புதன், 15 ஆகஸ்ட், 2018

கள்ளர்களின் சீனத்தரையன் பட்டமும் தஞ்சையில் சாமந்தனாராயண் தொண்டைமானார் வைத்த அகரமும். (பொ.ஆ 1308 - 1344)

சீனத்தரையன்

குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளூர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெற்றுள்ளனர். அரையன் பட்டம் பெற்றோர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஆவணக் கையெத்ழுதிட்டோராக இருப்பதை அறியமுடிகிறது.அரையன் என்பதற்கு அரசமரபில் தோன்றியவனாகவோ அல்லது அரசியல் பெருதலைவனாகவோ அகரமுதலி (1987: 5) விளக்கம் தருகிறது.சீனத்தரையரென்ற பட்டம் வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கோ, அல்லது அந்த பகுதி வெற்றியோடோ தொடர்புடையதாக இருக்கலாம். இன்றும் கள்ளர்களில் மட்டும் இந்த பட்டம் தங்கியவர்கள் உள்ளனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் வாழுகின்றனர்.சீனத்தரையன் என்ற சொல் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்


சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் செய்து கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மதுரை பேரையூர் மேலத்திருமாணிக்கம் சிவன் கோயில் அரசு அலுவலர்கள் பட்டங்களாக குறிக்கப்பட்டுள்ள பல பட்டப்பெயர்கள்விழுப்பாதராயர், 

தமிழுதரையர், 

புள்ளவராயர் (புலவராயர்), 

வயிராயர் (வயிராத ராயன்), 

பாண்டிராயர், 

சங்கரதேவர், 

வாணரையர் (வாணவதரையர்)போன்ற பட்ட பெயர்களும்,

சீனத்தரையன் பட்டமும்

கள்ளர்களில் இன்றும் காணப்படுகிறது. மதுரை, மேலத்திருமாணிக்கம் பகுதியில் இன்றும் கள்ளர்கள் வாழ்கின்றனர். இங்கு அரசு கள்ளர் பள்ளியும் உள்ளது.


மூன்றாம் இராசராசன் சோழன் காலத்தில்

மூன்றாம் குலோத்துங்கன் இறந்ததும், அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தான். பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சோழ நாட்டைக் கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்.

கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான், அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கினான். சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனைப் பழையாறைக்கே அழைத்துவரச் செய்து அவனுக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.


சோழ நாட்டின் மீது படையெடுத்த கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான், இதனை 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. அதில் "கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன் இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு" சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


பாண்டிய மன்னன் வல்லபன் காலத்தில்

மூன்றாம் இராசராசன் அவன் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழன் தோல்வியால் பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344) என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.
தஞ்சை பெரிய கோயிலில் தென் புற நுழைவு வாயிலுக்கு கீழ்புறம் ஜகதி படையில், ஸ்ரீ வல்லபதேவ பாண்டிய மன்னனின் 35 ஆம் ஆண்டு கல்வெட்டு உள்ளது.அதிலுள்ள செய்தி பற்றி

கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள் ஆய்வில் கூறுவது:

சாமந்தனாராயண் தொண்டைமானார் தம் பெயரால், தஞ்சாவூரில் கிராமம் (அகரம் - இறையிலி ஊர் ) ஒன்றை அமைத்து, அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடுகிறார்.

அங்கே சாமந்தனாராயன விண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலையும் எழுப்புகிறார். 106 பாட்டர்களை குடியமர்த்துகிறார். 95 வேலி (ஒரு வேலி 20 ஏக்கர் ஆகலாம்) நிலத்தை இரு நிலக்கிழார்களிடம் இருந்து வாங்கி நிவந்தமாக அளிக்கிறார்.

நிலம் விற்ற ஒருவர் தென்னகங்கதேவன், இன்னொருவர் பெயர் சீனத்தரையர். இன்னும் நிலம் பங்கீடு, பயிர்கள், போன்ற தகவல்கள் இதில் நிறைய இருக்கின்றன.

தஞ்சவ்வூரில் இருந்து பூதலுருக்கு ஒரு சாலை கள்ளபெரம்பூர் வழியாக போகிறது. தஞ்சையில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில், களி மேடு தாண்டி உள்ள ஊர். சக்கர சாமந்தம். இதுதான் தஞ்சையில் தொண்டைமானார் வைத்த அகரம். எப்படி? அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம், கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி அகர சாமந்தம் ஆகி, இன்னும் கொஞ்சம் மாறி, சகர சாமந்தம் ஆகி, இப்பொழுது சக்கர சாமந்தம் ஆயிற்று.

இன்னும் கூட கொச்சை வழக்காக சக்கர சாமம் என்கிறனர். இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, தஞ்சை என்றால் தஞ்சை கோட்டை பகுதி மட்டும் அல்ல. அதற்குரிய நிலங்களையும் சேர்ந்தது தான் தஞ்சை. எனவே அந்நாளில் இந்த அகரம் உள்ள பகுதியும் தஞ்சைதான்.

சக்கர சாமந்தம் ஊருக்கு மேற்கில் தென்னகங்கதேவன் வாழ்ந்திருக்கிறார். அந்த ஊரும் அவர் பெயராலேயே தென்ன கங்க தேவன் குடி எனப்பட்டது. இந்த ஊர் இன்று தென்னங்குடி எனப்படுகிறது. மேலும் இந்த ஊரில் கள்ளர்களின் சோழங்க தேவர் (சோழ கங்க தேவர்) என்ற பட்ட பெயருடையவர்கள் பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.

அடுத்து,நிலம் வழங்கிய சீனத்தரையன் ஊர். தென்னன்குடியை அடுத்து சீராளூர் இருக்கிறது. இதுவும் நிலம் வழங்கியவர் பெயராலேயே சீனத்தரையனூர் என அழைக்கப்பட்டு, சீனானூர் ஆகி, இன்று சீராளூர் ஆயிற்று. இந்த ஊரிலும் கள்ளர்களின் சீனத்தரையர் என்ற பட்டப்பெயர் உள்ளவர்களும் இவ்வூரின் பூர்வீகக்குடிகளாக உள்ளார்கள்.

அகரம் சாமந்த நாராயண விண்ணகர் பெருமாள் கோயில் இன்று தஞ்சை கொண்டிராஜா பாளையத்தில் (மேல நரசிங்க பெருமாள்) உள்ளது. தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் இங்கு கொண்டு வந்து புது ஆலயத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. (சாமந்தான் குளம் பற்றி இன்னொரு பதிவு வரும்) சரபோஜி கல்வெட்டு உள்ளது.

சக்கர சாமந்தத்தில் செவ்வப்ப நாயக்கர் நலன் வேண்டி அவரது மகன் அச்சுதப்ப நயாக்கர் நிலதானம் வழங்கிய சூலக்கல், கல்வெட்டுடன் இருந்தது. அது இப்பொழுது தஞ்சையில் உள்ளது.

.


கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் அவர்கள் ஆய்வில் கூறுவது:

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையையும், உறையூரையும் முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன. சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் ( இன்றைய கொண்டிராஜ பாளையம்), சாமந்த நாராயண விண்ணகரம் என்ற யோக நரசிம்மப் பெருமாள் கோயிலையும், சாமந்த நாராயணன் குளம் (சாமந்தாங்குளம்) என்ற குளத்தையும் வெட்டி தஞ்சாவூரை மறுபடியும் ஏற்படுத்தினான்.

அப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். அது தொடர்ந்து புதிய தஞ்சை நகரம் மீண்டும் பொலிவு பெறலாயிற்று. சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாற்றுச் சிறப்புடைய கோடியம்மன் கோயிலும், அதில் இடம்பெற்றுள்ள இரண்டு யோகினிகளின் திருமேனிகளும் தஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் எனற பெயரில் இக்காளி கோயில் உள்ளது.

.

.ஆய்வாளர்கள் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் இருவரின் ஆய்வில் தஞ்சையில் உள்ள இடங்கள் மாறுபட்டாலும் சீனத்தரையர் , சோழ கங்க தேவர் என்ற பட்டம் உடைய கள்ளர்குடியினர் இன்றும் தஞ்சை மண்ணில் செல்வசெழிப்போடும் , அதிகாரத்தோடும் வாழ்கின்றனர் சாட்சியாக.

நன்றி:

உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்

உயர்திரு ஐயா. பாலசுப்ரமணியன் சோழகர்

உயர்திரு. பார்த்தி கத்திக்காரர்

சனி, 11 ஆகஸ்ட், 2018

தொண்டைமான் மன்னர்களின் குல தெய்வம் திருக்கோகர்ணத்தின் அரைக்காசு அம்மன் என்ற பிரகதாம்பாள்ஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான். அதிலும் குறிப்பாக தொண்டைமான் மன்னரின் நாட்டில் சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம். இந்த சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக இருப்பவள் திருக்கோகர்ணத்தின் அம்பாள் பிரகதாம்பாள். அருள்மழை பொழியும் இவளை எண்ணிய பிறகே எந்த ஒரு காரியத்தையும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் செய்வர்.

புதுக்கோட்டை மன்னர், தன்னையும் தன் குலத்தையும் தேசத்தையும் காக்கிற ஸ்ரீபிரகதாம்பாளின் திருவுருவத்தைப் பொறித்து, நாணயம் வடிப்பது என முடிவு செய்தார். அதன்படி, அம்மனின் திருவுருவத்துடன் நாணயம் வெளியானது


அந்நாளில் இந்த அன்னைக்கு நவராத்திரி விழாவினை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல் பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர்.

விரதமிருந்து இந்த அன்னையை புதுக்கோட்டை மக்கள் எல்லோரும் கொண்டாடுவர்.

ஒருமுறை புதுக்கோட்டை மன்னரின் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போய்விட்டது. அன்னையை வணங்கி தொலைந்து போன நகை திரும்ப கிடைக்குமாறு வேண்டினர். என்ன ஆச்சர்யம். தொலைந்த பொருள் உடனேயே கிடைத்தது. இதனால் மகிழ்ந்து போன அரச குடும்பத்தினர் இந்த அன்னைக்கு விசேஷ பூஜை செய்து மகிழ்ந்தனர். இந்தத் தகவல் எங்கும் பரவி, அன்றிலிருந்து இன்றுவரை அரைக்காசு அம்மன், 'தொலைந்து போன பொருட்களை தேடித்தரும் விசேஷ தேவியானார்.

மன்னர்கள், இந்த அன்னைக்கு பிரசாதமாக வெல்லத்தை வைத்து உண்பர். அதுவே இன்றுவரை விசேஷமாக உள்ளது. எலுமிச்சை மாலை அணிவித்து இவளை வணங்கினால் தொலைத்த பொருள் மட்டுமல்ல, நமக்கு வரவேண்டிய பொருளும்கூட எளிதாகக் கிட்டி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அரைக்காசு அம்மனுக்கு என்று தனிக்கோயில் எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், பல சக்தி ஆலயங்களில் இவள் தனிச் சந்நிதி கொண்டு அருள் செய்து வருகிறாள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை கொண்டது திருக்கோகர்ண ஆலயம். இந்த ஆலயத்தில் ஈசனோடு இருந்து அருள் செய்பவளே பிரகதாம்பாள். பிரகதாம்பாள்தான் மக்களால் அரைக்காசு அம்மனாக உருமாறி நமக்கு அருள்புரிந்து கொண்டு இருக்கிறாள். இவளின் உருவம் பொறித்த காசினை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ வளம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 500 வருடங்களுக்கு மேலாக மக்களால் விரும்பி வணங்கப்படும் இந்த தேவி, நம்பியவரைக் காப்பவள். நலன்கள் பல அளிப்பவள். வேண்டியதை அருள்வாள்.

மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான் வம்சத்தினா் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழா்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனா்.


பல்லவராயர்கள் வம்சத்தவரால் உருவாக்கப்பட்ட பிள்ளையார், பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர், மகாலெட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற திருவுருவங்களையும், வேறுபல சிற்பங்களையும் தூண்களில் புடைப்பு சிற்பங்களாய்க் காணலாம்.

எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம் திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடிப் பகுதியில் பரகேசரி முதலாம் ராஜேந்திரச் சோழன் காலக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

ராஜகோபுர வாயிலைக் கடந்தவுடன் ராயத் தொண்டைமான் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட சிற்ப மண்டபம் உள்ளது. இதன் விதானப் பகுதியில் பன்னிரண்டு ராசிகளும் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் சிற்ப மண்டபத்தை ராசி மண்டபம் எனவும் வழங்குவர். சிற்ப மண்டபம் ஓர் அருமையானகலைக் கருவூலமாய்த் திகழ்ந்திருக்க வேண்டும். இப்போது பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் அழகைக் கண்டு மனம் பறிகொடுக்க முடிகிறது.

வீரபத்திரர், ரதி மன்மதன், அருச்சுனன், காளி நடனம், ஊர்த்துவ தாண்டவர், கர்ணன், இராமர், யாளிகள், குதிரை வீரர்கள் - என்று தூண்களில் அணிவகுக்கும் கலையழகை நிதானமாகக் கண்டு மகிழ வேண்டும். சிற்ப மண்டபத்தின் இடப்புறத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இங்குதான் நவராத்திரி விழாவின் போது பத்து நாட்களும், அம்பிகைக்கு விதம் விதமான அவதார ஒப்பனைகள் செய்து வைத்திருப்பார்கள். மண்டபத்தின் இருபுறமும் பொம்மைக் கொலுவும் அழகாக இடம் பெறும். மகிஷாசுர வதம் போன்ற அச்சுறுத்தும் ஒப்பனைகளிலும் அம்பிகை காட்சியளிப்பார். இந்த மண்டபத்தில் தான் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருக்கல்யாணம் நிகழும்.


சிற்ப மண்டபத்தின் வலப்புறத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இதுவும் பதினாறு கால்கள் கொண்ட அமைப்பு. புடைப்புச் சிற்பங்களாக நிறையக் கலை வடிவங்களைக் காணலாம். திருக்கல்யாணத்தன்று இறைவனும் இறைவியும் இங்கு ஊஞ்சலில் எழுந்தருளுவார்கள். சிற்ப மண்டபத்தைக் கடந்து நேரே நடந்தால் பிரதான மண்டபத்தை அடையலாம். இடப்புறம் திரும்பினால் நீளமான மேடையில் அறுபத்து மூவர் திருமேனிகள் அணிவகுக்கின்றன. அங்கு திரும்பாமல் சற்று நேரே வந்து இடப்புறம் திரும்பினால் அருள்மிகு பிரகதாம்பாளின் கருவறைக்குள் நுழையலாம். அம்பிகையின் நின்ற திருக்கோலம், அரக்கர்களின் விதம் விதமான ஒப்பனைகளால் பக்தர்களைக் கட்டி இழுக்கும். குறிப்பாக சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசங்கள், உள்ளங்கையில் மரகதக் கற்கள் உட்படப் பூரண ஒப்பனைகளில் அம்பிகையை தரிசிப்பது வாழ்வின் மிகப் பெரும் பேறு.


அம்மன் சந்நிதிக்கு நேரே கையில் விளக்கேந்தி நிற்கும் ஒரு பெண்ணின் திருமேனி கொள்ளை அழகுடன் உலோக வார்ப்பில் நின்று கொண்டிருக்கிறது. பாவை விளக்கு என்று வழங்கப்படும் இச்சிற்ப சௌந்தர்யம் வெகு நுட்பமான அணிகலன்கள் ஆடை வேலைப்பாடுகளுடன் உயிர் வடிவமாய்க் காட்சி தருகிறது. மேற்குபுறம் படியேறினால் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதி. அம்பிகை தனிக் கருவறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மன்னர் ஒருவர் கடற்பணயம் மேற்கொண்டிருந்த போது, கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அப்போது சின்னஞ்சிறு பெண் ஒருத்தி உறக்கத்திலிருந்த மன்னரை தூங்குகிறாயே எழுந்திரு... கப்பலில் தீப் பற்றிவிட்டது என்ற எச்சரித்ததாகவும் சொல்வார்கள். தம்மை உறக்கம் கலைத்துக் காப்பாற்றிய சின்னஞ்சிறு பெண் அன்னை பிரகதாம்பாளே என்று உணர்ந்தார் மன்னர்.

இந்த நிகழ்வின் நன்றி வெளிப்பாடாக அம்மன் சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதற்க வெள்ளியாலான கூண்டு ஒன்றும் வைத்து மூடியிருக்கிறார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் பழைமையானது இந்த நந்தா விளக்கு. வெள்ளிக் கூண்டின் மேல் பகுதியில் 1912.... மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்... என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

அம்பிகையின் மீது இத்தனை ஈடுபாடும் பக்தியும் அந்த மாமன்னர், தம்முடைய வாழ்வின் பிற்பகுதியில் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட முடியாமல் போனது ஒரு சோகம். இவர் மோலிஃபிங்க் என்னும் ஆஸ்திரேலியப் பெண்மணியை காதலித்து மணந்து கொண்டதே காரணமாயிருக்கலாம்.

அன்னை பிரகதாம்பாள் கருவறைக்க முன்னால் தென்புறம் விநாயகரும், வடபுறத்தில் பள்ளியறையும் உள்ளன. பள்ளியறைத் திருமேனிகள் சிறிய உருவங்களாயினும் கொள்ளை அழகோடு விளங்குகின்றன. அன்னையின் எதிரில் வெண்கலத்தாலான நந்தி இருப்பது புதுமையும் அரிதான சிற்பச் சிறப்பும் உடையது. வெள்ளிக் கிழமை, சிறப்பான நாட்களில் முழுமையான அலங்கார அணிமணிகளோடு அம்பிகையின் அருட்தோற்றம் பேசும் திருமேனியாகக் காட்சி தரும். சந்நிதியின் எதிரில் புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் உலோகத் தகடுகள் போர்த்தப்பட்ட அழகான கொடி மரமும், அதற்கு அப்பால் தலவிருட்சம் உள்ளன.கோயிலின் கிழக்கே மங்களதீர்த்தம், மங்கள தீர்த்த மண்டபம், குதிரை வீரர்களின் சிற்பத் திருமேனிகள் எல்லாவற்றையும் காணலாம். மங்கள தீர்த்தத்துக்குப் போகும் வழியைக் கீழைவாசல் என்பார்கள். இந்த மண்டபம் பாண்டிய மன்னர்களாலும், தொண்டைமான் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் தென் பகுதியில் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதிக்கு எதிரே, கோபுரத்தோடு கூடிய நுழைவாயில் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

மங்களாம்பிகை சந்நிதிக்கு கீழே, விசாலமான மண்டபம் ஒன்ற அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. இது குலசேகர பாண்டியன் காலத்துத் திருப்பணி என்கிறார்கள். புதுக்கோட்டை பகுதியை தொண்டைமான்களுக்கு முன்னால் ஆண்ட பல்லவராயர்களின் சிலைகள் மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன. தவிர யாளிகள், துர்க்கை போன்ற சிற்பத் திருமேனிகளையும் காணலாம்.

இம்மண்டபத்தின் மேற்குக் கோடியில் இத்தலத்தின் ஆதிமூர்த்தியாக விளங்கியிருக்கக் கூடிய வகுளவனேசுவரரின் லிங்கத் திருமேனி உள்ளது. பசு வடிவில் வந்து பிறப்பெடுத்த காமதேனுவின் குளம்புத்தடம் இத்திருமேனியில் பதிந்திருப்பதாய்ச் சொல்வார்கள். எதிரே நந்தி ஒன்று, செவ்வக வடிவிலான தொட்டிக்குள் அமைக்கப் பட்டிருக்கிறது. வறட்சிக் காலங்களில், இந்த நந்தி மூழ்கும்படி தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை உண்டு.

இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது. நித்யோசவம் என்றால் தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம். சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20 நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும்.

நன்றி
பாரதி இலக்கியப் பயிலகம்
திரு. செல்வமணி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளல் துரைராசா இராசகண்டியர்


இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன்.

இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும்.

உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.

இத்தகைய பெருமை வாய்ந்த இராசகண்டியன் குடும்பத்தில் இலங்கையின் கண்டி மாநகரின் வள்ளலும், முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கிய துரைராசா இராசகண்டியர் பிறந்தார்.


தஞ்சை மாநில சிராங்குடி சிதம்பரம் இராசகண்டியர், அஞ்சலை அம்மாள் தம்பதியினருக்கு 5 செப்டெம்பர் 1905 இல் துரைராசர் பிறந்தார். இக் குடும்பம் மிகுந்த செல்வாக்குடன் அன்நாள் ஒருங்கினைந்த மலாயா,பர்மா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் பல தோட்டங்களையும், பண்ணைகளையும் கொண்ட குடும்பமாகும். திரு துரைராசர் இளமையில் தனது கல்வியை இலங்கையிலும், சட்ட மேற்படிப்பினை இங்கிலாந்து நாட்டிலும் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

சிதம்பரம் இராசகண்டியர் துரைராசா அவர்களின் மூதாதரையர்கள்.

01. சுடலைமலை இராசகண்டியர்(1650) - பேச்சியம்மாள் வன்னியர்

02. அப்பாவு இராசகண்டியர் (1665) - அழகாயீ அங்குராயர்

03. பெத்தாண்டி இராசகண்டியர் (1682) - செவந்தி சாளுவர்

04. மலையாண்டி இராசகண்டியர் (1701) - கருப்பாயம்மாள் கிழாமுடையார்

05. முத்தாண்டி இராசகண்டியர் (1721) - அகிலாயீ காடுவெட்டியார்

06. சின்னத்தம்பி இராசகண்டியர் (1743) - வள்ளி சாளுவர்

07. அய்யாக்கன்னு இராசகண்டியர் ( 1760)- முத்தாயம்மாள் வாண்டையார்

08. மருதாண்டி இராசகண்டியர் (1780) - அழகியம்மாள் அங்குராயர்

09. சந்தனம் இராசகண்டியர் 1803) - வெள்ளையம்மாள் காலிங்கராயர்

10. பெத்தையா இராசகண்டியர்(1820) - மீனாச்சி விஜயதேவர்

11. தொப்பையா இராசகண்டியர் (1841) - இருளாயீ ராசபிரியர்

12. வடமலை இராசகண்டியர் (1857) - காமாச்சி தெங்கொண்டார்

13. சிதம்பரம் இராசகண்டியர் (1875) - அஞ்சலையம்மாள் தஞ்சிராயர்

14. துரைராஜா இராசகண்டியர் (5/09/1905)- சம்பூரனத்தம்மாள் கருப்பூண்டார்

முதன் முதலில் அயல் நாடுகளில் கள்ளர் மகாசபையை உருவாக்கியவரும் இவரே. 1942ல் கள்ளர் மகா சபையை உருவாக்கி இறப்பு வரை நிர்வகித்த பெருமை இவரை சாரும். கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 1958ல் கள்ளர் மகாசபை 903 தஞ்சை கள்ளர்களை அங்கத்தினர்களாக கொண்டு செயல்பட்டதாக இலங்கையில் கண்டி மாநகர அரசுப் பதிவகத்தில் பதிவாகியுள்ளது. 1967ம் ஆண்டு அறிக்கையின் படி கள்ளர் மகாசபை 1643 அங்கத்தினர்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கின்றது.

மேலும் 1942 முதல் 1967 வரை தொடர்ந்து 26 ஆண்டுகள்

திரு துரைராச கண்டியர் (கண்டி) தலைவராகவும்,

திரு சுப்பையா விஜயதேவர் (வத்துகாமம்) தொடர்ந்து 23ஆண்டுகள் செயளாளராகவும்,

கோவிந்தசாமி கங்கைநாட்டார் (கெங்காலை) 19 ஆண்டுகள் பொருளாளராகவும் செயல்புரிந்தமையும்,

திரு கோபால் ராஜாளியார்(அம்பிட்டி),

திரு வேதமுத்து தெங்கொண்டார் (கலகா),

திரு சௌமியமூர்த்தி தொண்டைமான்(ரம்பொடை),

ரத்தினம் கிளாமுடையார்(கொழும்பு),

ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை),

வேலு சாளுவர்(ப்ண்டாரவளை),

நாரயணசாமி தஞ்சைராயர்(உடுவரை)

போண்றோர் ஆயுல் கால செயல் உருப்பினர்களாக இருந்தமையயும் அரசுப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

திரு துரைராச கண்டியர் முற்போக்கு சிந்தனையாளராகவும் பல்வேறு உதவிகளையும் பல்வேறு மக்களுக்கு செய்தமையால் 1955ல் இலங்கை அர்சு இவருக்கு சமாதான நீதிமான் (ஜெ.பி.யு.எம்) என்ற கௌரவ பட்டத்தினை வழங்கியுள்ளது. இப்பட்டத்தினை பெற்ற முதல் தமிழர் இவராவார்.

இவர் இலங்கையில் இருப்பிடமாக கொண்ட மல்பானை என்னுமிடத்தில் முதல் கூட்டுரவு பண்டகசாலை மையத்தை 1956ல் உருவாக்கி பெருமை படைத்துள்ளார்.

கிருத்துவ மிஷனரி மூலம் தமில் மாணவர்கள் கல்வி பயில்வதற்காக ராஜவலை மெதடிஸ்ட் மிஷன் என்ற பெயரில் பள்ளி ஒன்றினையும் 1952ல் ஆரம்பித்து தந்து தனது சார்பாக 10 ஏக்கர் நிலத்தையும் பள்ளிக்கு வழங்கியுள்ளார்.

இப் பள்ளி தற்போது அரசுடமையாக்கப்பட்டு 1200 தமிழ் மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாக இருந்துவருகிறது. 1969ம் வருடம் வரையிலும் கண்டியரே பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் இப் பள்ளியில் செயல் பட்டுள்ளார்.

மல்பானை புத்த விகாரையில் தமிழ் தெய்வங்களுக்கு முருகன் மற்றும் அம்மன் கோவில்களையும் கட்டியுள்ளார்.

கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 14 கிணறுகளையும் அமைத்து குடிநீர் தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளார். மேலும் 1951 முதல் தனது இறப்பு வரை கதிர்காமத்தில் தெய்வாணை அம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில்,சந்தனமலை கோவில், கதிரைமலை கோவில், செல்வக்கதிர்காமக் கோவில் அனைத்திற்க்கும் அறங்காவலராகவும்,கண்டி பிள்ளையார் கோவில் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார்.

கதிர்காமத்தில் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 30 அறைகள், நூலகம், உணவு அளிக்கும் அண்ணதானகூடம் உற்பட்ட தெய்வானை அம்மன் மடத்தையும் கட்டி நிர்வகித்த பெருமையும் கொண்டார். இவரை கதிர்காமக் கண்டியர் என்றே பலரும் அழைப்பர்.

இலங்கையில் பெரும்பாலன கள்ளர் குல திருமணங்கள் இவர் தலைமையிலேயே நடந்துள்ளன. இவர் 24 டிசம்பர் மாதம் 1970ல் இயற்கை எய்தினார்.

புதன், 8 ஆகஸ்ட், 2018

"அக்கள் ராஜா" தலைகொண்ட கள்ளர் வீர "கச்சிராயன்"


நார்த்தாமலை / அக்கள் ராஜா / விசங்கி நாட்டு கள்ளர்கள் / கச்சிராயன்
கச்சி

கச்சி என்பது காஞ்சியின் மாற்றுப் பெயராகும். காஞ்சியை ஆண்டோர் தம்மை கச்சிராயன் என அழைத்துக் கொண்டனர் எனவும் தெரிகிறது. சோழர் கல்வெட்டுகளில் கச்சிராயன் என்ற பட்டமுடைய பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள திருநறுங்கொண்டை என்ற ஊரில் அமைந்துள்ள பார்சுவப் பெருமான் கோயிலுக்கு ஆளப்பிறந்தான் மோகன், வீரசேகர காடவராயர் கூடல் ஆளப்பிறந்தான் மோகன் கச்சிராயன் என்ற காடவராய மன்னர்கள் தான தருமங்களை செய்துள்ளனர்.

கச்சிராயன் என்னும் பட்டம் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் உரிய பட்டம் என்பது தெரிகின்றது.

தஞ்சை கச்சிராயன் மங்கலம் என்ற கச்சமங்கலம் மற்றும் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கச்சிராயன்பட்டி கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும்.

கச்சமங்கலம் பகுதியில் கச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். கச்சமங்கலம் பழமையான அணையிணை சோழ மன்னன் அழிசியின் மகனான சேந்தன் என்பவர் தான் உருவாக்கியுள்ளார்.

அழிசிசோழன், தஞ்சை ஆர்க்காடு தலைநகராக கொண்டவன். கள்ளர்களின் ஆக்காட்டுராயன், ஆக்காட்டியன் என்னும் பட்டம் இவனுடன் தொடர்பு உடையதே. ஆர்க்காடு பகுதியை கள்ளர் கூழாக்கி அம்பலகார் ஆட்சி செய்துள்ளார்.


நார்த்தாமலை:
பல்லவராயர்களின் பெருங்களூர் கோவிலின் தல வரலாற்றின்படி இந்த ஊர் மாமுனி நாரதர் பெயரால் 'நாரதர் மலை' என்று அழைக்கப்பட்டதாகவும், அப்பெயர் திரிந்து நார்த்தாமலை என்று மாறியதாகவும் நம்பப்படுகிறது. பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் மன்னர்கள் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (கி.பி 985-1014), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால் நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பாண்டியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. பாண்டியர்களுக்கு பிறகு நார்த்தாமலை மதுரையை ஆண்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மதுரை சுல்தான்கள் ஆட்சியின் கீழ் ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் இருந்திருக்கிறது. கி.பி 14 ம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராயன் தலைமையிலான விஜயநகரப் பேரரசின் தென்னக ஆக்கிரமிப்புக்குப் பிறகு நேரடியாக மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.அக்கள் ராஜா "வம்சத்தினர் : (ராஜூ)


16 ஆம் நூற்றாண்டில் ‘அக்கல் ராஜா’ என்ற விஜய நகர பிரதிநிதி (இவர் சத்திரிய ராஜாஎனப்படும் ராஜூ வகுப்பை சேர்த்தவர்) இராமேஸ்வரம் செல்லும்பொழுது தெலுங்குக் குல காலபுரம் என்ற நார்த்தாமலை பகுதியில் ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களை கட்டுப்படுத்துமாறு நாயக்கனால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களை வெற்றிகொண்டு நார்த்தாமலை கோட்டையில் தாங்கினார். பிறகு நார்த்தாமலை தெலுங்குபுரம் ஆனது.


பல்லவராய சீமை என்ற அந்த பகுதியின் பல்லவராயர் இளவரசியான 'அக்கச்சி' என்பவர், கச்சிராய பட்டம் உடைய கள்ளர் வீரனிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.

நார்த்தாமலையில் தங்கியிருந்த 'அக்கல் ராஜாவின்' தலையை வெட்டி மீண்டும் நார்த்தாமலை "தெலுங்குக் குல காலபுரம்" என்பதை நிருபித்தார்.

அக்கல் ராஜா கொல்லப்பட்ட பிறகு, அவரது ஏழு மனைவியரும் நார்த்தாமலைப் பகுதியின் ஓரிடமான 'நொச்சிக் கண்மாயில்' தீக்குளித்து இறந்து போனார்கள். இவர்களுடைய சந்ததியினர் இன்றுவரை ‘உப்பிலிக்குடி’ என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ‘உப்பிலிக்குடி ராஜா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

தொண்டைமான் படையில் சமகாலத்தில் "அக்கல் ராஜா" போர்ப்படை தளபதியாகவும், வீரராகவும் குறிக்கப்பட்டிருக்கிறார்.


விசங்கி நாட்டு கள்ளர்கள் : -


விசங்கி நாடு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, குன்னான்டார்கோவில், மற்றும் அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களில் பரவியுள்ளது. 

உட்நாடுகள்
1.வெசங்கிநாடு
2.துளசிம்மநாடு
3.செங்கலிநாடு
4.வடமலைநாடு
5.தென்மலைநாடு


வீரபிரதாபன் மகாராயர் (விஜயநகர), கிபி 1537, குளத்தூர் தாலுகா (கீரனூர்), நார்த்தாமலை சீமை, வடசிறுவயல் நாடு படைபற்று கீரனூர் உடையவர்க்கு என விஜயநகர மன்னன், சிறுவயல் நாட்டு படைபற்றிலுள்ள ஆலயத்திற்கு அளித்த கொடைகளை பற்றி கூறுகிறது. இந்த வடசிறுவயல் நாடு புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்று. சிறுவயல் நாட்டு கள்ளர்கள், கீரனூர் மற்றும் நாரத்தாமலை, சிவன் கோயில்களில் கூடுவது வழக்கம். இந்த சிறுவயல் நாட்டு, விசெங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் பகுதியின் ஒரு பிரிவாகும்.வரி கேட்டு வரும் நாயக்கர்களின் தலையை வெட்டி அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்தனர்


நாயக்கர்கள் குளத்தூர் நமண தொண்டைமானிடம் மூர்க்கத்தனமான விசங்கி நாட்டுக்கள்ளர்களை கட்டுப்படுத்த உதவி கேட்டகின்றனர். நமணதொண்டைமான் நேரிடையாக அவர்களை களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்திருந்தார். புலியூரில் திருவிழாவிற்காக அவர்கள் அனைவரும் கூடியபொழுது அவர்களை வென்று கள்ளர்நாட்டு தலைவர்களையும் சிறைபிடிக்கிறார்.

அப்போது அவர்களின் தலையை வெட்டி சாக்கில் போடுகின்றார். ஒரு சாக்கில் "ஒன்பது" தலைகள் இடப்பட்டு அதனை விசங்கிநாட்டு கள்ளன் மூலமாகவே நாயக்கனிடம் ஓர் செய்தியோடு எடுத்துச்செல்ல வைக்கிறார்.

அந்த செய்தி என்னவெனில் பத்து தலைகள் உள்ளன இதனை "சுமந்துவருபவரையும் சேர்த்து". இதற்கெல்லாம் அஞ்சாத விசங்கிநாட்டுக்கள்ளர்கள் மீண்டும் நாயக்கர்களுக்கு கட்டுப்படாமல் உள்ளனர்.

இவர்களை தண்டிக்குமாறு நாவப்கள் மற்றும் தஞ்சை மராத்திய மன்னர்கள் விஜய ரகுநாத தொண்டைமானிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

கி.பி.1797ல் தொண்டைமான் 700 பேர் கொண்ட படையை ராய பல்லவராயன் தலைமையில் அனுப்புகிறார். 700 பேர் எண்ணிக்கை உடைய போர்படைகளை தொண்டைமான் அனுப்புகிறார் என்றால் விசங்கிநாட்டு கள்ளர்களின் வீரத்தை இதன்மூலம் நாம் அறியலாம்.

இன்றும் குன்னான்டார் கோவில் பகுதிகளில் நாட்டுப்புறபாடல் ஒன்று இசைக்கப்படுகிறது அது "வெங்கன்ன சேர்வைக்கார் வளந்தான்".

இதன்பின்பும் விசங்கிநாட்டுக்கள்ளர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தாங்களாகவே அமைதியாக வாழ முடிவெடுக்கிறார்கள்.உப்பிலியக்குடி சத்ரிய ராஜாக்கள் :

இன்று புதுக்கோட்டை மாவட்டம் உப்பிலியக்குடியில் வாழ்ந்து வரும் 6 வகையறாக்கள்:

1) மூப்பர் ராஜாக்கள்
2) மதிலைட்டி
3) ஜெகதாம்பி
4) அள்ளூர்
5) பிடதகோட்டி
6) ஆவலமந்தை


இவ்வூரில் உள்ள அடைக்கலப்பிச்சை அய்யனார் கோவில் கால்மண்டபம் சுற்றுச்சுவர், திண்ணை குப்புசாமி ராஜீ (சாளுவ வம்சம்) கட்டியது. இங்கு60 தலைக்கட்டு வாழ்நதுள்ளனர், இப்போது நிறைய பேர் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

"சத்ரிய ராஜாக்கள் " என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த 60 வது குடும்பத்தில் அனைவரும் ஏதோ ஒரு காவல்பணியில் (இராணுவம், காவல்துறை) பணிபுரிகிறார்கள்.

நார்த்தாமலை கோவிலிலும் மரியாதை வழங்கப்படுகிறது.

இவ்வூர் கோவிலில் கொத்தமலைப்பட்டி கள்ளர்களான கரடி, நாட்ரையர் பட்டந்தாங்கியோருக்கும் மரியாதை வழங்கப்படுகிறது.

இங்குள்ள விசாலாட்சி உடனுறை கைலாசநாதர் கோவில் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த உப்பிலிக்குடி ஊரில் பெத்தாச்சி பட்டம் தாங்கிய கள்ளர்கள் வசிக்கிறார்கள். பல்லவ நரசிம்ம வர்மன் வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையர் என்ற பட்டம் பூண்டவன். பெத்தாச்சியர் இதன் மருவிய பெயராக இருக்கலாம். போதரையர் பட்டம் உள்ள கள்ளர்களும் தனியாக தஞ்சையில் உள்ளனர். உப்பிலியக்குடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் குல தெய்வம் ஆகும்.


குறிப்பு :

கச்சிராயன் பட்டம் கள்ளர் மற்றும் சில சாதியினர்க்கு பட்டமாக உள்ளது. கச்சிராயன் பாளையம் கோனார், செட்டியார்களும் மற்றும் கச்சிராயன் நத்தம் பள்ளி சாதியினரும் உள்ளனர்.

நூல் ஆய்வு : திரு. சியாம் குமார் சம்பட்டியார்
கள ஆய்வு : திரு. பரத் குமார் கூழாக்கியார்

கள்ளர்களின் சீனத்தரையன் பட்டமும் தஞ்சையில் சாமந்தனாராயண் தொண்டைமானார் வைத்த அகரமும். (பொ.ஆ 1308 - 1344)

சீனத்தரையன் குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளூர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெ...