நலங்கிள்ளிக்கே வெற்றி அளித்ததென்பது தெரிகிறது. நலங்கிள்ளி உறையூரை ஆண்டுவந்தான், நெடுங்கிள்ளி நலங்கிள்ளியுடன் போரிட ஆற்றாது, பலவாறு முயன்று, இறுதியில் ‘காரியாறு’ என்ற இடத்தில் (போரிட்டு) இறந்தான் என்பது தெரிகிறது. அதனால் அவன் ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனப்பட்டான்.

நலங்கிள்ளி தன் ஆட்சிக் காலத்தில் பாண்டியருடன் போரிட்டான் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டில் அரண் மிக்க வலிய கோட்டைகள் ஏழு இருந்தன. நலங்கிள்ளி அவற்றைக் கைப்பற்றி, அவற்றில் தன் புலிக் குறியைப் பொறித்தான்.

இவனிடம் சிறந்த கடற்படை இருந்தது: குதிரைப் படை இருந்தது, இவன் தேர்மீது செல்லும் பழக்கம் உடையவன். இவன் காலாட்படைகள் மூவகைப்படும். துரசிப்படை, இடையணிப்படை, இறுதியணிப்படை என்பன. அவை போருக்குப் போகும் பொழுது முதற் படை பனைநுங்கைத் தின்னும். இடையணிப்படை, பனம் பழத்தின் கனியை நுகரும்; இறுதியணிப்படை சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்னும், அஃதாவது, தூசிப்படை முதலிலே அனுப்பப்படும்; அதுவே செய்வினையை முடித்துவிடும். தவறின் பிறகுதான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நுங்கு பழமாகும் காலம் ஆகும். இரண்டாம் படையும் தவறுமாயின் ஈற்றணிப்படை பின்னரே அனுப்பப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காலமே பனம்பழம் பனங்கிழங்காக மாறும் காலம் என்ன அழகிய நுட்பமான கருத்து. இதனால் நலங்கிள்ளியின் போர்த்திறம் பற்றிய அறிவை நன்கறியலாம்.

இவன் கடற்படை வைத்திருந்தான் என்பதாலும் எப்பொழுதும் போர்க்களமே இடமாகக் கொண்டவன் என்பதாலும் இவன் பேரரசன் என்பதும், பகைவரை அடக்குதலிலே கண்ணும் கருத்துமாக இருந்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன.

இவன் புலவர் பெருமக்களைப் பாராட்டி ஊக்கிய வள்ளல்; பாணர், கூத்தர், விறலியர் முதலியோரையும் பாதுகாத்து, அவர் வாயிலாக இசைத் தமிழையும், நாடகத் தமிழையும் நலனுற வளர்த்த தமிழ்ப் பெருமகன் ஆவன்.

‘கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட, எழுதிய, அழகு பொருந்திய அல்லிப்பாவை ‘அல்லியம்’ என்னும் கூத்தை ஆடும்’[19] ..... இதனால், ஒவியக்கலை சோணாட்டில் இருந்து வந்தமை அறியலாம், கூத்து வகைகள் பல இருந்தன; அவற்றில் அல்லியம் என்பது ஒன்று.

‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும்’ என்பதனால், நலங்கிள்ளி அரசியல் பொறுப்பை அழுத்தமாக உணர்ந்த செங்கோல் அரசன் ஆவான்.

உறையூரில் கள்ளர் வாழ்ந்ததற்கான சான்றுகள் 1100 ஆண்டுகளுக்கு முந்திய கல்வெட்டுகள் மூலமும்  கிடைக்கிறது. திருச்சியில் விசங்கி நாடு, சூரியூர் நாடு, கூத்தாப்பல் நாடு என மூன்று கள்ளர் நாடுகள் உள்ளன.

பராந்தாக சோழனின்  3 ஆம் ஆட்சியாண்டின் (கிபி 910) கல்வெட்டு, உறையூரின் புலிவலத்து பகுதியை சேர்ந்த அரங்கன் கள்வன் 35 கி தங்கத்தை குடுமியான்மலை சுவாமிக்கு அளித்துள்ளார். இதே கள்வன் கிபி 927 ல்,  35 கி தங்கத்தை மீண்டும்,  தானமாக அளித்துள்ளார்.

சமணர்கள் மந்திர வலிமையினாலோ, தவ வலிமையினாலோ கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்று தக்கயாகப்பரணி கூறுகிறது. அபிதானசிந்தாமணி ஆசிரியர் மண்மாரியால் உறையூர் முழுகியது என்று கூறுகின்றார்.

பாண்டியர் உறையூர்ப் பகுதியில் மேலாண்மை செலுத்தினர் என்பதை நெடுஞ்சடையான் பாண்டியனின் (கி.பி. 768 – 815) வேள்விக்குடிச் செப்பேடு சுட்டுகின்றது. உதயேந்திரச் செப்பேடு பராந்தகச் சோழனின் தலைநகரம் உறையூர் என்று செப்புகிறது ( Chola King, Parantaka Deva Parkesari Varman who ruled between 907 and 955 CE.). இதனால் உறையூர் பாண்டியரிடமிருந்து மீண்டும் சோழர் வசம் வந்தது புலனாகின்றது. பிற்காலப் பாண்டியர் வலுவடைந்த பொழுது, மீண்டும் உறையூர் பாண்டியர் கைக்கு மாறியது. முதலாம் மாறவர்மன் சுந்த பாண்டியன்(கி.பி 1216 – 1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்று திருக்கோயிலூர் கல்வெட்டு கூறுகின்றது.

பாண்டிய நாட்டின் மீது கி.பி 1310 – இல் படையெடுத்த அலாவுதீன் கில்சியின் படைத்தலைவனான மாலிக்கப்பூர் உறையூரையும் அழித்தான். இவ்வாறு பகைவர்களால் உறையூர் அவ்வப்போது அழிக்கப்பட்டது. இதற்கு முன்பே கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியின் வெள்ளப்பெருக்கால் அல்லூரும், உறையூரும் அழிந்தன என்பதை அல்லூர்க் கல்வெட்டு அறிவிக்கின்றது. அதனை உறையூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வும் உறுதி செய்கின்றது.

விசயநகர வேந்தனான இரண்டாம் அரி அரசனின் ஆட்சி காலத்தில்( கி.பி. 1377 – 1404) உறையூரில் விசய நகரத்தார் ஆட்சியைக் கண்டது. அதன் பிறகு உறையூரைப் பற்றியச் செய்திகளை அறியமுடியவில்லை.

சமண பள்ளிகள் உறையூர் பகுதியில் நிலைகொண்ட பிறகு, உறையூரின் புகழ் மங்கத் தொடங்கியது.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்